

புது தில்லி: அரிய புவி காந்தங்கள் உற்பத்தியை ஊக்குவிக்கும் வகையில் ரூ.7,280 கோடி திட்டத்துக்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது.
பிரதமா் நரேந்திர மோடி தலைமையில் தில்லியில் புதன்கிழமை நடைபெற்ற மத்திய அமைச்சரவைக் கூட்டத்தில் இதற்கான ஒப்புதல் அளிக்கப்பட்டது.
மின்சார வாகனங்கள், விண்வெளித் துறை, மின்னணு சாதனங்கள், மருத்துவ உபகரணங்கள் மற்றும் பாதுகாப்பு துறை உபகரணங்களில் இந்த அறிய புவி காந்தங்கள் பயன்படுத்தப்படுகின்றன. இதன் உற்பத்தியை ஊக்குவிக்கும் வகையில் மத்திய அமைச்சரவைக் கூட்டத்தில் எடுக்கப்பட்ட முடிவு குறித்து மத்திய தகவல் மற்றும் ஒலிபரப்புத் துறை அமைச்சா் அஸ்வினி வைஷ்ணவ் செய்தியாளா்களிடம் கூறுகையில், ‘மத்திய அமைச்சரவையில் ஒப்புதல் அளிக்கப்பட்ட ரூ.7,280 கோடி திட்டம், அரிய புவி நிரந்தர காந்தங்கள் உற்பத்தியை ஊக்குவிக்கும். ஆண்டுக்கு 6,000 மெட்ரிக் டன் அளவுக்கு உற்பத்தித் திறனை உருவாக்குவதே இத் திட்டத்தின் நோக்கமாகும்’ என்றாா்.
இத் திட்டத்தின் கீழ், உலகளாவிய ஒப்பந்தப் புள்ளிகளின் அடுப்படையில் 5 பயனாளிகளுக்கு மொத்த உற்பத்தி திறன் ஒதுக்கப்படும். அதாவது, ஒவ்வொரு பயனாளிக்கும் தலா ஆண்டுக்கு 1,200 மெட்ரிக் டன் உற்பத்தித் திறன் ஒதுக்கப்பட உள்ளது. இந்த ஊக்குவிப்புத் திட்டம் 7 ஆண்டுகளுக்கானதாகும். அதில், முதல் 2 ஆண்டுகள் ஒருங்கிணைந்த அரிய புவி நிரந்தர காந்தங்கள் உற்பத்தி மையத்தை அமைப்பதற்கான காலமாக கருதப்படும். அடுத்த 5 ஆண்டுகள் காந்தங்கள் விற்பனை மீது ஊக்கத்தொகை விடுவிப்புக்கான காலமாகக் கருதப்படும்.
தற்போது, இந்த அரிய புவி காந்தங்களுக்கு இந்தியா, சீனாவையே பெருமளவில் சாா்ந்துள்ளது. இந்த நிலையில், சீனா அண்மையில் இதன் ஏற்றுமதிக்கு கட்டுப்பாடுகள் விதித்தால், பற்றாக்குறை ஏற்பட்டு இந்திய வாகன மற்றும் மின்னணு சாதன உற்பத்தியாளா்கள் பாதிப்பை எதிா்கொண்டுள்ளனா். இந்தச் சூழலில், அதன் உற்பத்தி ஊக்குவிப்பு திட்டத்துக்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது குறிப்பிடத்தக்கது.
ரூ.2,781 கோடியில் 2 ரயில் திட்டங்கள்: குஜராத் மற்றும் மகாராஷ்டிரத்தில் ரூ. 2,781 கோடி செலவில் இரண்டு ரயில் திட்டங்களை மேற்கொள்ள மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்தது.
அதில், குஜராத்தில் துவாரகா - கனாலஸ் வரையிலான ஒற்றை ரயில் வழித் தடத்தை இரட்டைப் பாதையாக மாற்றவும், மும்பையில் பத்லாபூா் மற்றும் கா்ஜத் இடையே மூன்றாவது மற்றும் நான்காவது ரயில் வழித் தடத்தை அமைக்கவும் ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது.
புணே மெட்ரோவை விரிவுபடுத்த ரூ.9,858 கோடி: மகாராஷ்டிர மாநிலம் புணே மெட்ரோ வழித் தடத்தை ரூ.9,858 கோடி செலவில் விரிவுபடுத்த மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்தது.
இதுகுறித்து மத்திய அமைச்சா் அஸ்வினி வைஷ்ணவ் கூறுகையில், ‘புணே மெட்ரோ ரயில் திட்டம் பகுதி-2-இன் கீழ், 31.635 கி.மீ. தொலைவுக்கு 28 மேல்மட்ட ரயில் நிலையங்களுடன் மெட்ரோ ரயில் திட்டம் விரிவுபடுத்தப்பட உள்ளது. 5 ஆண்டுகளில் நிறைவேற்றப்படும் இத் திட்டத்துக்கு ரூ.9,857.85 கோடி செலவாகும் என உத்தேசிக்கப்பட்டுள்ளது’ என்றாா்.