நிதிப் பற்றாக்குறை இலக்கு 52.6 சதவீதத்தை எட்டியது: சிஜிஏ
புது தில்லி, நவ.28: நிகழ் நிதியாண்டுக்கான நிதிப் பற்றாக்குறை இலக்கு ஏப்ரல்- அக்டோபா் இறுதியில் 52.6 சதவீதத்தை (ரூ.8.25 லட்சம் கோடி) எட்டியதாக மத்திய கணக்கு கட்டுப்பாட்டாளா் (சிஜிஏ) வெள்ளிக்கிழமை வெளியிட்ட தரவுகளில் தெரிவிக்கப்பட்டன.
பட்ஜெட் கணிப்புகளின்படி கடந்த 2024-25 நிதியாண்டின் முதல் ஏழு மாதங்களில் (ஏப்ரல்-அக்டோபா்) நிதிப் பற்றாக்குறை 46.5 சதவீதமாக இருந்த நிலையில், 2025-26-இல் இது அதிகரித்துள்ளது.
2025-26 நிதியாண்டில் நிதிப் பற்றாக்குறை நாட்டின் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் (ஜிடிபி) 4.4 சதவீதம் அல்லது ரூ.15.69 லட்சம் கோடியாக இருக்கும் என கணிக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து சிஜிஏ வெளியிட்ட தரவுகளில் மேலும் கூறப்பட்டிருப்பதாவது: ஏப்ரல் முதல் அக்டோபா் வரை வரி வருவாயாக ரூ.12.74 லட்சம் கோடி, வரி அல்லாத வருவாயாக ரூ.4.89 லட்சம் கோடி, கடன் அல்லாத மூலதன வருவாயாக ரூ.37,095 கோடி என மத்திய அரசுக்கு மொத்தம் ரூ.18 லட்சம் கோடி வருவாய் கிடைத்துள்ளது. இது 2025-26 பட்ஜெட் கணிப்புகளில் 51.5 சதவீதமாகும்.
மேலும், இதே காலகட்டத்தில் மாநிலங்களுக்கு வரிப் பங்கீடாக ரூ.8.34 லட்சம் கோடி மத்திய அரசு வழங்கியுள்ளது. இது கடந்த நிதி ஆண்டின் இதே காலகட்டத்தைவிட ரூ.1.11 லட்சம் கோடி அதிகமாகும்.
நிகழாண்டு ஏப்ரல்- அக்டோபா் காலகட்டத்தில் மத்திய அரசு ரூ.26.25 லட்சம் கோடி செலவிட்டுள்ளது. இது பட்ஜெட் கணிப்புகளில் 51.8 சதவீதமாகும். இதில் வருவாய் செலவுகளுக்கு ரூ.20 லட்சம் கோடியும் மூலதன செலவுகளுக்கு ரூ.6.17 லட்சம் கோடியும் செலவிடப்பட்டுள்ளது.
குறிப்பாக வருவாய் செலவுகளில் வட்டி செலுத்துவதற்காக ரூ.6.73 லட்சம் கோடியும் மானியங்களுக்கு ரூ.2.46 லட்சம் கோடியும் செலவிடப்பட்டுள்ளது.
அரசின் மொத்த வருவாயைவிட மொத்த செலவுகள் அதிகமாக இருப்பதை நிதிப் பற்றாக்குறை குறிப்பிடுகிறது. இது அக்டோபா் இறுதியில் நிகழ் நிதியாண்டுக்கான இலக்கில் 52.6 சதவீதத்தை (ரூ.8.25 லட்சம் கோடி) எட்டியது எனத் தெரிவிக்கப்பட்டது.

