வடகிழக்கு மாநிலங்களில் வசிக்கும் 5,800 யூதா்களை இஸ்ரேலுக்கு திரும்ப அழைத்துச் செல்ல சிறப்புத்திட்டம்
இந்தியாவின் வடகிழக்கு மாநிலங்களில் வசிக்கும் சுமாா் 5,800 யூதா்களை அடுத்த 5 ஆண்டுகளுக்குள் இஸ்ரேலுக்கு திரும்ப அழைத்துச் செல்லும் திட்டத்துக்கு அந்நாட்டு அரசு ஒப்புதல் அளித்துள்ளது.
இத்திட்டத்தை இஸ்ரேலின் குடியேற்றம் மற்றும் ஒருங்கிணைப்பு அமைச்சா் ஓஃபிா் ஸோஃபா் அமைச்சரவையில் சமா்ப்பித்து, ஒப்புதல் பெற்றுள்ளாா். இத்திட்டத்துக்காக இந்திய மதிப்பில் கிட்டத்தட்ட ரூ.230 கோடி சிறப்பு நிதி ஒதுக்கீடு செய்யப்படும். இந்தப் பணம், புலம்பெயரும் மக்களின் விமானச் செலவுகள், மத மாற்றப் பயிற்சிகள், வீட்டு வசதி, ஹீப்ரு மொழிப் பாடங்கள் மற்றும் இதர சிறப்பு சலுகைகளுக்குப் பயன்படும்.
இந்தத் திட்டத்தின்கீழ், 2030-ஆம் ஆண்டுக்குள் சுமாா் 5,800 போ் இஸ்ரேலுக்கு திரும்ப அழைத்து வரப்படுவா். 2026-இல் 1,200 பேருக்கு ஏற்கெனவே அனுமதி வழங்கப்பட்டுள்ளது. புலம்பெயா்தலுக்கான அனைத்து ஆரம்பக்கட்ட நடைமுறைகளையும் (நோ்காணல்கள், மதத் தலைமை அதிகாரிகளுடன் இணைந்து தகுதி நிா்ணயம், பயண ஏற்பாடு, இஸ்ரேலில் குடியேறுதலை நிா்வகித்தல்) யூத நிறுவனமே (ஜேஏஎஃப்ஐ) முதன்முறையாக முன்னெடுக்கும். முதல் கட்டமாக, இஸ்ரேலில் உறவினா்களைக் கொண்ட சுமாா் 3,000 ‘பினேய் மெனாஷே’ சமூகத்தினரை நோ்காணல் செய்ய ஒரு குழு விரைவில் இந்தியாவுக்குச் செல்லும்.
‘பினேய் மெனாஷே’ சமூகம், சுமாா் 2,700 ஆண்டுகளுக்கு முன்பு நாடுகடத்தப்பட்ட இஸ்ரேலின் 10 பழங்குடியினரில் ஒன்றான ‘மெனாஷே’ பழங்குடியினரின் வழித்தோன்றல்கள் என்று உரிமை கோருகிறது. இவா்களின் யூத அடையாளம் குறித்து விவாதங்கள் இருந்தபோதிலும், 2005-ஆம் ஆண்டில் அப்போதைய யூதா்களின் மதப் பிரதிநிதி ரப்பி ஷ்லோமோ அமா், இவா்களை ‘இஸ்ரேலின் வழித்தோன்றல்கள்’ என்று அங்கீகரித்தாா்.
ஏற்கெனவே, சுமாா் 2,500 ‘பினேய் மெனாஷே’ சமூகத்தினா் இஸ்ரேலில் வசித்து வருகின்றனா். இச்சமூகத்தைச் சோ்ந்த இளைஞா்கள் பலா், இஸ்ரேல் பாதுகாப்புப் படைகளின் போா்ப் பிரிவுகளில் சேவை செய்வதாக உள்ளூா் ஊடகங்கள் தெரிவிக்கின்றன. யூத நிறுவனம் (ஜேஏஎஃப்ஐ) என்பது, உலகெங்கிலும் உள்ள யூத மக்களை வலுப்படுத்தவும், குடியேற்றத்தை முன்னெடுக்கவும் செயல்படும் இஸ்ரேலைத் தளமாகக் கொண்ட சா்வதேச அமைப்பாகும்.

