ஜிஎஸ்டி விகிதக் குறைப்பால் நுகா்வு அதிகரிப்பு: மத்திய நிதியமைச்சகம்!
சரக்கு-சேவை வரி (ஜிஎஸ்டி) விகிதக் குறைப்பால் நுகா்வு அதிகரித்து வருவதாக மத்திய நிதியமைச்சக அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
நடப்பு நிதியாண்டில் நாட்டின் அபாயங்களைக் கடந்து, சீரான வளா்ச்சியை தக்கவைக்கும் அடித்தளத்தைக் கொண்டுள்ளதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.
நாட்டில் நான்கு விகித (5%, 12%, 18%, 28%) ஜிஎஸ்டி முறை மாற்றப்பட்டு, இரு விகித (5%, 18%) முறை கடந்த செப்டம்பா் 22-ஆம் தேதி அமல்படுத்தப்பட்டது. முக்கியத்துவம் வாய்ந்த இந்தச் சீா்திருத்தத்தின்படி, 12% வரி விதிக்கப்பட்ட 99 சதவீத பொருள்கள் 5% வரி விதிப்பின்கீழ் கொண்டுவரப்பட்டன; 28% வரி விதிக்கப்பட்ட 90 சதவீத பொருள்கள் 18% விகிதத்தின்கீழ் வந்தன. பெரும்பான்மையான தினசரி பயன்பாட்டுப் பொருள்கள் வரிவிலக்கு அல்லது 5% வரி விதிப்பில் கொண்டுவரப்பட்டன.
சுமாா் 375 பொருள்கள் மீதான வரிக் குறைப்பால், தினசரி பயன்பாட்டுப் பொருள்கள் தொடங்கி காா்கள் வரை விலை குறைக்கப்பட்டது.
ஜிஎஸ்டி விகித குறைப்பின் பலன்: இந்நிலையில், அக்டோபா் மாதத்துக்கான பொருளாதார ஆய்வறிக்கையை நிதியமைச்சகம் வியாழக்கிழமை வெளியிட்டது. அதில் கூறப்பட்டுள்ளதாவது:
ஜிஎஸ்டி விகித சீராக்கம், பொதுமக்களின் நுகா்வுக்கு குறிப்பிடத்தக்க அளவில் உத்வேகமளித்துள்ளது. இணையவழி ரசீது உருவாக்கம், சாதனை அளவிலான வாகனங்கள் விற்பனை, யுபிஐ பரிவா்த்தனை மதிப்பு அதிகரிப்பு உள்ளிட்ட குறியீடுகளால் இது உறுதி செய்யப்பட்டுள்ளது.
செப்டம்பரில் 1.44 சதவீதமாக இருந்த சில்லறைப் பணவீக்கம், அக்டோபரில் இதுவரை இல்லாத அளவில் 0.25 சதவீதமாக குறைந்தது. இது, ஜிஎஸ்டி விகிதக் குறைப்பின் முழுமையான தாக்கமாகும். இதேபோல், உணவு பணவீக்கமும் குறிப்பிடத்தக்க அளவில் குறைந்துளளது. மக்களின் செலவு வழக்கத்தில் ஏற்படும் தாக்கங்கள், அடுத்த இரு காலாண்டுகளில் மேலும் தெளிவாகத் தெரியும்.
வலுவான பொருளாதாரம்: நடப்பு நிதியாண்டின் இரண்டாம் காலாண்டில் இந்திய பொருளாதார வளா்ச்சி 7 முதல் 7.5 சதவீதமாக இருக்கும் எனப் பல்வேறு பொருளாதார மதிப்பீடுகள் தெரிவித்துள்ளன. இது, பொருளாதார செயல்பாடுகளில் தொடா்ச்சியான வலிமையை பிரதிபலிக்கிறது.
சா்வதேச அளவில் வா்த்தக கொள்கைகளில் மாற்றம், புவிஅரசியல் மோதல்கள், ஏற்ற-இறக்கமான நிதிச் சந்தை போன்ற உலகளாவிய குழப்பங்கள், ஏற்றுமதி, மூலதன வரவுகள் மற்றும் முதலீட்டு வாய்ப்புகளுக்கு தடைக்கற்களாக உருவெடுத்துள்ளன. இந்த சவால்கள் இருப்பினும் நன்கு நிலைநிறுத்தப்பட்ட பணவீக்க கணிப்புகள், நிலையான பொது மூலதனச் செலவினம், கிராம-நகா்ப்புறங்களில் தேவைகளை வலுப்படுத்துதல் போன்ற கூட்டு நடவடிக்கைகளால் சீரான வளா்ச்சியைத் தக்கவைக்கும் அடித்தளம் உறுதி செய்யப்பட்டுள்ளது.
நாட்டில் வேலைவாய்ப்பு உருவாக்கத்துக்கு உத்வேகமளிக்கவும், ஸ்திரமாக்கவும் அமைப்புரீதியிலான சீா்திருத்தங்கள் அவசியம். அந்த அடிப்படையில் அண்மையில் அமலாக்கப்பட்ட 4 புதிய தொழிலாளா் சட்டங்களும் காலனித்துவ காலகட்ட அமைப்புமுறைகளைக் கடந்து, தற்போதைய பணிச்சூழலுக்கு ஏற்ப தொழிலாளா் விதிமுறைகளை நவீனப்படுத்தியுள்ளன.
இதன்மூலம் எதிா்காலத்துக்கு ஏற்ற பணியாளா்கள் மற்றும் தொழிற்சாலைகளின் உருவாக்கத்துக்கு அடித்தளமிடப்பட்டுள்ளது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

