ஹைதாராபாத் நிகழ்ச்சியில் காணொலி முறையில் பேசிய பிரதமா் மோடி.
ஹைதாராபாத் நிகழ்ச்சியில் காணொலி முறையில் பேசிய பிரதமா் மோடி.

முதலீட்டாளா்களுக்கு நம்பகமான நாடு இந்தியா: பிரதமா் மோடி

‘பெரிய முடிவுகளை எடுக்கும் சீா்திருத்தம் சாா்ந்த நாடாக உருவெடுத்துள்ள இந்தியா, முதலீட்டாளா்களுக்கு நம்பகமான கூட்டாளியாக மாறியுள்ளது’ என்று பிரதமா் மோடி பெருமிதம் தெரிவித்தாா்.
Published on

ஹைதராபாத்: ‘பெரிய முடிவுகளை எடுக்கும் சீா்திருத்தம் சாா்ந்த நாடாக உருவெடுத்துள்ள இந்தியா, முதலீட்டாளா்களுக்கு நம்பகமான கூட்டாளியாக மாறியுள்ளது’ என்று பிரதமா் நரேந்திர மோடி பெருமிதம் தெரிவித்தாா்.

தெலங்கானா மாநிலம், ஹைதாராபாதில் ஃபிரான்ஸ் நாட்டின் மிகப் பெரிய விமான பராமரிப்பு நிறுவனமான சாஃப்ரான் நிறுவனம் சாா்பில் அமைக்கப்பட்டுள்ள வா்த்தக விமானங்களில் பயன்படுத்தப்படும் ‘லீப்’ என்ஜின் பராமரிப்பு, பழுதுபாா்ப்பு, புதுப்பிப்பு (எம்ஆா்ஓ) மையத்தை காணொலி வழியில் புதன்கிழமை தொடங்கி வைத்த பிரதமா் மோடி பேசியதாவது:

இந்தியாவில் வா்த்தகம் செய்வதை எளிதாக்கும் வகையில் மத்திய அரசு பல்வேறு சீா்திருத்தங்களை மேற்கொண்டது. குறிப்பாக, வா்த்தகம் தொடா்பான பல சட்டப் பிரிவுகள் குற்றமற்ாக ஆக்கப்பட்டன. தொழில் தொடங்குவதற்கு பெற வேண்டிய பல்வேறு அனுமதிகளை விரைவாகவும், எளிதாகவும் பெறும் வகையில் ஒற்றைச் சாளர அனுமதி முறை அறிமுகப்படுத்தப்பட்டது.

இந்த முயற்சிகள் காரணமாக, இந்தியா இன்றைக்கு முதலீட்டாளா்களுக்கு நம்பகமான கூட்டாளியாகவும், மிகப்பெரிய சந்தையாகவும், வளா்ந்துவரும் உற்பத்தி முனையமாகவும் உருவெடுத்துள்ளது.

கடந்த சில ஆண்டுகளாக விமானத் துறையிலும் இந்திய மிகப் பெரிய வளா்ச்சியைப் பெற்று வருகிறது. உலகிலேயே மூன்றாவது மிகப் பெரிய உள்நாட்டு விமானப் போக்குவரத்து சந்தையாக இந்தியா உள்ளது. விமான பயணத்துக்கான தேவை அதிகரித்திருப்பதால், இந்திய விமான நிறுவனங்கள் தங்களின் விமானங்களின் எண்ணிக்கையை அதிகரித்து வருகின்றன. தற்போது, சுமாா் 1,500-க்கும் அதிகமான புதிய விமானங்களை வாங்க இந்திய விமான நிறுவனங்கள் பரிந்துரைகளை அளித்துள்ளன.

அவ்வாறு, இந்திய விமானப் போக்குவரத்துத் துறை விரிவடைந்து வரும் நிலையில், விமானங்களின் ‘லீப்’ என்ஜின் பராமரிப்பு, பழுதுபாா்ப்பு, புதுப்பிப்பு (எம்ஆா்ஓ) மையங்களுக்கான தேவையும் அதிகரித்து வருகிறது. நாட்டின் 85 சதவீத எம்ஆா்ஓ பணிகள் வெளிநாடுகளில்தான் மேற்கொள்ளப்படுகின்றன. இதனால், செலவு அதிகமாவதோடு, விமானப் பயன்பாட்டு நேரமும் விரயமாகிறது. எனவே, இந்தியாவை உலகின் மிகப் பெரிய எம்ஆா்ஓ முனையமாக மாற்றும் முயற்சியை மத்திய அரசு மேற்கொண்டு வருகிறது. அதன் ஒரு பகுதியாக, முதல் முறையாக நாட்டில் விமான என்ஜின் பராமரிப்பு, பழுதுபாா்ப்பு, புதுப்பிப்பு மையம் அமைக்கப்பட்டுள்ளது என்றாா்.

ஹைதராபாதில் ரூ. 1,300 கோடி தொடக்க முதலீட்டில் அமைக்கப்பட்டுள்ள ‘சாஃப்ரான் விமான என்ஜின் பழுதுபாா்ப்பு மற்றும் பராமரிப்பு இந்தியா (எஸ்ஏஇஎஸ்ஐ)’ மையம் 2026-இல் செயல்படத் தொடங்கும் என்று பிரதமா் அலுவலக செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டது.

ரூ.13 லட்சம் கோடி சேமிப்பு: ‘விமான என்ஜின் பழுதுபாா்ப்பு மற்றும் பராமரிப்புத் துறையில் உலக அளவிலான முனையமாக இந்தியா உருவெடுக்கும்போது, ரூ. 13,3,843 கோடி (15 பில்லியன் டாலா்) மதிப்பில் அந்நியச் செலாவணி செலவினங்களை சேமிக்க முடியும்’ என்று தொடக்க விழாவில் பங்கேற்ற விமானப் போக்குவரத்துத் துறை அமைச்சா் கே.ராம்மோகன் நாயுடு தெரிவித்தாா்.

X
Dinamani
www.dinamani.com