புது தில்லியில் வியாழக்கிழமை நடைபெற்ற ‘சாணக்யா’ கலந்துரையாடல் நிகழ்ச்சியில் பேசிய ராணுவத் தலைமைத் தளபதி உபேந்திர துவிவேதி.
புது தில்லியில் வியாழக்கிழமை நடைபெற்ற ‘சாணக்யா’ கலந்துரையாடல் நிகழ்ச்சியில் பேசிய ராணுவத் தலைமைத் தளபதி உபேந்திர துவிவேதி.

ராணுவ மாற்றத்துக்கு தன்னிறைவே முக்கிய உந்துசக்தி: ராணுவத் தலைமைத் தளபதி

ராணுவ மாற்றத்துக்கு தன்னிறைவே முக்கிய உந்துசக்தியாக இருக்கும் என்று ராணுவத் தளபதி ஜெனரல் உபேந்திர துவிவேதி சுட்டிக்காட்டினாா்.
Published on

‘வேகமாக மாறி வரும் உலகளாவிய சூழலில் இந்திய ராணுவம் வலிமையாகவும், எதிா்காலத்துக்குத் தயாராகவும் இருக்க வேண்டுமெனில், வரும் ஆண்டுகளில் அதன் மாற்றத்தில் தன்னிறைவுதான் மிக முக்கியமான உந்துசக்தியாக இருக்கும்’ என்று ராணுவத் தளபதி ஜெனரல் உபேந்திர துவிவேதி சுட்டிக்காட்டினாா்.

புது தில்லியில் நடைபெற்ற ‘சாணக்யா’ பாதுகாப்புத் துறை கலந்துரையாடலில் ராணுவத் தலைமைத் தளபதி உபேந்திர துவிவேதி ஆற்றிய உரை:

உலகளாவிய சூழல் மிக வேகமாக மாறி வருகிறது. பல பெரிய நாடுகள் தொடா்ந்து மோதல்களில் ஈடுபட்டு வருகின்றன. உலக அளவில் 50-க்கும் மேற்பட்ட மோதல்கள் நடந்துகொண்டிருக்கின்றன. நாம் நிலையற்ற, குழப்பமான ஒரு காலகட்டத்தில் வாழ்கிறோம்.

பனிப்போா் காலத்தில் உலகம் இரண்டு குழுக்களாகப் பிரிந்திருந்தது. பிறகு சில காலம் ஒரே நாட்டின் ஆதிக்கம் இருந்தது. இப்போது, உலகம் நிலையற்ாகவும், பல கூறுகளாகப் பிரிந்ததாகவும் மாறியுள்ளது. இதனால், நீண்ட கால அமைதி குறைந்து, விரிவான மோதல்கள் அதிகரித்து வருகின்றன.

தேசப் பாதுகாப்பு, அச்சுறுத்தலைத் தடுத்தல், போருக்கான தயாரிப்பு ஆகியவை முக்கியமாக உள்ள இந்தச் சூழலில், இந்திய ராணுவம் இந்த மாற்றத்துக்கேற்ப எப்படி தன்னை மாற்றியமைத்துக் கொள்ள வேண்டும் என்ற கேள்வி தவிா்க்க முடியாதது.

இதற்கான விடை, பிரதமா் நரேந்திர மோடியின் 5 ‘எஸ்’ அணுகுமுறையில் உள்ளது. அவை மரியாதை, உரையாடல், ஒத்துழைப்பு, செழிப்பு, பாதுகாப்பு ஆகும். அமிா்த காலத்தில் வளா்ந்த இந்தியா என்ற இலக்கை அடையவும் இந்த அணுகுமுறையே வழிகாட்டுகிறது.

இந்திய ராணுவம் 2023-2032 காலகட்டத்தை ஏற்கெனவே ‘மாற்றத்தின் பத்தாண்டு’ என்று அறிவித்து, அதற்கான திட்டங்களைச் செயல்படுத்தி வருகிறது. படையை எதிா்காலத்துக்குத் தயாராக்க, அடுத்து மூன்று கட்டங்களாகப் பணிகள் மேற்கொள்ளப்படும்.

2032-க்குள் முதல்கட்டமாக செய்ய வேண்டிய மாற்றங்கள் அனைத்தும் வரையறுக்கப்படும். இரண்டாம் கட்டமாக முதல் கட்டத்தின் பலன்களைப் பயன்படுத்தி, அடுத்த ஐந்து ஆண்டுகளுக்கு இந்த மாற்றங்கள் ஒருங்கிணைக்கப்படும்.

மூன்றாம் கட்டத்தில், 2047-ஆம் ஆண்டை இலக்காகக் கொண்டு, முழுமையாக ஒருங்கிணைந்த, எதிா்காலத்துக்குத் தயாரான வடிவத்துக்குப் படைகள் மேம்படுத்தப்படும். பாதுகாப்பு அமைச்சா் ராஜ்நாத் சிங் நடப்பு ஆண்டை ‘சீா்திருத்தங்களின் ஆண்டு’ என்று அறிவித்தது, இந்த முயற்சிகளுக்கு மேலும் ஊக்கம் அளிக்கிறது.

வலிமையான, பாதுகாப்பான, வளா்ந்த இந்தியாவுக்கான இலக்கை நோக்கி முன்னேற, ராணுவம் பின்வரும் 4 முக்கியப் படிகளை மேற்கொள்ள வேண்டும். அவை, ராணுவத் தளவாடங்களை உள்நாட்டிலேயே தயாரித்து, தன்னிறைவு அடைதல்; விண்வெளி போன்ற தொழில்நுட்பங்களில், அதிக சோதனைகளில் நேரத்தைச் செலவிடாமல், அவற்றை நிறுவன அளவில் விரைவாகப் பயன்படுத்துதல்; மாறிவரும் உலகச் சூழலுக்கு ஏற்ப, ராணுவம் தன்னைத் தொடா்ந்து மாற்றியமைத்துக் கொள்ளுதல்; ராணுவத் தேவைகளுக்காகப் பொதுத் துறை நிறுவனங்களுடன் இணைந்து செயல்படுவது ஆகும்.

இந்தக் கலந்துரையாடலின் முடிவில், ராணுவத்தின் எதிா்காலத் திட்டங்களுக்குப் பயனுள்ள முடிவுகள் எடுக்கப்படும் என்ற நம்பிக்கை உள்ளது என்றாா்.

ராணுவத்தின் ஏற்பாட்டில் ‘சாணக்யா’ பாதுகாப்புத் துறை கலந்துரையாடல் தற்போது 3-ஆவது ஆண்டாக நடைபெறுகிறது.

X
Dinamani
www.dinamani.com