வெளிநாட்டு சமூக ஊடகம் மூலம் இந்தியாவுக்கு எதிரான கருத்தை பரப்புகிறார் ராகுல்: பாஜக குற்றச்சாட்டு

வெளிநாடுகளில் சமூக ஊடகங்கள் மூலம் இந்தியாவுக்கு எதிரான கருத்தை ராகுல் காந்தி கட்டமைப்பதாக பாஜக குற்றம்சாட்டியுள்ளது.
ராகுல் காந்தி
ராகுல் காந்தி கோப்புப் படம்
Updated on
2 min read

மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி மற்றும் இடதுசாரிக் கட்சிகளின் தூண்டுதலின்பேரில் பாகிஸ்தான், வங்கதேசம், மலேசியா, சிங்கப்பூர் உள்ளிட்ட வெளிநாடுகளில் சமூக ஊடகங்கள் மூலம் இந்தியாவுக்கு எதிரான கருத்தைக் கட்டமைப்பதாக பாஜக குற்றம்சாட்டியுள்ளது.

தில்லியில் உள்ள பாஜகவின் தலைமையகத்தில் அக்கட்சி எம்.பி.யும் தேசிய செய்தித் தொடர்பாளருமான சம்பித் பத்ரா, செய்தியாளர்களை வியாழக்கிழமை சந்தித்தார். அப்போது, வெளிநாட்டில் இருந்து உருவாக்கப்பட்ட பல்வேறு எக்ஸ் தளப் பக்கங்களை அவர் செய்தியாளர்களிடம் காண்பித்தார்.

வாக்குத் திருட்டு தொடர்பாக காங்கிரஸ் எழுப்பும் குற்றச்சாட்டு உள்பட தேர்தல் ஆணையம், பாஜக- ஆர்எஸ்எஸ், பிரதமர் மோடி ஆகியோருக்கு எதிரான பிரசாரம் அவற்றில் இடம்பெற்றிருந்தது. அதைத் தொடர்ந்து சம்பித் பத்ரா கூறியதாவது:

கடந்த 2014ஆம் ஆண்டு முதல் பிரதமரையும் இந்தியாவையும் அவமதிக்க ராகுல் காந்தி, அவரது சமூக ஊடகம் மற்றும் ஆலோசனைக் குழுவினர், இடதுசாரிக் கட்சிகளைச் சேர்ந்த பிரபலங்கள் ஆகியோர் எந்த முயற்சியையும் விட்டு வைப்பதில்லை. இதற்காக வெளிநாட்டு சக்திகளின் உதவியைப் பெறவும் அவர்கள் தயங்கியதில்லை.

பாஜக-ஆர்எஸ்எஸ் அமைப்புக்கு எதிராகவும் மோடி அரசுக்கு எதிராகவும் இந்தியாவில் கருத்தைக் கட்டமைப்பதற்காக பாகிஸ்தான், வங்கதேசம், மலேசியா, சிங்கப்பூர், அமெரிக்கா உள்ளிட்ட நாடுகளில் காங்கிரஸ் கட்சி எக்ஸ் வலைதளப் பக்கங்களை உருவாக்கியுள்ளது. சமூக வலைதளக் கணக்கு வைத்திருப்போரின் தங்குமிடம், கணக்கை உருவாக்கிய தேதி ஆகியவற்றை அறியும் வசதியை எக்ஸ் வலைதளம் சில தினங்களுக்கு முன் அமல்படுத்தியதைத் தொடர்ந்து இந்த விவகாரம் அம்பலமாகியுள்ளது.

இந்த வசதியை வைத்துப் பார்த்தபோது காங்கிரஸ் கட்சியின் ஊடகப் பிரிவு தலைவர் பவன் கேராவின் எக்ஸ் வலைதளப் பக்கம் அமெரிக்காவில் உருவாக்கப்பட்டுள்ளது தெரிய வந்தது.

மகாராஷ்டிர காங்கிரஸ் கட்சியின் எக்ஸ் வலைதளப் பக்கம் அயர்லாந்தில் உருவாக்கப்பட்டுள்ளது. அதை அவர்கள் தற்போது இந்தியாவில் உருவாக்கியுள்ளதாக மாற்றியுள்ளனர். ஹிமாசல பிரதேச காங்கிரஸ் கமிட்டியின் சமூக வலைதளப் பக்கம் தாய்லாந்தைச் சேர்ந்த ஒரு செயலியின் மூலம் உருவாக்கப்பட்டுள்ளது என்றார் அவர்.

காங்கிரஸ் பதிலடி: பாஜகவின் இந்தக் குற்றச்சாட்டு காங்கிரஸ் சார்பில் பதிலடி கொடுக்கப்பட்டது. இதுகுறித்து அக் கட்சியின் செய்தித்தொடர்பாளர் சுப்ரியா ஸ்ரீநாத் தில்லியில் நடைபெற்ற செய்தியாளர்கள் சந்திப்பில் கூறுகையில், "பாஜகவுடன் தொடர்புடைய பல சமூக ஊடக கணக்குகளும் வெளிநாடுகளிலிருந்து கையாளப்படுகின்றன. குறிப்பாக "ஸ்டார்ட்-அப் இந்தியா' கணக்கு அயர்லாந்திலிருந்தும், ஸ்ரீ ஸ்ரீ ரவிசங்கரின் கணக்கு வட அமெரிக்காவிலிருந்து, டிடி நியூஸ் கணக்கு அமெரிக்காவிலிருந்து, அதானி குழு சமூக ஊடக கணக்குகள் ஜெர்மனியிலிருந்து கையாளப்படுகின்றன. இவை அனைத்தும் பாஜக கூறுவதுபோல, இந்தியாவுக்கு எதிரான நடவடிக்கைகளில் ஈடுபட்டுள்ளனவா?

வாக்குத் திருட்டு, தவறான வாக்காளர் பட்டியல்கள், வாக்குச் சாவடி நிலைய அலுவலர்கள் உயிரிழப்பு, அருணாசல பிரதேசத்தின் மீதான சீனாவின் உரிமைகோரல் குறித்த கேள்விகளுக்கு பதிலளிக்காமல் தேசத்தை திசைத்திருப்பவே, வெளிநாடுகளில் உள்ள காங்கிரஸ் தலைவர்களின் சமூக ஊடக கையாளுதல் தொடர்பான பிரச்னையை பாஜக எழுப்புகிறது' என்றார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com