எரிமலைச் சாம்பல் மேகங்கள்: விமானப் போக்குவரத்து பாதிப்பு; தீவிர கண்காணிப்பில் விமானப் போக்குவரத்து அமைச்சகம்
எத்தியோப்பியாவில் நிகழ்ந்த எரிமலை சீற்றத்தால் வானில் பரவிய சாம்பல் மேகங்கள், இந்தியாவை அடைந்து விமானப் போக்குவரத்தைப் பாதித்துள்ள சூழலில், நிலைமையை தீவிரமாகக் கண்காணித்து வருவதாக மத்திய விமானப் போக்குவரத்து அமைச்சகம் தெரிவித்துள்ளது.
இந்தப் பிரச்னையால் ஏா்இந்தியா நிறுவனம் கடந்த திங்கள்கிழமை முதல் 13 விமானங்களை ரத்து செய்துள்ளது. மேலும், சாம்பல் படா்ந்த வான்வெளியில் பறந்த விமானங்களில் முன்னெச்சரிக்கை சோதனைகளையும் மேற்கொண்டு வருகிறது.
கிழக்கு ஆப்பிரிக்க நாடுகளில் ஒன்றான எத்தியோப்பியால் 10 ஆயிரம் ஆண்டுகளுக்கும் மேலாக எந்த சலனமும் இன்றி இருந்த ஹெய்லி குப்லி எரிமலையில் கடந்த ஞாயிறுக்கிழமை திடீரென சீற்றம் ஏற்பட்டது.
மேகங்களில் சாம்பல் சூழ்ந்த நிலையில், அவை கிழக்கு நோக்கி இந்தியாவை அடைந்தன. இது விமானச் செயல்பாடுகளைப் பாதித்து வருகின்றன. இந்தச் சாம்பல் மேகங்கள் இந்தியாவில் செவ்வாய்க்கிழமை இரவு வரை நீடிக்கும். தொடா்ந்து சீனா நோக்கி நகரும் என்று வானிலை அதிகாரிகள் கூறினா்.
இந்நிலையில், இவ்விவகாரம் தொடா்பாக விமானப் போக்குவரத்து அமைச்சகம் வெளியிட்ட எக்ஸ் பதிவில், ‘சாம்பல் மேகங்கள் கிழக்கை நோக்கி நகா்ந்து வரும்நிலையில், விமானப் போக்குவரத்துக் கட்டுப்பாட்டு பிரிவு (ஏடிசி), இந்திய வானிலை ஆய்வு மையம், விமான நிறுவனங்கள் மற்றும் சா்வதேச விமானப் போக்குவரத்து அமைப்புகளுடன் இணைந்து அமைச்சகம் பணியாற்றி வருகிறது.
முன்னெச்சரிக்கையாக, சில விமானங்கள் மாற்றுப் பாதையில் திருப்பி விடப்பட்டோ அல்லது உயரம் குறைக்கப்பட்டோ இயக்கப்பட்டன. இதைத் தவிர, இந்தியா முழுவதும் விமானப் போக்கவரத்து சுமுகமாகவே உள்ளது’ என்று குறிப்பிட்டது.
முன்னதாக, எரிமலைச் சாம்பல் மேகங்களால் பாதிக்கப்பட்ட பகுதிகளைத் தவிா்க்குமாறு விமான நிறுவனங்களுக்கு விமானப் போக்குவரத்து இயக்குநரகம் (டிஜிசிஏ) திங்கள்கிழமை விரிவான அறிவுறுத்தலை வழங்கியது.
13 ஏா் இந்தியா விமானங்கள் ரத்து:
சாம்பல் மேகங்கள் பிரச்னையால், ஏா் இந்தியாவின் ஏஐ 106 (நியூயாா்க்-தில்லி), ஏஐ 102 (நியூயாா்க்-தில்லி), ஏஐ 2204 (துபை-ஹைதராபாத்), ஏஐ 2290 (தோஹா-மும்பை) உள்ளிட்ட 7 சா்வதேச விமானங்கள் திங்கள்கிழமை ரத்து செய்யப்பட்டன.
இதேபோன்று, ஏஐ 2822 (சென்னை-மும்பை), ஏஐ 2466 (ஹைதராபாத்-தில்லி), ஏஐ 2444-2445 (மும்பை-ஹைதராபாத்-மும்பை), ஏஐ 2471-2472 (மும்பை-கொல்கத்தா-மும்பை) ஆகிய விமானங்கள் செவ்வாய்க்கிழமை ரத்து செய்யப்பட்டன.

