

புது தில்லி: நாட்டில், ரூ.7,200 கோடியில் அரிய வகை நிரந்தர காந்த உற்பத்தியைத் தொடங்க பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் நடைபெற்ற அமைச்சரவைக் கூட்டத்தில் ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது.
நாட்டில் காந்த உற்பத்தியை ஊக்குவிக்கும் வகையில், ரூ.7,200 கோடியில் அரிய வகை காந்த உற்பத்தி திட்டத்துக்கு ஒப்புதல் அளிக்கப்பட்டிருப்பதன் மூலம், ஒவ்வொரு ஆண்டும் 6,000 டன் அரியவகை காந்தம் உற்பத்தி செய்யப்படும் என்றும், இதன் மூலம் இந்தியா காந்த தேவையில் தன்னிறைவு அடைவதுடன், சர்வதேச சந்தையிலும் முன்னிலை பெற நடவடிக்கை எடுக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த திட்டத்தை செயல்படுத்த நாட்டில் முதல் முறையாக மத்திய அரசு அனுமதி வழங்கியிருக்கிறது என்பதும் குறிப்பிடத்தக்கது.
மத்திய அமைச்சரவைக் கூட்டத்துக்குப் பிறகு செய்தியாளர்களை சந்தித்த மத்திய அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் கூறுகையில், மத்திய அமைச்சரவை எடுத்திருக்கும் மிக ராஜதந்திர முடிவாகும். இந்த திட்டத்துக்கு ரூ.7280 கோடி ஒதுக்க ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது.
நாட்டில் கிடைக்கும் அரிய வகை கனிமங்களைப் பயன்படுத்தி காந்தம் தயாரிக்கும் திட்டத்துக்கு ஒப்புதல் வழங்கப்பட்டுள்ளது. மின்சார வாகனங்கள், விமானங்கள், மின் சாதனங்கள், பாதுகாப்புத் தளவாடங்கள் உள்ளிட்டவற்றுக்கு அடிப்படையானதாக இந்த காந்தம் அமைந்துள்ளது.
இந்த திட்டமானது, அரிய வகை காந்த உற்பத்தி ஆலைகள் அமைப்பது, அரிதான பூமியில் கிடைக்கும் ஆக்ஸைடுகளை தனிமங்களாக மாற்றுவது, தனிமங்களை அலாய்களாக மாற்றி, அலாய்களை அரிய காந்தமாக மாற்றுவது என நீளும் என்று கூறப்படுகிறது.
இந்த திட்டத்தின் கீழ், உலக அளவில் ஒப்பந்தப்புள்ளிகள் கோரப்பட்டு ஐந்து நிறுவனங்களுக்கு ஒப்பந்தங்கள் மூலம் ஒதுக்கப்படும் என்றும் கூறப்படுகிறது. மத்திய அரசின் இந்த முன்னெடுப்பு, நாட்டில் தன்னிறைவு மற்றும், வழங்கல் சங்கலியை உறுதி செய்தல், அடிப்படையான மூலக்கூறுகள் மற்றும் துணை மூலக்கூறுகளை உள்நாட்டிலேயே தயாரித்து, மின்சார வாகனங்களின் உற்பத்தியை பெருக்குவதற்கு அடிப்படையாக இருப்பதாக பல்வேறு துறை சார்ந்த நிபுணர்களும் தெரிவித்துள்ளனர்.
இந்த திட்டம் தொடங்கப்பட்டு ஏழு ஆண்டுகளுக்குள் உற்பத்தி பணி தொடங்க இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. உற்பத்தி ஆலை அமைக்க இரண்டு ஆண்டுகளும், உற்பத்தியைத் தொடங்கி அதனை விற்பனைக்குக் கொண்டு வர ஐந்து ஆண்டுகள் இலக்காக நிர்ணயிக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதையும் படிக்க.. 1971-க்குப் பின்.. முதல் முறையாக இரட்டைக் குட்டிகளை ஈன்ற யானை!
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.