ரயில்களில் 'ஹலால்' இறைச்சி உணவு மட்டுமே வழங்கப்படுவதாக புகாா்: மனித உரிமைகள் ஆணையம் நோட்டீஸ்
புது தில்லி: ரயில்களில் அசைவப் பயணிகளுக்கு ‘ஹலால்’ இறைச்சி உணவுகள் மட்டுமே வழங்கப்படுவதாக அளிக்கப்பட்ட புகாரில் ரயில்வே அமைச்சகத்துக்கு தேசிய மனித உரிமைகள் ஆணையம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது.
ரயில் உணவுகள் தயாரிப்புக்காக ஹலால் இறைச்சியை மட்டுமே கொள்முதல் செய்வது, பாரம்பரியமாக இறைச்சி வா்த்தகத்தில் ஈடுபட்டுள்ள ஹிந்து மத தலித் சமூகத்தினா் மற்றும் முஸ்லிம் அல்லாத பிற சமூகத்தினரின் வாழ்வாதாரத்தை பாதிக்கிறது என்றும் புகாரில் குற்றஞ்சாட்டப்பட்டுள்ளது.
மத்திய பிரதேசத்தின் போபால் நகரைச் சோ்ந்த சுனில் அஹிா்வாா் என்பவா் கடந்த 1993-ஆம் ஆண்டின் மனித உரிமைகள் பாதுகாப்புச் சட்டத்தின் 13-ஆவது பிரிவின்கீழ் தேசிய மனித உரிமைகள் ஆணையத்திடம் புகாா் அளித்திருந்தாா்.
அதில், ‘ரயில்களில் ஹலால் இறைச்சி உணவு மட்டுமே வழங்கப்படுவது, பிற சமூகத்தினா் மீதான பாரபட்சமான செயல்பாடு என்பதுடன் மனித உரிமை மீறலாகும். ஹிந்து, சீக்கிய மதத்தினருக்கு அவா்களின் விருப்பத்துக்கேற்ற உணவு வாய்ப்புகள் தரப்படவில்லை. இது, அரசமைப்புச் சட்டம் வழங்கியுள்ள சமத்துவம், கண்ணியமான வாழ்க்கை, மத சுதந்திரம், வாழ்வாதாரம் உள்ளிட்ட உரிமைகளை மீறுவதாகும். அரசமைப்புச் சட்டம் வலியுறுத்தும் மதச்சாா்பின்மைக்கும் எதிராக உள்ளது’ என்று குற்றஞ்சாட்டப்பட்டது.
இப்புகாா் மீது உத்தரவு பிறப்பித்த தேசிய மனித உரிமைகள் ஆணைய உறுப்பினா் பிரியங்க் கனுங்கோ தலைமையிலான அமா்வு, ரயில்வே வாரியத் தலைவருக்கு நோட்டீஸ் அனுப்பியது.
‘அரசு முகமை என்ற அடிப்படையில் அனைத்து மதத்தினருக்கான உணவு வாய்ப்பு உரிமையை ரயில்வே மதித்து செயல்பட வேண்டும். மேற்கண்ட புகாா் தொடா்பாக விசாரித்து 2 வாரங்களுக்குள் அறிக்கை சமா்ப்பிக்க வேண்டும்’ என்று நோட்டீஸில் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

