

பார்வையற்றோருக்கான டி20 உலகக் கோப்பையை வென்ற பெருமைமிக்க இந்திய மகளிர் கிரிக்கெட் அணியை சந்தித்து பாராட்டினார் எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி.
இலங்கையில் நடைபெற்ற பார்வையற்றோருக்கான டி20 உலகக் கோப்பையை வென்ற இந்திய மகளிர் அணியினரை, இன்று புது தில்லியில் உள்ள தன்னுடைய இல்லத்துக்கு வரவழைத்து, காங்கிரஸ் தலைவரும், மக்களவை எதிர்க்கட்சித் தலைவருமான ராகுல் காந்தி கௌரவித்தார். அவர்களை நேரில் சந்தித்து, கலந்துரையாடினார்.
இது குறித்து ராகுல் புகைப்படத்துடன் தன்னுடைய சமூக வலைத்தளப் பக்கத்தில் பதிவிட்டிருப்பதாவது, இன்று, புதுதில்லியில், முதல் டி-20 உலகக் கோப்பையை வென்ற பெருமைமிக்க பார்வையற்ற இந்திய மகளிர் கிரிக்கெட் அணியை கௌரவிக்கும் வாய்ப்பைப் பெற்றேன்.
அவர்களின் வரலாற்று வெற்றி, தைரியம் மற்றும் நேர்மறை எண்ணங்களுக்கான சக்திவாய்ந்த செய்தியாகும். இந்திய மகளிர் அணியின் மன உறுதி, ஒழுக்கம் மற்றும் அசாதாரண ஊக்கம் முழு நாட்டுக்குமான ஒரு உத்வேகம்.
மகளிர் அணி சாம்பியன்களால் இந்தியா பெருமை கொள்கிறது என்று பதிவிட்டுள்ளார்.
இலங்கையில் நடைபெற்ற பார்வையற்றோருக்கான டி20 உலகக் கோப்பையின் இறுதிப் போட்டியில் நேபாளம் மற்றும் இந்திய மகளிரணிகள் மோதின.
மிகவும் பரபரப்பாக நடைபெற்ற இந்தப் போட்டியில் முதலில் பேட்டிங் செய்த நேபாளம் 20 ஓவர்களில் 5 விக்கெட்டுகளை இழந்து 114 ரன்கள் எடுத்தது.
115 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் அடுத்து விளையாடிய இந்திய அணி 12.1 ஓவர்களில் 3 விக்கெட்டுகளை இழந்து 117 ரன்கள் எடுத்து 7 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்று புதிய வரலாறு படைத்து சாம்பியன் கோப்பையை வென்றது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.