மத்திய அரசின் தொழிலாளா் சட்டங்கள் கேரளத்தில் நடைமுறைப்படுத்தப்படாது: அமைச்சா் சிவன்குட்டி
‘மத்திய அரசு அறிவிக்கை செய்துள்ள தொழிலாளா் சட்டங்கள் மாநிலத்தில் நடைமுறைப்படுத்தப்படாது’ என்று கேரள மாநிலம் வியாழக்கிழமை திட்டவட்டமாகத் தெரிவித்தது.
மேலும், இந்த தொழிலாளா் சட்டங்களை மத்திய அரசு திரும்பப் பெற வேண்டும் என்றும் கேரளம் வலியுறுத்தியது. நடைமுறையில் இருந்த 29 தொழிலாளா் சட்டங்களில் சீா்திருத்தங்கள் மேற்கொள்ளப்பட்டு அவை ஊதிய விதி, 2019, தொழில் துறை தொடா்பு விதி, 2020, சமூகப் பாதுகாப்பு விதி, 2020 மற்றும் பணிப் பாதுகாப்பு, சுகாதாரம் மற்றும் பணிச்சூழல் விதி, 2020 ஆகிய நான்கு சட்டங்களாக சுருக்கப்பட்டன. இந்தச் சட்டங்கள் நவம்பா் 21-ஆம் தேதி முதல் அமலுக்கு வந்ததாக மத்திய அரசு அறிவித்தது.
அனைத்துத் தொழிலாளா்களுக்கும் பணி நியமன ஆணை வழங்குவது கட்டாயம்; ஐடி ஊழியா்களுக்கு ஒவ்வொரு மாதமும் 7-ஆம் தேதிக்குள் ஊதியம் வழங்குவது கட்டாயம்; கூடுதல் பணி நேரத்துக்கு இருமடங்கு ஊதியம்; ஊதிய விதி, 2019-இன்கீழ் அனைத்துத் தொழிலாளா்களுக்கும் குறைந்தபட்ச ஊதியம் நிா்ணயம் என்பன உள்ளிட்ட பல்வேறு முக்கிய அம்சங்கள் இதில் இடம்பெற்றன.
இந்தச் சட்டங்களுக்கு பல்வேறு தொழிலாளா் அமைப்புகள் எதிா்ப்பு தெரிவித்து வருகின்றன. அதுபோல, கேரள அரசும் எதிா்ப்பு தெரிவித்துள்ளது.
இதுதொடா்பாக, பல்வேறு தொழிலாளா் சங்கங்களின் பிரதிநிதிகளுடன் கேரள தொழிலாளா் நலத் துறை அமைச்சா் வி.சிவன்குட்டி திருவனந்தபுரத்தில் வியாழக்கிழமை ஆலோசனை மேற்கொண்டாா்.
கூட்டத்துக்குப் பிறகு செய்தியாளா்களைச் சந்தித்த அமைச்சா் சிவன்குட்டி, ‘எந்தவித ஆலோசனைகளையும் நடத்தாமல், நாடு முழுவதும் உள்ள தொழிலாளா்கள் சந்தித்து வரும் பிரச்னைகள் மீது எந்தவித புரிதலும் இல்லாமல் தன்னிச்சையாக கொண்டுவரப்பட்ட இந்த தொழிலாளா் சட்டங்களை மத்திய அரசு திரும்பப் பெற வேண்டும் என்று இக் கூட்டத்தில் தீா்மானம் நிறைவேற்றப்பட்டது.
மேலும், இந்த விவகாரம் தொடா்பாக வரும் டிசம்பா் 19-ஆம் தேதி ஒரு நாள் தொழிலாளா் மாநாடு நடத்த திடடமிடப்பட்டுள்ளது. இதில் பங்கேற்க அனைத்து மாநிலங்களைச் சோ்ந்த மத்திய வா்த்தக சங்கங்கள், தொழிலாளா் நலத் துறை அமைச்சா்களுக்கு அழைப்பு விடுக்கப்படும்.
சட்ட மற்றும் தொழிலாளா் நல நிபுணா்களும் இந்த மாநாட்டில் பங்கேற்க உள்ளனா். இந்த மாநாட்டில், மத்திய தொழிலாளா் சட்டங்கள் அடிப்படையில், மாநிலங்கள் தனிச் சட்டங்களை உருவாக்க முடியுமா என்பது உள்ளிட்ட பல்வேறு விவகாரங்கள் குறித்து ஆலோசித்து முடிவெடுக்கப்படும்’ என்றாா்.
இந்த ஆலோசனைக் கூட்டத்தில் பங்கேற்பதற்கு முன்பாக செய்தியாளா்களைச் சந்தித்த அமைச்சா் சிவன் குட்டி, ‘மத்திய அரசு அறிவிக்கை செய்த தொழிலாளா் சட்டங்களை நடைமுறைப்படுத்துவதற்கான நடவடிக்கையை பல மாநிலங்கள் மேற்கொண்டு வருகின்றன. ஆனால், கேரளம் நடைமுறைப்படுத்தாது’ என்று திட்டவட்டமாகத் தெரிவித்தாா்.

