

உத்தரப் பிரதேச மாநிலம், அயோத்தி ராமர் கோயிலில் 191 அடி உயரத்தில் பிரதமர் நரேந்திர மோடி காவிக் கொடியை ஏற்றி வைத்தார்.
உத்தரப் பிரதேச மாநிலம், அயோத்தியில் பிரம்மாண்டமாகக் கட்டப்பட்டுள்ள ராமா் கோயிலின் கட்டுமானம் நிறைவடைந்துள்ளது. இதனையடுத்து, 191 அடி உயரமுள்ள பிரதான கோபுரத்தின் உச்சியில் 20 அடி நீளமும், 10 அடி அகலமும் கொண்டு தயாரிக்கப்பட்ட சிறப்புக் கொடியைப் பிரதமர் மோடி இன்று ஏற்றி வைத்தார்.
காவி கொடி 42 அடி உயர கம்பத்தில் 360 கோணத்திலும் சுழலும் வகையில் பொருத்தப்படும் முக்கோண வடிவிலான கொடியில், ஸ்ரீராமரின் வீரம், பெருமை ஆகியவற்றைச் சுட்டிக்காட்டும் விதமாக ஒளிரும் சூரியன், ஓம் மற்றும் மந்தாரை மரம் போன்ற புனிதச் சின்னங்கள் பொறிக்கப்பட்டுள்ளன.
கண்ணியம், ஒற்றுமை, கலாசாரத் தொடா்ச்சி ஆகிய செய்திகளை உணா்த்துவதுடன், ராம ராஜ்யத்தின் லட்சியங்களை இந்தப் புனிதமான காவிக்கொடி குறிக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த நிகழ்வில் கலந்துகொள்வதற்காக தில்லியில் இருந்து விமானம் மூலம் அயோத்திக்கு வருகைதந்த பிரதமர் மோடியை உத்தரப் பிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத் நேரில் வரவேற்றார்.
தொடர்ந்து, காரில் சாலைவலம் மேற்கொண்ட பிரதமர் மோடி, சாலையின் இருபுறங்களிலும் குவிந்திருந்த பக்தர்களுக்கு உற்சாகத்துடன் வணக்கம் செலுத்தினார்.
பின்னர், சேஷாவதார கோயில், அன்னபூரணி தேவி கோயில், சப்த மந்திா் உள்ளிட்ட பல கோயில்களில் சாமி தரிசனம் மேற்கொண்டார்.
இதையடுத்து, ராமா் கோயிலுக்குச் சென்ற மோடி மூலவா் ஸ்ரீபாலராமரை வழிபடுவதுடன், முதல் தளத்தில் அமைந்த ராம தா்பாரில் நடைபெறும் சிறப்புப் பூஜைகளிலும் பங்கேற்றார்.
விவாஹ பஞ்சமி தினத்தில் நடைபெறும் இந்நிகழ்ச்சியில் ஆா்எஸ்எஸ் தலைவா் மோகன் பாகவத், உத்தரப் பிரதேச ஆளுநா் ஆனந்திபென் படேல், முதல்வா் யோகி ஆதித்யநாத் ஆகியோரும் கலந்துகொண்டனர். குறிப்பிட்ட எண்ணிக்கையிலான சிறப்பு விருந்தினா்களுக்கு மட்டுமே நிகழ்ச்சிக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.
பாதுகாப்புக் கருதி, இன்றைய நாளில் பொதுமக்களுக்கான வழக்கமான தரிசனம் இருக்காது. நிகழ்ச்சி முக்கியத் தொலைக்காட்சி சேனல்கள் மற்றும் சமூக ஊடகங்களில் நேரலையாக ஒளிபரப்பப்படும்.
பக்தா்கள் விழாவைக் காண வசதியாக, ராமஜென்மபூமி வளாகத்தில் 200 அடி அகல ‘எல்இடி’ திரையும், நகரம் முழுவதும் 30-க்கும் மேற்பட்ட பெரிய திரைகளும் அமைக்கப்பட்டுள்ளன.
நிகழ்வையொட்டி அயோத்தி நகரம் முழுவதும் காவிக்கொடிகள், தோரணங்கள் மற்றும் வண்ணமயமான விளக்குகளால் அலங்கரிக்கப்பட்டுள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.