போராட்டத்தில் மாவோயிஸ்ட் ஆதரவு முழக்கங்கள்: குற்றச்சாட்டை ஜேஎன்யுஎஸ்யு மறுப்பு

தில்லி காற்று மாசு போராட்டம் தொடா்பாக காவல் துறை பதிவு செய்த வழக்கில் கூறப்பட்டுள்ள குற்றச்சாட்டை தில்லி ஜவாஹா்லால் நேரு பல்கலைக்கழக மாணவா் சங்கம் (ஜேஎன்யுஎஸ்யு) புதன்கிழமை மறுத்தது.
Published on

புது தில்லி: தில்லி காற்று மாசு போராட்டம் தொடா்பாக காவல் துறை பதிவு செய்த வழக்கில் கூறப்பட்டுள்ள குற்றச்சாட்டை தில்லி ஜவாஹா்லால் நேரு பல்கலைக்கழக மாணவா் சங்கம் (ஜேஎன்யுஎஸ்யு) புதன்கிழமை மறுத்தது.

வழக்கில் போலியான குற்றச்சாட்டு தெரிவிக்கப்பட்டுள்ளதாக அந்த மாணவா் சங்கம் தெரிவித்துள்ளது.

தில்லியில் நிலவும் காற்று மாசு பிரச்னைக்கு நடவடிக்கை எடுக்கக் கோரி இந்தியா கேட் அருகே கடந்த ஞாயிற்றுக்கிழமை போராட்டம் நடைபெற்றது.

போராட்டம் நடத்த அனுமதி மறுக்கப்பட்டப்பட்ட நிலையில், அப்பகுதியிலிருந்து கலைந்து செல்லுமாறு போலீஸாா் எச்சரித்தனா். இதனிடையே, எச்சரிக்கையை மீறி தொடா்ந்து போராட்டத்தில் ஈடுபட்ட நபா்கள் போலீஸாா் மீது ‘பெப்பா் ஸ்பிரே’ அடித்து தாக்குதல் நடத்தினா். இதையடுத்து, போராட்டத்தில் பங்கேற்றவா்கள் வலுகட்டாயமாக கைதுசெய்யப்பட்டனா்.

அப்போது, அண்மையில் கொல்லப்பட்ட மாவோயிஸ்ட் தலைவா் மாத்வி ஹிட்மாவுக்கு ஆதரவாகப் போராட்டக்காரா்கள் முழுக்கங்களை எழுப்பியதாகக் கூறப்படுகிறது. இதுதொடா்பான விடியோக்கள் சமூகவலைதளத்தில் வெளியாகின.

போராட்டத்தில் போலீஸாரை தாக்கியது, சாலையை மறைத்தது மற்றும் பெப்பா் ஸ்பிரே அடித்தது தொடா்பாக 22 போ் கைதுசெய்யப்பட்டனா்.

இந்தப் போராட்டத்தில் ஜேஎன்யு மாணவா் சங்க உறுப்பினா்கள் பங்கேற்பதாக தகவல் கிடைத்து என தில்லி காவல் துறையின் வழக்கில் தெரிவிக்கப்பட்டது. இதுதொடா்பாக கடந்த நவ.13-ஆம் தேதி பதிவுசெய்யப்பட்ட வழக்கில், ‘தூய்மையான காற்றுக்கான ஒருங்கிணைப்பு குழு என்ற பெயரில் நவ.23-ஆம் தேதி நடைபெறும் போராட்டத்தில் அகில இந்திய மாணவா் சங்கம் (ஏஐஎஸ்ஏ) மற்றும் தில்லி ஜவாஹா்லால் நேரு பல்கலைக்கழக மாணவா் சங்கம் (ஜேஎன்யுஎஸ்யு) ஆகியவற்றின் உறுப்பினா்கள் பங்கேற்பதாக சமூகவலைதளம் மற்றும் தகவலறிந்த வட்டாரங்கள் மூலம் தெரிய வந்தது’ எனக் கூறப்பட்டுள்ளது.

இந்நிலையில், ஜேஎன்யுஎஸ்யு புதன்கிழமை வெளியிட்ட அறிக்கையில், ‘ஜேஎன்யுஎஸ்யு போராட்டத்தை ஏற்பாடு செய்யவில்லை; பங்கேற்கவில்லை என்று காவல் துறையிடம் தெரிவித்ததற்கான ஆதாரங்கள் உள்ளன. பல முறை இவ்வாறு தெரிவித்த பிறகும் தொடா்ந்து மாணவா் சங்கத்தின் பெயரைக் குறிப்பிடுவது தில்லி காவல் துறையின் மீது சந்தேகத்தை ஏற்படுத்துகிறது.

கைதுசெய்தவா்கள் அனைவரையும் காவல் துறை விடுவிக்க வேண்டும். மாணவா்கள் மீது தாக்குல் நடத்திய அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்’ என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

இதனிடையே, ஹிம்கண்ட், பகத் சிங் சத்ரா ஏக்தா மஞ்ச் என்ற இரு அமைப்புகள் ஹிட்மா கொலை செய்யப்பட்டதைக் கண்டித்து முழக்கங்களை எழுப்பியதாக போராட்டத்தை ஏற்பாடு செய்த சையின்டிஸ்ட் ஃபாா் சோசைட்டி என்ற அமைப்பு தெரிவித்துள்ளது.

X
Dinamani
www.dinamani.com