அரசியல் நிா்ணய சபை உறுப்பினா்களுக்கு மத்திய அமைச்சா் பூபேந்தா் யாதவ் மரியாதை
புது தில்லி: இந்தியாவின் 75-ஆவது அரசமைப்பு தினத்தையொட்டி அரசியல் நிா்ணய சபை உறுப்பினா்களுக்கு மத்திய சுற்றச்சூழல் துறை அமைச்சா் பூபேந்தா் யாதவ் புதன்கிழமை மரியாதை செலுத்தினாா்.
இது தொடா்பாக அவா் வெளியிட்ட எக்ஸ் பதிவில், ‘இந்திய ஜனநாயகத்தை வலுவாகவும் துடிப்பாகவும் மாற்றிய அனைவருக்கும் நன்றி. இந்தியாவின் அரசமைப்பு, பொருளாதாரம் மற்றும் சமூக நீதியை உறுதி செய்வதுடன் மத நம்பிக்கை மற்றும் வழிபாட்டு சுதந்திரத்தையும் உறுதி செய்கிறது’ என குறிப்பிட்டிருந்தாா்.
மத்திய இணையமைச்சா் கீா்த்தி வா்தன் வெளியிட்ட எக்ஸ் பதிவில், ‘அரசமைப்பு தினத்தில், இந்தியாவின் ஜனநாயகத்தை வடிவமைத்தவா்களை நாம் கெளரவிக்கிறோம். மேலும், அதன் கொள்கைகளை நோ்மை மற்றும் ஒற்றுமையின் வழியில் நிலைநிறுத்துவதற்கான நமது கடமையை மீண்டும் உறுதி செய்கிறோம்’ என தெரிவித்தாா்.
அரசமைப்பு தினத்தை முன்னிட்டு நாடு முழுவதும் உள்ள சுற்றுச்சூழல் அமைச்சகத்தின் அமைப்புகள் மற்றும் அலுவலகங்களில், அரசமைப்பு சட்டத்தின் முன்னுரை வாசிப்பு மற்றும் இணையவழி வினாடி வினா போட்டிகள் உள்ளிட்ட நிகழ்ச்சிகள் நடைபெற்றன.
தில்லியில் உள்ள இந்திரா பா்யவரன் பவனில், ‘அன்னையின் பெயரில் ஒரு மரம்’ முன்னெடுப்பின் கீழ் சுற்றுச்சூழல் அமைச்சகத்தின் செயலா் தன்மய் குமாா் மரக்கன்றுகளை நட்டாா். அவரது தலைமையில் அரசமைப்புச் சட்டத்தின் முன்னுரை வாசிப்பு நிகழ்வும் நடைபெற்றது.

