

வெளிநாடுகளில் உள்ள சொத்துகளை கணக்கில் காட்டாதவர்கள் மீண்டும் 2025 டிசம்பர் இறுதிக்குள் முழுமையான வரிக் கணக்கை தாக்கல் செய்ய வேண்டும் என்று வருமான வரித் துறை அறிவுறுத்தியுள்ளது.
முதல்கட்டமாக, வெளிநாட்டில் அதிக சொத்துகள் இருந்தும் அதைக் கணக்குக் காட்டாத 25,000 பேருக்கு குறுஞ்செய்தி (எஸ்எம்எஸ்) மற்றும் மின்னஞ்சல் மூலம் அறிவுறுத்தல்கள் வழங்கப்படவுள்ளன.
வெளிநாடுகளில் இருந்து தகவல்கள் பெறும் ஒப்பந்தத்தின்படி வெளிநாடுகளில் உள்ள இந்தியர்களின் சொத்து, வருமான விவரங்கள் பெறப்பட்டுள்ளன. இந்த நபர்கள் இந்தியாவில் வருமான வரிக் கணக்குத் தாக்கலின்போது அந்த விவரங்களைத் தெரிவிக்கவில்லை என்பதை வருமான வரித் துறை கண்டறிந்துள்ளது.
அதன் அடிப்படையில் முதல்கட்டமாக மீண்டும் முழு சொத்து விவரங்களுடன் வரிக் கணக்கைத் தாக்கல் செய்ய அறிவுறுத்தல்கள் வழங்கப்படவுள்ளது.
பெரு நிறுவனங்களில் பணியாற்றுவோர் உள்ளிட்ட பலர் வெளிநாடுகளிலும் சொத்துகளை வைத்துள்ளனர். அவர்களில் பலர் வெளிநாட்டு சொத்துகளை கணக்கில் காட்டவில்லை என்று தெரிகிறது. முதல் கட்டமாக 25,000 பேருக்கு மீண்டும் வருமான வரிக் கணக்கை தாக்கல் செய்ய வலியுறுத்தப்படவுள்ளது.
இரண்டாவது கட்டமாக, வெளிநாட்டில் சொத்துகள் வைத்திருப்போர் வருமான வரித் தாக்கலில் அதைக் தெரிவிக்க வேண்டிய அவசியம் குறித்து டிசம்பர் மத்தியில் விழிப்புணர்வு பிரசாரம் மேற்கொள்ளப்பட இருக்கிறது. இது தொடர்பாக தொழில், வர்த்தக சம்மேளனங்களும் உரிய நடவடிக்கை எடுக்கும் என்று தெரிகிறது.
வெளிநாடுகளில் உள்ள சொத்துகளை வருமான வரிக் கணக்குத் தாக்கலின்போது தெரிவிக்கவில்லை என்றால் கருப்புப் பணத் தடுப்புச் சட்டத்தின்கீழ் ரூ.10 லட்சம் வரை அபராதம், கணக்கில் காட்டாத சொத்து மீது 30 சதவீத வரி மற்றும் 300 சதவீத அபராதம் விதிக்க முடியும் என்பது குறிப்பிடத்தக்கது.
கடந்த ஆண்டும் வருமான வரித் துறை இதேபோன்ற விழிப்புணர்வு நடவடிக்கை மேற்கொண்டது. இதன்மூலம் 24,678 பேர் வெளிநாடுகளில் உள்ள தங்கள் சொத்து விவரங்களைத் தெரிவித்து வரிக் கணக்கை தாக்கல் செய்தனர். ரூ.29,208 கோடி மதிப்பிலான வெளிநாட்டு சொத்துகள், ரூ.1,089.88 கோடி வெளிநாட்டு வருவாய் கணக்கில் காட்டப்பட்டது.
துபையில் இந்தியர்கள் மேற்கொண்ட முதலீட்டில் இருந்து கிடைத்த வருவாய்க்கு உரிய கணக்கு காட்டாதவர்கள் வீடுகளில் ஏற்கெனவே வருமான வரி சோதனையும் நடைபெற்றுள்ளது. தில்லி, மும்பை, புணேயில் இந்தச் சோதனை நடத்தப்பட்டது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.