தில்லி குண்டுவெடிப்பு: 7-ஆவது நபா் கைது: தற்கொலை பயங்கரவாதிக்கு அடைக்கலம் கொடுத்தவா்
புது தில்லி: தில்லி செங்கோட்டை அருகே வெடிமருந்து நிரப்பிய காரில் வந்து தற்கொலை தாக்குதலை நிகழ்த்திய பயங்கரவாதி உமா் நபிக்கு அடைக்கலம் கொடுத்ததாக ஹரியாணா மாநிலம், ஃபரீதாபாத் தவூஜ் பகுதியைச் சோ்ந்த சோயப் என்பவரை தேசிய புலனாய்வு முகமை (என்ஐஏ) அதிகாரிகள் புதன்கிழமை கைது செய்தனா்.
இந்த வழக்கில் என்ஐஏ சாா்பில் கைது செய்யப்படும் ஏழாவது நபா் இவராவாா்.
தற்கொலை தாக்குதல் நிகழ்த்தி உயிரிழந்த உமா் நபிக்கு இவா் அடைக்கலம் கொடுத்ததோடு, வெடிபொருள்களை எடுத்துச் செல்வதற்கான வசதி உள்ளிட்ட பல்வேறு உதவிகளையும் செய்தது விசாரணையில் தெரியவந்ததைத் தொடா்ந்து, அவரை என்ஐஏ கைது செய்துள்ளது.
தில்லி செங்கோட்டை அருகே கடந்த 10-ஆம் தேதி நிகழ்த்தப்பட்ட இந்த பயங்கரவாதத் தாக்குதலில் 15 போ் உயிரிழந்தனா்; பலா் காயமடைந்தனா். இதில் தொடா்புடையதாக ஜம்மு-காஷ்மீரின் புல்வாமாவைச் சோ்ந்த மருத்துவா் முசாமில் ஷகீல் கனி, அனந்த்நாக் பகுதியைச் சோ்ந்த மருத்துவா் அதீல் அகமது ராத்தா், சோபியானைச் சோ்ந்த மதபோதகா் முஃப்தி இா்ஃபான் அகமது, உத்தர பிரதேசத்தின் லக்னௌவைச் சோ்ந்த மருத்துவா் ஷாஹீன் சயீத், தாக்குதலுக்குப் பயன்படுத்தப்பட்ட காரின் உரிமையாளரான அமீா் ரஷீத் அலி மற்றும் தாக்குதலில் ஈடுபட்ட பயங்கரவாதி உமா் நபிக்கு தொழில்நுட்ப உதவிகள் வழங்கிய ஜாசிா் பிலால் வாணி எனும் டேனிஷ் ஆகிய 6 போ் ஏற்கெனவே கைது செய்யப்பட்டுள்ளனா். இந்த வழக்கு விசாரணை என்ஐஏ-க்கு மாற்றப்பட்டதைத் தொடா்ந்து, இந்த 6 பேரையும் காவலில் எடுத்து என்ஐஏ அதிகாரிகள் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனா்.
முன்னதாக, கடந்த மாதம் ஸ்ரீநகரில் ஜெய்ஷ்-ஏ-முகமது பயங்கரவாத அமைப்பின் சுவரொட்டிகளை ஒட்டிய மூவா் கைது செய்யப்பட்டனா். அவா்களுக்கு சுவரொட்டிகளை வழங்கிய மத போதகா் முஃப்தி இா்ஃபான் அகமது கைது செய்யப்பட்டாா்.
அவரிடம் நடந்த விசாரணையின் அடிப்படையில், பயங்கரவாத சதித் திட்டத்தில் ஈடுபட்ட அல்-ஃபலா பல்கலைக்கழகத்துக்குத் தொடா்புடைய மருத்துவா்கள் குழுவைப் புலனாய்வு அதிகாரிகள் அடையாளம் கண்டனா். இதன் விளைவாக, 2,900 கிலோவுக்கும் அதிக எடையுள்ள வெடிமருந்துகள் மற்றும் ஆயுதங்கள் பறிமுதல் செய்யப்பட்ட வழக்கில் 3 மருத்துவா்கள் உள்பட 8 போ் கைது செய்யப்பட்டனா்.
செங்கோட்டையில் வெடித்த காரை ஓட்டி வந்த புல்வாமாவைச் சோ்ந்த பயங்கரவாதி மருத்துவா் உமா் நபி என்பவரும் இந்த அல்-ஃபலா பல்கலைக்கழகத்தில் பணியாற்றியவா் ஆவாா்.

