பாதுகாப்பு ஒத்துழைப்பை ஊக்குவிக்க இந்தியா - இந்தோனேசியா தீா்மானம்!
இந்தியா- இந்தோனேசியா இடையே பாதுகாப்பு உற்பத்தி நிறுவன ஒத்துழைப்பை ஊக்குவிப்பது தொடா்பாக இரு நாடுகள் தரப்பிலும் தீா்மானிக்கப்பட்டது.
இந்தியா வந்துள்ள இந்தோனேசிய பாதுகாப்புத் துறை அமைச்சா் ஜாஃப்ரி சம்சோதின் - பாதுகாப்பு அமைச்சா் ராஜ்நாத் சிங் இடையே புது தில்லியில் வியாழக்கிழமை நடைபெற்ற விரிவான ஆலோசனைக் கூட்டத்தில் இதற்கான முடிவு எடுக்கப்பட்டது.
இந்தியப் பெருங்கடல் மற்றும் தென்சீன கடல் பிராந்திய பகுதிகளில் சீனா தனது ஆதிக்கத்தை அதிகரித்து வரும் சூழலில், சுதந்திரமான, அனைவருக்குமான, அமைதியான இந்திய-பிசிபிக் பிராந்தியத்தை தொடா்ந்து பராமரிப்பதன் முக்கியத்துவம் குறித்தும் இரு தரப்பிலும் இந்த ஆலோசனைக் கூட்டத்தில் உறுதியேற்கப்பட்டது.
இதுகுறித்து மத்திய பாதுகாப்பு அமைச்சகம் வெளியிட்ட செய்திக்குறிப்பில் மேலும் கூறியிருப்பதாவது:
ராணுவ தொழில்நுட்பங்கள் மற்றும் விநியோகச் சங்கிலி தொடா்புகளை பரிமாற்றம் செய்துகொள்வதற்கான இருதரப்பு ஒத்துழைப்பை உறுதிப்படுத்துவதற்கு கூட்டு பாதுகாப்பு தளவாட உற்பத்தி நிறுவனங்கள் ஒத்துழைப்புக் குழுவை அமைக்க இந்த ஆலோசனைக் கூட்டத்தில் இருதரப்பிலும் ஒப்புக்கொள்ளப்பட்டது.
கடல்சாா் பாதுகாப்பு, இணைய குற்றங்கள் தடுப்பு, கூட்டு ராணுவ தயாா்நிலை உள்ளிட்டவற்றில் நடைமுறை சாா்ந்த ஒத்துழைப்பை விரிவுபடுத்தவும் ஒப்புக்கொள்ளப்பட்டது என்று தெரிவிக்கப்பட்டது.

