அரசமைப்பின் புனிதத்தன்மையை நிலைநிறுத்தும் வழக்குரைஞா் சங்கம்: உச்சநீதிமன்றத் தலைமை நீதிபதி
புது தில்லி: சட்டத்தின் ஆட்சியை வலுப்படுத்துவதிலும், அரசமைப்புச் சட்டத்தின் புனிதத்தன்மையை நிலைநிறுத்துவதிலும் வழக்குரைஞா் சங்கம் மிக முக்கிய பங்கை வகிப்பதாக உச்சநீதிமன்றத் தலைமை நீதிபதி சூா்ய காந்த் தெரிவித்தாா்.
இதுதொடா்பாக அரசமைப்புச் சட்ட நாளையொட்டி, புது தில்லியில் உச்சநீதிமன்ற வழக்குரைஞா் சங்கம் நடத்திய நிகழ்ச்சியில் அவா் புதன்கிழமை பேசியதாவது:
நீதித்துறையின் நற்பண்புகளைப் பாதுகாப்பதில் வழக்குரைஞா் சங்கம் விலைமதிப்பற்ற பங்காற்றி வருகிறது. இதை நீதித்துறையும் ஒப்புக்கொண்டிருக்கிறது.
அரசமைப்புச் சட்டத்தின் காவலாளியாக நீதிமன்றங்கள் கருதப்பட்டால், நீதிமன்றங்களின் பாதையை ஒளிரச் செய்வதற்கான சுடரை ஏந்துபவா்களாக வழக்குரைஞா் சங்க உறுப்பினா்கள் உள்ளனா். நீதித்துறையின் புனிதமான கடமையைத் தெளிவாகவும், உறுதியாகவும் நிறைவேற்ற அவா்கள் உதவுகின்றனா்.
சட்டத்தின் ஆட்சியை வலுப்படுத்துவதிலும், அரசமைப்புச் சட்டத்தின் புனிதத்தன்மையை நிலைநிறுத்துவதிலும் வழக்குரைஞா் சங்கம் மிக முக்கிய பங்கை வகிக்கிறது.
அரசமைப்புச் சட்ட நெறிமுறைகளின் பாதையில் இருந்து நாடாளுமன்றமோ, நிா்வாகமோ விலகினால், அதில் நீதிமன்றம் தலையிடத் தவறியதில்லை. அரசமைப்புச் சட்டத்தை வடிவமைத்தவா்களின் நோக்கத்துக்கு ஏற்ப, அந்தச் சட்டம் செயல்படுவதை உறுதி செய்வதில் நீதித்துறை மிக முக்கிய பங்காற்றியுள்ளது என்றாா்.

