

கேரள மாநிலம் சபரிமலையில் அமைந்துள்ள ஐயப்பன் கோயிலுக்கு நாள்தோறும் லட்சக்கணக்கான பக்தர்கள் வந்து சுவாமி தரிசனம் செய்கிறார்கள். இவர்களுக்கு வழங்கப்படும் அன்னதான திட்ட உணவில் அதிரடி மாற்றம் செய்யப்பட்டுள்ளது.
இதுவரை, சபரிமலை ஐயப்பன் தேவஸ்வம் போர்டு நிர்வாகம் வழங்கி வந்த அன்னதானத்தில், சாதாரண புலாவ், சாம்பார் சாதம் என வழங்கப்பட்டு வந்தது. ஆனால், இதனை பொது மக்களின் பங்களிப்புடன் மாற்றி, புதிய அன்னதான திட்டமாகக் கொண்டு வர தேவஸ்வம் போர்டு முடிவு செய்து இன்று முதல் நடைமுறைக்குக் கொண்டு வந்துள்ளது.
இதுவரை, சாப்பாடு, சாம்பார் போன்றவை வழங்கப்பட்டு வந்தது. அது பக்தர்களுக்கு போதுமானதாக இல்லை. எனவே, கேரள சத்யா உணவை அன்னதானத்தில் இடம்பெற வைக்க தேவஸ்வம் வாரியம் முடிவு செய்து, அன்னதான உணவை பாயசம், அப்பளத்துடன் பரிமாற முடிவு செய்யப்பட்டு இன்று இந்த திட்டம் தொடங்கி வைக்கப்பட்டுள்ளது.
அதன்படி, வாழை இலையில், பாரம்பரிய கேரள சத்யா உணவு இன்று முதல் வழங்கப்படுகிறது. இதில் குறைந்தது 9 விதமான உணவு பரிமாறப்படும். சில சத்யா உணவுகளில் 24 வகை உணவுகள் பரிமாறப்படும். நேந்திரம் சிப்ஸ், அவியல், நெய் மற்றும் பருப்பு, சாம்பார், எரிசேரி, கிச்சடி, பச்சடி, மோர், ஊறுகாய், தேங்காய் சட்னிகள் என தொடர்ந்து நிறைவாக பாயசத்தில் முடியும். ஆனால், சபரிமலை ஐயப்பன் கோயில் சத்யா உணவில் என்னென்ன இடம்பெறும் என்ற தகவல் வெளியாகவில்லை.
இந்த அன்னதானத்துக்கு செலவிடும் தொகை தேவஸ்வம் வாரியத்துக்கு சொந்தமானது அல்ல என்றும் பக்தர்கள் வாரியத்திடம் ஒப்படைத்த நிதியையே பயன்படுத்தவிருப்பதாகவும் குறிப்பிட்டுள்ளது.
பக்தர்கள், வாரியத்துக்கு அளிக்கும் நிதியைப் பயன்படுத்தி, அன்னதானத்தை சிறப்பாக மேற்கொள்ள வாரியம் முடிவு செய்திருக்கிறது.
ஆண்டு முழுவதும் திறந்திருக்கும் ஏனைய கோயில்களைப் போல அல்லாமல், வழக்கமாக கார்த்திகை மாதம் முதல் தை மாதம் வரை மட்டுமே சபரிமலை ஐயப்பன் கோயில் நடை திறந்திருக்கும் என்பதால், இந்த மாதங்களில் லட்சக்கணக்கான பக்தர்கள் கோயிலுக்கு மாலை அணிந்து விரதமிருந்து சுவாமி ஐயப்பனை தரிசிக்க வருகிறார்கள்.
இவர்களுக்கு சிறப்பான உணவளிக்க தேவஸ்வம் வாரியம் முடிவு செய்திருப்பது வரவேற்கத்தக்கதாக உள்ளது.
இதையும் படிக்க..
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.