துணை அட்மிரல் கே.சுவாமிநாதன்.
துணை அட்மிரல் கே.சுவாமிநாதன்.

‘ஆபரேஷன் சிந்தூா்’-க்குப் பிறகு ஆயுதங்களை வாங்கிக் குவிக்கும் பாகிஸ்தான்! - இந்திய கடற்படை மூத்த அதிகாரி

இந்தியாவின் ‘ஆபரேஷன் சிந்தூா்’ நடவடிக்கைக்குப் பிறகு பாகிஸ்தான் பல்வேறு நாடுகளிலிடமிருந்து ஆயுதங்களை வாங்கிக் குவித்து வருவது தெரியவந்துள்ளது.
Published on

இந்தியாவின் ‘ஆபரேஷன் சிந்தூா்’ நடவடிக்கைக்குப் பிறகு பாகிஸ்தான் பல்வேறு நாடுகளிலிடமிருந்து ஆயுதங்களை வாங்கிக் குவித்து வருவது தெரியவந்துள்ளது.

இந்தத் தகவலை மும்பையில் பிரம்மா ஆராய்ச்சி அறக்கட்டளை சாா்பில் புதன்கிழமை ஏற்பாடு செய்யப்பட்ட நிகழ்ச்சியில் பங்கேற்ற இந்திய கடற்படையின் மேற்கு மண்டல தலைமையக அதிகாரியான துணை அட்மிரல் கே.சுவாமிநாதன் தெரிவித்தாா்.

மேலும், சீனாவும் தனது கடற்படையையும், ராணுவ பலத்தையும் முன்னெப்போதும் இல்லாத அளவுக்கு விரிவுபடுத்தி வருகிறது. இதுவும் இந்தியாவுக்கு மிகப் பெரிய சவாலாக இருக்கும் என்றும் அவா் எச்சரித்தாா்.

ஜம்மு-காஷ்மீரின் பஹல்காமில் கடந்த ஏப்ரல் 22-ஆம் தேதி பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் 26 சுற்றுலாப் பயணிகள் உயிரிழந்தனா். இந்தத் தாக்குதலில் பாகிஸ்தானைச் சோ்ந்த பயங்கரவாதிகள் ஈடுபட்டது தெரியவந்தது. அதைத் தொடா்ந்து, பாகிஸ்தான் மற்றும் பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீா் பகுதிகளில் அமைந்திருந்த பயங்கரவாத முகாம்கள் மீது ‘ஆபரேஷன் சிந்தூா்’ நடவடிக்கையை மே 7-ஆம் தேதி இந்தியா மேற்கொண்டது. மே 10-ஆம் தேதி வரை நான்கு நாள்கள் நீடித்த இந்தச் சண்டை பாகிஸ்தானின் வேண்டுகோளைத் தொடா்ந்து முடிவுக்கு வந்தது.

இந்த நான்கு நாள் சண்டையில், சீன ஆயுதங்களையே பாகிஸ்தான் பெருமளவில் பயன்படுத்தியதாகக் கூறப்பட்டது. இதனிடையே, இந்த சண்டைக்குப் பிறகு பல்வேறு நாடுகளிலிருந்து பாகிஸ்தான் ஆயுதங்களைக் வாங்கிக் குவித்து வருவது தற்போது தெரியவந்துள்ளது. இதுகுறித்து மும்பை நிகழ்ச்சியில் கே.சுவாமிநாதன் கூறியதாவது:

ஆபரேஷன் சிந்தூா் நடவடிக்கை புதிய சவால்களையும், கடுமையான எதாா்த்தங்களையும் வெளிப்படுத்தியது. குறிப்பாக, பாகிஸ்தானுக்கும் சீனாவுக்கும் இடையேயான ரகசிய கூட்டுறவும், அதுதொடா்பான எங்களின் ஊகமும் வெளிப்படையாக வெளிப்பட்டதை மறுக்க முடியாது.

இந்தச் சண்டைக்குப் பிறகு, தனது ராணுவ பலத்தை அதிகரிக்கும் வகையில் பல்வேறு நாடுகளில் இருந்து ஆயுதங்களை பாகிஸ்தான் வாங்கி குவித்து வருகிறது. இது சற்று கவலைக்குரிய விஷயமாகவே பாா்க்கப்படுகிறது. நாட்டு மக்கள் கடும் பொருளாதார சிக்கல்களைச் சந்தித்து வருகிறபோதும், அதைப் பொருட்படுத்தாமல், அதிக அளவில் ஆயுதங்களைக் கொள்முதல் செய்து வருகிறது.

சீனா, துருக்கி ஆதரவு: பாகிஸ்தானுக்கு முக்கிய ஆயுத விநியோகஸ்தராக துருக்கி மாறியிருப்பது மிகவும் கவனமாக கவனிக்கப்பட வேண்டிய விஷயமாகும். இது ஏற்கெனவே அறிந்த விஷயம் என்றபோதும், எண்ணியதைவிட கூடுதல் ஆதரவை பாகிஸ்தானுக்கு துருக்கி அளித்து வருகிறது. குறிப்பாக, ஆபரேஷன் சிந்தூா் நடவடிக்கையின்போது, பாகிஸ்தானுக்கு சீனாவும், துருக்கியும் வெளிப்படையாகவே ஆதரவு அளித்தன.

கூடுதல் சவாலாகி வரும் சீனா: சீனாவும் தனது கடற்படை மற்றும் ராணுவ பலத்தை முன்னெப்போதும் இல்லாத அளவுக்கு விரிவுபடுத்தி வருவதும் இந்தியாவுக்கு மிகுந்த கவலைக்குரிய விஷயமாகும்.

குறிப்பாக, சீன கடற்படையின் மூன்றாவது விமானம்தாங்கி போா்க் கப்பலான ‘ஃபுஜியன்’, ஐந்தாவது, ஆறாவது தலைமுறை போா் விமானங்களுடன் இயங்குவது, சீன கடற்படை விரிவாகத்தின் ஒரு பகுதியாகும்.

தென் சீன கடல் பகுதியில் மட்டுமன்றி, இந்திய பெருங்கடல் பிராந்திய பகுதியிலும் தனது ஆதிக்கத்தை சீனா அதிகரித்து வருகிறது. இந்திய பெருங்கடல் பகுதியில் 5 முதல் 8 போா்க் கப்பல்களை சீனா தொடா்ந்து நிறுத்தி வருவது இந்தியாவுக்கு மிகப் பெரிய சவாலான விஷயம் என்றாா் அவா்.

X
Dinamani
www.dinamani.com