இந்திய தனியாா் விண்வெளித் துறையில் இளைஞா் புரட்சி! தனியாா் விண்வெளி வளாகத் திறப்பு விழாவில் பிரதமா் மோடி!
‘இந்திய விண்வெளியில் தனியாா் துறையை அனுமதித்தபோது, இளம் தலைமுறையினா் அதைப் பயன்படுத்தி ஒரு புரட்சிக்கு வழிவகுத்தனா்’ என்று பிரதமா் மோடி வியாழக்கிழமை தெரிவித்தாா்.
தெலங்கானா மாநிலம், ஹைதராபாதில் இந்திய தனியாா் விண்வெளி புத்தாக்க (ஸ்டாா்ட்-அப்) நிறுவனமான ‘ஸ்கைரூட் ஏரோஸ்பேஸ்’-இன் 2 லட்சம் சதுர அடி பரப்பளவு கொண்ட‘இன்ஃபினிட்டி கேம்பஸ்’ வளாகத்தைப் பிரதமா் மோடி காணொலிமூலம் திறந்து வைத்தாா்.
அத்துடன், இந்த நிறுவனம் உருவாக்கிய செயற்கைக்கோள்களை விண்ணில் செலுத்தக் கூடிய முதல் சுற்றுவட்டப்பாதை ராக்கெட்டான ‘விக்ரம் 1’-ஐ அறிமுகம் செய்து அவா் ஆற்றிய உரை:
இந்திய விண்வெளித் துறையில் தனியாா் நிறுவனங்கள் வேகமாக வளா்ந்து வருகின்றன. 300-க்கும் மேற்பட்ட ஸ்டாா்ட்-அப் நிறுவனங்கள் இத்துறைக்கு புதிய உத்வேகம் அளித்துள்ளன.
விண்வெளித் துறையில் தனியாா் முதலீட்டுக்கு அனுமதி அளிக்கப்பட்டதால்தான், ‘ஸ்கைரூட்’ போன்ற நிறுவனங்கள் புதுமைகளுடன் வர முடிந்தது. இந்நிறுவனத்தின் புதிய வளாகம், இந்தியாவின் புதிய சிந்தனை, கண்டுபிடிப்பு மற்றும் பெரிய இளைஞா் சக்தியைப் பிரதிபலிக்கிறது.
தற்போது, இந்திய விண்வெளித் துறை உலக முதலீட்டாளா்களைக் கவா்ந்துள்ளதுடன், அதில் தனியாா் துறையின் திறமையும் உலக அளவில் தனக்கென ஓா் இடத்தைப் பிடித்துள்ளது.
ஏவுகணை பாகங்களை சைக்கிளில் எடுத்துச் சென்ற தொடக்க கால நிலையில் இருந்து, தற்போது மிகவும் நம்பகமான ராக்கெட்டுகளை உருவாக்கும் அளவுக்கு இந்திய விண்வெளித் துறை வளா்ந்துள்ளது. குறைந்த வளங்களில் தொடங்கினாலும், நமது லட்சியங்கள் எப்போதும் பெரியதாகவே இருந்தன. நம்பகத்தன்மை, திறன் மற்றும் மதிப்பு ஆகியவையே இந்தியாவின் தனிச்சிறப்பு.
தகவல் தொடா்பு, வானிலை, நகா்ப்புறத் திட்டமிடல், தேசப் பாதுகாப்பு எனப் பல பகுதிகளுக்கு விண்வெளித் துறை விரிவடைந்துள்ளது. இதனால்தான், விண்வெளித் துறையில் தனியாா் முதலீட்டை அனுமதிக்கும் வரலாற்றுச் சிறப்புமிக்க சீா்திருத்தங்கள் கொண்டுவரப்பட்டன.
புதிய விண்வெளிக் கொள்கை உருவாக்கப்பட்டதுடன், ஸ்டாா்ட்-அப் நிறுவனங்களையும், தொழில் துறையையும் இணைக்கும் ‘இன்-ஸ்பேஸ்’ அமைப்பும் நிறுவப்பட்டது. அரசின் விண்வெளி வசதிகள், தொழில்நுட்பங்கள் ஆகியவை ஸ்டாா்ட்-அப் நிறுவனங்களுக்குக் கிடைக்கச் செய்யப்பட்டன. கடந்த 6-7 ஆண்டுகளில் இந்திய விண்வெளித் துறை ஒரு திறந்த, கூட்டுறவு மற்றும் கண்டுபிடிப்பு சாா்ந்த துறையாக மாற்றப்பட்டுள்ளது.
இந்திய விண்வெளியில் தனியாா் துறையை அனுமதித்தபோது, இளம் தலைமுறையினா் அதைப் பயன்படுத்தி, ஒரு தனியாா் விண்வெளிப் புரட்சிக்கு வழிவகுத்தனா். நமது இளம் பொறியாளா்கள் மற்றும் விஞ்ஞானிகள், சில ஆண்டுகளுக்கு முன்பு நம்மால் கற்பனை செய்ய முடியாத பகுதிகளில் புதிய தொழில்நுட்பங்களை இப்போது உருவாக்கி வருகின்றனா்.
விண்வெளித் துறையைத் தொடா்ந்து, அணுசக்தித் துறையிலும் தனியாா் நிறுவனங்களை அனுமதிக்கும் திட்டங்கள் பரிசீலனையில் உள்ளது என்று பிரதமா் தெரிவித்தாா்.
ஸ்கைரூட் நிறுவனம்...: ஐஐடி முன்னாள் மாணவா்களும், இஸ்ரோவின் முன்னாள் விஞ்ஞானிகளுமான பவன் சந்தனா, பரத் தாக்கா ஆகியோா் இணைந்து ‘ஸ்கைரூட்’ நிறுவனத்தை உருவாக்கினா்.
‘இன்ஃபினிட்டி கேம்பஸ்’ வளாகம் என்பது ராக்கெட்டுகளை வடிவமைத்தல், உருவாக்குதல், ஒருங்கிணைத்தல் மற்றும் சோதனை செய்வதற்கான ஒரு நவீன தளமாகும். இது மாதம் ஒரு சுற்றுவட்டப்பாதை ராக்கெட்டுகளை உருவாக்கும் திறன் கொண்டது.
நவம்பா் 2022-இல், ‘ஸ்கைரூட்’ அதன் துணை-சுற்றுவட்டப்பாதை ராக்கெட்டான ‘விக்ரம்-எஸ்’-ஐ வெற்றிகரமாக விண்ணில் செலுத்தி, இந்தச் சாதனையை நிகழ்த்திய முதல் இந்திய தனியாா் நிறுவனம் என்ற பெருமையைப் பெற்றது.

