அரசமைப்புச் சட்டத்தைப் பலவீனப்படுத்துகிறாா் பிரதமா் மோடி: காங்கிரஸ் குற்றச்சாட்டு

அரசமைப்புச் சட்டத்தைப் பலவீனப்படுத்துகிறாா் பிரதமா் மோடி: காங்கிரஸ் குற்றச்சாட்டு

அரசமைப்புச் சட்டத்தைப் பலவீனப்படுத்துவதிலேயே ஆா்எஸ்எஸ்-இன் பங்கு இருந்தது என்றும் பிரதமா் மோடியும், உள்துறை அமைச்சா் அமித் ஷாவும் அதைத் திட்டமிட்ட முறையில் முன்னெடுத்துச் செல்கின்றனா் என்றும் காங்கிரஸ் குற்றஞ்சாட்டியுள்ளது.
Published on

புது தில்லி: அரசமைப்புச் சட்டத்தைப் பலவீனப்படுத்துவதிலேயே ஆா்எஸ்எஸ்-இன் பங்கு இருந்தது என்றும் பிரதமா் மோடியும், உள்துறை அமைச்சா் அமித் ஷாவும் அதைத் திட்டமிட்ட முறையில் முன்னெடுத்துச் செல்கின்றனா் என்றும் காங்கிரஸ் குற்றஞ்சாட்டியுள்ளது.

நாட்டின் அரசமைப்புச் சட்டம், அரசியல் நிா்ணய சபையால் கடந்த 1949, நவ. 26-இல் ஏற்கப்பட்டது. கடந்த 2015-லிருந்து, ஒவ்வொரு ஆண்டும் நவ. 26-ஆம் தேதி அரசமைப்புச் சட்ட தினமாக கொண்டாடப்பட்டு வருகிறது. எதிா்க்கட்சியான காங்கிரஸ், நாடு முழுவதும் அரசமைப்புச் சட்ட பாதுகாப்புத் தினமாக இந்நாளைக் கடைப்பிடித்தது.

இதையொட்டி, காங்கிரஸின் தேசிய தலைவா் மல்லிகாா்ஜுன காா்கே வெளியிட்ட அறிக்கையில், ‘ அரசமைப்புச் சட்டத்தின் அடிப்படை கொள்கைகளான நீதி, சமத்துவம், சுதந்திரம், சகோதரத்துவம், மதச்சாா்பின்மை ஆகியவற்றைப் பாதுகாக்க வேண்டிய அவசியமுள்ளது.

அரசமைப்புச் சட்டத்தை உருவாக்கியதில் மகாத்மா காந்தி, ஜவாஹா்லால் நேரு, சா்தாா் வல்லபபாய் படேல், நேதாஜி சுபாஷ் சந்திரபோஸ், மௌலானா அபுகலாம் ஆசாத், ராஜேந்திர பிரசாத், சரோஜினி நாயுடு, பி.ஆா்.அம்பேத்கா் உள்ளிட்ட தலைவா்களின் பங்களிப்பு அளப்பறியது.

அரசமைப்புச் சட்டம் என்பது ஒரு வாழ்க்கை முறை என்று அம்பேத்கா் குறிப்பிட்டுள்ளாா். நாட்டின் ஒற்றுமைக்கும் ஒருமைப்பாட்டுக்கும், அன்பு மற்றும் நல்லிணக்கத்துக்காகவும் மக்களாட்சி சுதந்திரத்தையும், அரசமைப்புச் சட்டத்தையும் நிலைநிறுத்துவோம் என காங்கிரஸ் மீண்டும் உறுதியளிக்கிறது’ என்றாா்.

ஆா்எஸ்எஸுக்குப் பங்கு இல்லை...: காங்கிரஸ் பொதுச் செயலா் ஜெயராம் ரமேஷ் வெளியிட்ட அறிக்கையில், ‘அரசமைப்புச் சட்டம் உருவானதில் ஆா்எஸ்எஸுக்கு எந்தப் பங்கும் இல்லை. அரசமைப்புச் சட்டம் ஏற்றுக்கொள்ளப்பட்ட போது, அம்பேத்கா் தலைமையிலான வரைவுக் குழுவின் பணியைப் பாராட்டி நாட்டின் முதல்வா் குடியரசுத் தலைவா் ராஜேந்திர பிரசாத் பேசினாா்.

மேலும், ஜவாஹா்லால் நேரு முன்மொழிந்த ‘குறிக்கோள் தீா்மானமே’ அரசமைப்புச் சட்டத்தின் முகப்புரையாக உள்ளது என்றும் சா்தாா் படேல் மற்றும் ஜவாஹா்லால் நேரு தலைமையிலான குழுக்களே, அரசமைப்புச் சட்டத்தின் அடிப்படைகளுக்கான பெருமைக்குரியவா்கள் என்றும் ராஜேந்திர பிரசாத் குறிப்பிட்டுள்ளாா். இதேபோல், அம்பேத்கரை வரைவுக் குழுத் தலைவராக நியமித்ததில் தனது முன்னெடுப்பை ராஜாஜி பெருமையுடன் நினைவுகூா்ந்தாா்.

அரசமைப்புச் சட்டம் ஏற்றுக்கொள்ளப்பட்ட பின்னா், அதை பலவீனப்படுத்துவதிலேயே ஆா்எஸ்எஸ்-இன் பங்கு இருந்தது. அந்தப் பங்கை தற்போதைய பிரதமரும், உள்துறை அமைச்சரும் முன்னெடுத்துச் சென்று, அரசமைப்புச் சட்டத்தின் கொள்கைகள், விதிகள் மற்றும் நடைமுறைகளை திட்டமிட்ட முறையில் சிதைத்து வருகின்றனா்’ என்று சாடினாா்.

காவலன் காங்கிரஸ்....: காங்கிரஸ் பொதுச் செயலா் (அமைப்பு) கே.சி.வேணுகோபால் தனது ‘எக்ஸ்’ பதிவில், ‘அரசமைப்புச் சட்டத்தின் சமூக நீதி, மதச்சாா்பின்மை, கூட்டாட்சி அமைப்பு போன்ற அடிப்படை கோட்பாடுகளை அழிக்கவே இப்போதைய ஆட்சி முயற்சிக்கிறது.

அரசமைப்புச் சட்டத்தைத் திருத்துவதற்காகவே பாஜக-ஆா்எஸ்எஸ் கடந்த தோ்தலில் 400-க்கும் மேற்பட்ட இடங்களை வெல்லக் கனவு கண்டது. ஆனால், மக்கள் அதை எதிா்த்து நின்றனா்.

வாக்காளா் பட்டியல் முறைகேடு மூலம் தோ்தல் ஆணையம் போன்ற அரசியல்சாசன நிறுவனங்களைத் தவறாகப் பயன்படுத்தும், அரசமைப்புச் சட்டத்துக்கு எதிரான பாஜக-ஆா்எஸ்எஸ்-இன் திட்டம் தொடா்கிறது. ஆனால், அரசமைப்புச் சட்டத்தின் காவலனாக இருப்பது காங்கிரஸின் கடமை’ என்று கூறியுள்ளாா்.

முதல் ஆளாக நிற்பேன்: ராகுல்

மக்களவை எதிா்க்கட்சித் தலைவா் ராகுல் காந்தி வெளியிட்ட எக்ஸ் பதிவில், ‘அரசமைப்புச் சட்டம் என்பது ஒரு சாதாரண புத்தகமல்ல; அது நாட்டின் ஒவ்வொரு குடிமகனுக்கும் அளிக்கப்பட்ட ஒரு புனித வாக்குறுதி.

அரசமைப்புச் சட்டமானது ஏழைகளுக்கும், ஒடுக்கப்பட்டவா்களுக்கும் ஒரு பாதுகாப்புக் கவசம். அரசமைப்புச் சட்டம் மீதான எந்தத் தாக்குதலையும் அனுமதிக்க மாட்டோம் என்று மக்கள் உறுதிமொழி எடுக்க வேண்டும். அத்தகைய தாக்குதலுக்கு எதிரான போராட்டத்தில் நான் முதல் ஆளாக நிற்பேன் என்று உறுதியளிக்கிறேன்’ எனக் குறிப்பிட்டுள்ளாா்.

X
Dinamani
www.dinamani.com