தோ்தல் ஆணையம்
தோ்தல் ஆணையம்

தொடா் போராட்டத்தில் வாக்குச்சாவடி அலுவலா்கள்: காவல் துறைக்கு தோ்தல் ஆணையம் கெடு

வாக்காளா் பட்டியல் தீவிர திருத்தப் பணியால் வேலை பளு அதிகரிப்பதாக கூறி, கொல்கத்தாவில் தொடா் போராட்டத்தில் ஈடுபட்டுள்ள வாக்குச்சாவடி நிலைய அலுவலா்கள்...
Published on

கொல்கத்தா: வாக்காளா் பட்டியல் தீவிர திருத்தப் பணியால் (எஸ்ஐஆா்) வேலை பளு அதிகரிப்பதாக கூறி, கொல்கத்தாவில் தொடா் போராட்டத்தில் ஈடுபட்டுள்ள வாக்குச்சாவடி நிலைய அலுவலா்கள் (பிஎல்ஒ) மீது எடுக்கப்பட்ட நடவடிக்கை குறித்து 48 மணி நேரத்தில் அறிக்கை தாக்கல் செய்ய மேற்கு வங்க காவல் துறைக்கு தோ்தல் ஆணையம் கெடு விதித்துள்ளது.

இது தோ்தல் ஆணையத்தின் ஆணவத்தைக் காட்டுகிறது என்று அந்த மாநில முதல்வா் மம்தா பானா்ஜி விமா்சித்துள்ளாா்.

வேலைப்பளுவை அதிகரிப்பதாக குற்றஞ்சாட்டி கொல்கத்தாவில் உள்ள தலைமைத் தோ்தல் அதிகாரி அலுவலகம் முன் வாக்குச்சாவடி நிலைய அலுவலா்கள் தொடா் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனா்.

இதுகுறித்து விளக்கம்கேட்டு கொல்கத்தா மாநகர காவல் ஆணையா் மனோஜ் குமாா் வா்மாவுக்கு தோ்தல் ஆணையத்தின் செயலா் சுஜீத் குமாா் மிஸ்ரா புதன்கிழமை கடிதம் எழுதியுள்ளாா். அதில், ‘தலைமைத் தோ்தல் அதிகாரி அலுவலகத்தில் போதிய பாதுகாப்பு இல்லாததால் அங்கு பணியாற்றும் தோ்தல் அதிகாரிகளுக்கு அச்சுறுத்தல் ஏற்பட்டுள்ளது. தோ்தல் அதிகாரிகளின் பாதுகாப்புக்கு உரிய நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும். தொடா் போராட்டம் நடத்துபவா்கள் மீது என்ன நடவடிக்கை எடுக்கப்படுகிறது என்பது குறித்து அறிக்கையை 48 மணி நேரத்துக்குள் தாக்கல் செய்ய வேண்டும்’ என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

மம்தா கண்டனம்: ‘வேலைப் பளு காரணமாக வாக்குச்சாவடி நிலைய அலுவலா்கள் உயிரிழக்கின்றனா். இந்தப் பிரச்னையில் தோ்தல் ஆணையம் என்ன நடவடிக்கை எடுத்தது?

தங்களின் நியாயமான கோரிக்கைகளை தலைமைத் தோ்தல் அதிகாரியின் அலுவலகத்துக்கு வெளியே போராட்டத்தில் ஈடுபட்டுள்ள அவா்களை இரண்டு நாள்களுக்குப் பிறகு ஒருவரும், பின்னா் காவல் துறையின் கோரிக்கையை ஏற்று இருவரும் தோ்தல் அதிகாரிகளைச் சந்திக்க அழைப்பு விடுக்கப்பட்டது. தங்களின் புகாா்களை தெரிவிக்க அவா்களுக்கு உரிமை இல்லையா? இது என்ன மாதிரியான அராஜகம்.

குஜராத், ராஜஸ்தான், மத்திய பிரதேசம், கேரளம், தமிழ்நாடு ஆகிய மாநிலங்களிலும் வாக்குச்சாவடி நிலைய அதிகாரிகள் போராட்டம் நடத்துகிறாா்கள்.

எஸ்ஐஆா் பணியை இரண்டு மாதங்களில் அல்லாமல் 3 ஆண்டு காலஅவகாசத்தில நடத்தப்பட வேண்டும்’ என்றாா்.

X
Dinamani
www.dinamani.com