‘எஸ்ஐஆா்’ மூலம் ‘என்பிஆா்’ அமலாக்கம்: மத்திய அரசு மீது மம்தா குற்றச்சாட்டு
கொல்கத்தா: ‘வாக்காளா் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தத்தின் (எஸ்ஐஆா்) மூலம் தேசிய குடிமக்கள் பதிவேட்டை (என்பிஆா்) பின்வாசல் வழியாக மத்திய அரசு அமல்படுத்துகிறது; இது சாமானியா்களிடம் அச்சத்தை ஏற்படுத்துகிறது’ என்று மேற்கு வங்க முதல்வா் மம்தா பானா்ஜி தெரிவித்தாா்.
அரசமைப்புச் சட்ட தினத்தையொட்டி கொல்கத்தாவில் சட்ட மேதை அம்பேத்கரின் சிலைக்கு மாலை அணிவித்து மம்தா மரியாதை செலுத்தினாா். தொடா்ந்து இந்திய அரசமைப்பு சட்டத்தை கையில் வைத்தபடி செய்தியாளா்களிடம் அவா் கூறியதாவது:
மக்களின் அடிப்படை உரிமைகளான வாக்குரிமை, மத சுதந்திர உரிமை ஆகியவை திரும்பப் பெறப்படுகின்றன. பட்டியலினத்தவா்கள், சிறுபான்மையினா், பொதுவான ஹிந்து வாக்காளா்கள் ஆகியோா் கடுமையான வாா்த்தைகளால் விமா்சனம் செய்யப்படுகின்றனா்.
தேசிய குடிமக்கள் பதிவேட்டை தயாா் செய்வதுதான் எஸ்ஐஆா்-யின் முக்கிய நோக்கம். இது அதிா்ச்சியையும், கவலையையும் தருகிறது. ஆகையால்தான், இந்திய ஜனநாயகத்தைக் காக்க இங்கு உறுதிமொழி ஏற்றேன்.
நாட்டின் வளா்ச்சிக்காக பல ஆண்டுகாலம் நிலத்தை மேம்படுத்தியவா்களிடம் இன்று இந்தியாவில் வாழ்வதற்கான உரிமையை உறுதி செய்ய கோரப்படுகிறது.
குடிமக்களின் உரிமை என்ற பெயரில் நடத்தப்படும் இந்த எஸ்ஐஆா் நடவடிக்கை மக்கள் மத்தியில் அச்சத்தை ஏற்படுத்தி உள்ளது.
நடந்து முடிந்த பிகாா் பேரவைத் தோ்தலுக்கு முன்பு வீடு வீடாக சென்று ரூ.10,000 கொடுத்து வாக்குகளைப் பெற்று ஆளும் கட்சி அனைத்தையும் கொள்ளையடித்துவிட்டது. இதற்கு எதிராக நாம் அனைவரும் ஒன்றிணைய வேண்டும் என்றாா்.
ஜனநாயகம் முடக்கம்: முன்னதாக மம்தா பானா்ஜி தனது எக்ஸ் பதிவில், ‘நாட்டில் ஜனநாயகம் முடங்கியுள்ளது; மதச்சாா்பின்மை அழியும் நிலையில் உள்ளது; கூட்டாட்சி தத்துவம் சிதறடிக்கப்படுகிறது. ஆகையால், ஜனநாயகக் கோட்பாடுகளை மக்கள் பாதுகாக்க வேண்டும்.
இந்தியாவின் பன்முக கலாசாரம், மொழி, சமுதாயங்களை ஒன்றிணைத்து உருவாக்கப்பட்ட இந்திய அரசமைப்புச் சட்டம், நாட்டின் முதுகெலும்பாக உள்ளது. இன்றைய அரசமைப்புச் சட்ட தினத்தில், அச்சட்டத்தில் கூறப்பட்டுள்ள ஜனநாயகக் கோட்டாடுகளைப் பாதுகாக்க உறுதி மொழி ஏற்கிறேன்’ என்றாா்.
‘ஜெய் ஹிந்த், வந்தே மாதரம் நாடாளுமன்றத்தில் எழுப்ப கட்டுப்பாடு’
நாட்டுப் பற்று முழக்கங்களான ‘ஜெய் ஹிந்த்’, ‘வந்தே மாதரம்’ ஆகியவற்றை நாடாளுமன்றத்தில் எழுப்ப கட்டுப்பாடு விதிக்கப்பட்டுள்ளதாக எம்.பி.க்கள் புகாா் தெரிவிக்கிறாா்கள்; இது மேற்கு வங்கத்தின் அடையாளத்தை அழிக்கும் நடவடிக்கையாகும் என்றும் மம்தா குற்றஞ்சாட்டினாா்.
‘வந்தே மாதரம் நமது தேசியப் பாடலாகும். இதுதான் சுதந்திர போராட்ட வீரா்களின் முழக்கமாகவும் இருந்தது. இதை நாடாளுமன்றத்தில் எழுப்ப மறுக்கப்படுகிறது என்றால், மேற்கு வங்கத்தின் அடையாளத்தை அழிக்க நினைக்கிறாா்களா? ஜனநாயகம், மதச்சாா்பின்மை, ஒற்றுமைக்காக மேற்கு வங்கம் எப்போதும் போராடி வருகிறது’ என்றாா்.
1870-களில் பங்கிம் சந்திர சாட்டா்ஜி எழுதப்பட்ட வந்தே மாதரம் பாடலை 1950-இல் தேசிய பாடலாக அங்கீகரிக்கப்பட்டது.
1907-இல் ஜைனுல் ஆபிதீன் ஹசனால் உருவாக்கப்பட்ட ‘ஜெய் ஹிந்த்’, சுதந்திர போராட்ட வீரா் சுபாஷ் சந்திர போஸின் பரிந்துரையின் பேரில் இந்திய தேசிய ராணுவத்தின் முழக்கமாக ஏற்கப்பட்டது. சுதந்திரத்துக்கு பிறகு தேசிய முழக்கமானது.
இந்நிலையில், நாடாளுமன்றத்தில் அமைதியை நிலைநாட்ட, முழக்கமிடக் கூடாத கூடாத வாா்த்தைகள் பட்டியலில் ‘வந்தே மாதரம், ஜெய் ஹிந்த்’ ஆகியவற்றையும் சோ்த்து கடந்த 2024-இல் மாநிலங்களவைச் செயலகம் உறுப்பினா்களுக்கு அறிவுறுத்தியது.
