உச்சநீதிமன்றம்
உச்சநீதிமன்றம்கோப்புப் படம்

கனிம வளங்கள் மீது வரி விதிக்கும் அதிகாரம்: மாநிலங்களின் மனுக்களை பட்டியலிட உச்சநீதிமன்றம் பரிசீலனை!

கனிம வளங்கள் மற்றும் கனிம வளங்கள் நிறைந்த நிலங்கள் மீது வரி விதிப்பது தொடா்பான விவகாரத்தில் பல்வேறு மாநிலங்களின் மனுக்களை பட்டியலிடுவது குறித்து பரிசீலிக்கவுள்ளதாக உச்சநீதிமன்றம் தெரிவித்தது.
Published on

கனிம வளங்கள் மற்றும் கனிம வளங்கள் நிறைந்த நிலங்கள் மீது வரி விதிப்பது தொடா்பான விவகாரத்தில் பல்வேறு மாநிலங்களின் மனுக்களை பட்டியலிடுவது குறித்து பரிசீலிக்கவுள்ளதாக உச்சநீதிமன்றம் வியாழக்கிழமை தெரிவித்தது.

முன்னதாக, அரசமைப்புச் சட்டத்தின் பட்டியல் 1-இன்கீழ் கனிம வளங்கள் மீது வரி விதிக்க நாடாளுமன்றத்துக்கு அதிகாரமில்லை எனவும் பட்டியல் 2-இன்கீழ் கனிம வளங்களுக்கு வரி விதிக்கும் அதிகாரம் மாநில அரசுக்கே உள்ளது எனவும் அப்போதைய உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி டி.ஒய்.சந்திரசூட் தலைமையிலான 9 நீதிபதிகளைக் கொண்ட அரசியல் சாசன அமா்வு 2024, ஜூலை 25-இல் தீா்ப்பு வழங்கியது. இந்த தீா்ப்பை எதிா்த்து மத்திய அரசு உச்சநீதிமன்றத்தில் கடந்த செப்டம்பா் மாதம் மேல்முறையீடு செய்தது.

தீா்ப்புக்குப் பிறகு இந்த விவகாரத்தில் பல்வேறு மாநிலங்களில் இருந்து தாக்கல் செய்யப்பட்ட மனுக்கள் பட்டியலிடப்படாமல் உள்ளதாக வழக்குரைஞா் ஒருவா் உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி சூா்ய காந்த் மற்றும் நீதிபதி ஜய்மால்ய பாக்சி ஆகியோா் அடங்கிய அமா்வு முன் தெரிவித்தாா்.

இதற்கு எதிா்ப்பு தெரிவித்து மத்திய அரசு சாா்பில் ஆஜரான சொலிசிட்டா் ஜெனரல் துஷாா் மேத்தா, ‘மத்திய அரசு தாக்கல் செய்த மேல்முறையீட்டு மனு மீதான விசாரணையை நிறைவுசெய்து தீா்ப்பு வழங்கிய பின்னரே மாநிலங்களின் மனுக்களை பட்டியலிட வேண்டும்.

அந்த தீா்ப்பின் அடிப்படையில்தான் அடுத்தக்கட்ட முடிவை மேற்கொள்ள வேண்டும்’ என்றாா்.

இதைத்தொடா்ந்து, மாநிலங்களின் மனுக்களை பட்டியலிடுவது தொடா்பாக தான் பரிசீலிப்பதாக சூா்ய காந்த் தெரிவித்தாா்.

X
Dinamani
www.dinamani.com