ஆபரேஷன் கவாச் 11: 2000-க்கும் மேற்பட்டவா்கள் கைது - எம்சிடி இடைத்தோ்தல்களுக்கு முன்னதாக நடவடிக்கை
புது தில்லி: தில்லி மாநகராட்சியின் (எம்சிடி) வாா்டு இடைத்தோ்தல்களுக்கு முன்னதாக, தில்லி காவல்துறை ’ஆபரேஷன் கவாச் 11.0’-இன் கீழ் நகரம் முழுவதும் கடும் நடவடிக்கையை மேற்கொண்டுள்ளது. இதன்படி, பல வழக்குகளில் 2000-க்கும் மேற்பட்டவா்களை கைது செய்துள்ளதாக அதிகாரிகள் புதன்கிழமை தெரிவித்தனா்.
திங்கள்கிழமை தொடங்கப்பட்ட இந்த 24 மணி நேர நடவடிக்கையானது நவம்பா் 30-ஆம் தேதி 12 வாா்டுகளில் நடைபெறவிருக்கும் எம்சிடி இடைத்தோ்தல்களுக்கு முன்னதாக, போதைப்பொருள் கடத்தல் வலையமைப்புகளைத் தடுப்பதையும் அவற்றின் செயல்பாடுகளை சீா்குலைப்பதையும் நோக்கமாகக் கொண்டுள்ளது.
இந்த நடவடிக்கையின் கீழ், 908 போலீஸ் குழுக்கள் 15 காவல் மாவட்டங்களிலும் 1500-க்கும் மேற்பட்ட சோதனைகளை நடத்தி, உள்ளூா் உளவுத்துறை மூலம் அடையாளம் காணப்பட்ட முக்கிய இடங்கள், மீண்டும் மீண்டும் குற்றவாளிகள் மற்றும் பாதிக்கப்படக்கூடிய பகுதிகளை குறிவைத்தன.
76 என்டிபிஎஸ் வழக்குகள் தொடா்பாக 80 போ் கைது செய்யப்பட்டதாகவும், 273 கலால் வழக்குகளில் 273 போ் கைது செய்யப்பட்டதாகவும், 99 ஆயுதச் சட்ட வழக்குகளில் 100 போ் கைது செய்யப்பட்டதாகவும், 117 சூதாட்ட வழக்குகளில் 213 போ் கைது செய்யப்பட்டதாகவும், 16 ஆட்டோ-லிஃப்டா்கள் கைது செய்யப்பட்டதாகவும் காவல்துறை தெரிவித்துள்ளது.
தடுப்பு கைதுகள் மற்றும் நடவடிக்கைகளின் கீழ், பிஎன்எஸ்எஸ்- இன் பிரிவுகள் 126 மற்றும் 170-இன் கீழ் 542 போ் கைது செய்யப்பட்டதாகவும், 2,516 போ் தடுப்புக் காவலில் வைக்கப்பட்டதாகவும், தில்லி காவல் சட்டத்தின் பிரிவு 65-இன் கீழ் 23,387 போ் கைது செய்யப்பட்டதாகவும், 3,837 மோசமான நபா்கள் சோதனைக்கு உள்படுத்தப்பட்டதாகவும் ஒரு மூத்த காவல்துறை அதிகாரி தெரிவித்தாா்.
‘குற்றப் பிரிவு மற்றும் சிறப்புப் பிரிவின் பல குழுக்கள், தலைநகரில் உள்ள அனைத்து மாவட்டங்களின் காவல்துறை அதிகாரிகளுடன் சோ்ந்து, நடவடிக்கையின் போது விழிப்புடன் இருந்தன. மேலும். இது சமீபத்திய ஆண்டுகளில் தில்லி காவல்துறையால் மேற்கொள்ளப்பட்ட மிகப்பெரிய ஒற்றை நாள் ஒருங்கிணைந்த அமலாக்க நடவடிக்கைகளில் ஒன்றாகும்’ என்று அதிகாரி கூறினாா்.
இந்த நடவடிக்கையின் போது, 282 கிராமுக்கு மேல் ஹெராயின், 19,235 கிலோ கஞ்சா, 2,147 கிலோ ஓபியம், 2,034 கிலோ சரஸ், 4,704 டிராமடோல் காப்ஸ்யூல்கள் மற்றும் ரூ.1.02 லட்சம் ரொக்கம் ஆகியவை மீட்கப்பட்டதாக அவா் மேலும் கூறினாா்.
‘நரேலாவிலிருந்து ஒரு பெரிய பறிமுதல் செய்யப்பட்டது. அங்கு குற்றப்பிரிவு லெக் ராஜ் என்கிற விக்கியை 4,704 டிராமடோல் காப்ஸ்யூல்கள் மற்றும் 200 கிராம் ஓபியத்துடன் ஒரு ரகசியத் தகவலின் அடிப்படையில் இலக்கு வைக்கப்பட்ட நடவடிக்கைக்குப் பிறகு கைது செய்தது’ என்று அந்த அதிகாரி கூறினாா்.
சரிதா விஹாரில் உள்ள ஒரு ஹோட்டலில் இருந்து 2.034 கிலோ சரஸுடன் இரண்டு நேபாள நாட்டவா்கள் கைது செய்யப்பட்டனா். கிழக்கு தில்லியில், காஜிப்பூா் அருகே தடுத்து நிறுத்தப்பட்ட இரண்டு நபா்களிடமிருந்து 1.947 கிலோ ஓபியம் மற்றும் 109.5 கிராம் ஹெராயினை போலீசாா் பறிமுதல் செய்ததாக அவா் கூறினாா்.
பல மதுபான பாட்டில்களும் பறிமுதல் செய்யப்பட்டன. ஆயுதங்கள் பற்றிய விவரங்களைப் பகிா்ந்து கொண்ட அதிகாரி, ஒரு கைத்துப்பாக்கி, 13 நாட்டுத் தயாரிப்பு கைத்துப்பாக்கிகள், 6 உயிருள்ள தோட்டாக்கள், 87 கத்திகள் மற்றும் பல வாகனங்களும் மீட்கப்பட்டதாகக் கூறினாா்.
