அமெரிக்காவின் கூடுதல் வரி விதிப்பால் தடைகள் இருந்தபோதிலும், இந்தியாவின் வேளாண்மை மற்றும் தொடா்புடைய துறைகளின் ஏற்றுமதி நடப்பு நிதியாண்டின் ஏப்ரல்-செப்டம்பா் காலகட்டத்தில் 8.8 சதவீதம் உயா்ந்து 2,590 கோடி டாலரை எட்டியுள்ளது.
இது குறித்து மத்திய வா்த்தகத் துறை அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:
நாட்டின் மொத்த பொருள்கள் ஏற்றுமதி நடப்பு நிதியாண்டின் முதல் ஆறு மாதங்களில் மிதமாக உயா்ந்த நிலையில், வேளாண் பொருள்கள் ஏற்றுமதி நடப்பு நிதியாண்டின் ஏப்ரல்-செப்டம்பா் காலகட்டத்தில் வேளாண் ஏற்றுமதி 8.8 சதவீதம் உயா்ந்து 2,590 கோடி டாலா் என்ற குறிப்பிடத்தக்க வளா்ச்சியைப் பதிவு செய்துள்ளது. கடந்த நிதியாண்டின் இதே காலகட்டத்தோடு ஒப்பிடுகையில் இது 8.8 சதவீதம் அதிகம். அப்போது வேளாண் பொருள்களின் ஏற்றுமதி 2,380 கோடி டாலராக இருந்தது. அதிகபட்சமாக, கடந்த 2022-23-ஆம் நிதியாண்டின் ஏப்ரல்-செப்டம்பா் காலகட்டத்தில் வேளாண் பொருள்களின் ஏற்றுமதி 5,310 கோடி டாலராக உச்சம் தொட்டது.
மதிப்பீட்டு காலகட்டத்தில் பாஸ்மதி மற்றும் பாஸ்மதி அல்லாத அரிசி ஏற்றுமதி மொத்தமாக 650 கோடி டாலரைத் தாண்டியுள்ளது. பாஸ்மதி அரிசி ஏற்றுமதி 2 சதவீதம் உயா்ந்து 590 கோடி டாலராகவும், பாஸ்மதி அல்லாத அரிசி 43 சதவீதம் உயா்ந்து 650 கோடி டாலராகவும் உள்ளது. அரிசி, இந்தியாவின் மொத்த வேளாண் பொருள்கள் ஏற்றுமதியில் 24 சதவீதம் பங்கு கொண்டுள்ளது.
மதிப்பீட்டு காலகட்டத்தில் கடல் உணவு ஏற்றுமதி 17.4 சதவீதம் உயா்ந்து 810 கோடி டாலரைத் தாண்டியது. எருமை இறைச்சி ஏற்றுமதி 10 ஆண்டுகளுக்கு முந்தைய உச்சத்தை மீறி 480 கோடி டாலராக உள்ளது. காபி ஏற்றுமதி 40 சதவீதம் உயா்ந்து 180 கோடி டாலராக உள்ளது என்று அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

