

புது தில்லி: தில்லியின் காற்று மாசு விவகாரம் மிக மோசமான நிலையை எட்டியிருக்கும் நிலையில், நீங்கள் எப்படி மௌனமாக இருக்க முடியும் என்று பிரதமர் நரேந்திர மோடிக்கு மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் கேள்வி எழுப்பியிருக்கிறார்.
நான் சந்திக்கும் தாய்மார்கள் பலரும், இதைத்தான் கேட்கிறார்கள். எங்கள் குழந்தைகள் மாசடைந்த காற்றைத்தான் சுவாசிக்க வேண்டுமா? என்று. அவர்கள் அதிருப்தியில் உள்ளனர், அச்சம் மற்றும் கோபத்தில் உச்சத்தில் இருக்கிறார்கள் என்றும் ராகுல் கூறியிருக்கிறார்.
ராகுல் தன்னுடைய சமூக வலைத்தளப் பக்கத்தில், மோடி அவர்களே, இந்திய குழந்தைகள் நம் கண் முன்னே மூச்சுத் திணறிக் கொண்டிருக்கிறார்கள். எவ்வாறு நீங்கள் மௌனமாக இருக்க முடியும்? உங்கள் அரசு ஏன் எந்த அவசரத்தையும் காட்டவில்லை, ஏன் எந்த திட்டமிடலும் இல்லை? ஏன் இதற்கு பொறுப்பேற்கவில்லை? என்று கேட்டுள்ளார்.
நாட்டில், சுகாதார அவசரநிலை ஏற்பட்டிருக்கிறது என்றும் ராகுல் சுட்டிக்காட்டியிருக்கிறார். புது தில்லியில் உடனடியாக காற்று மாசுபாட்டைத் தடுக்க மிகவும் கண்டிப்பான, பயனுள்ள திட்டத்தை செயல்படுத்த வேண்டியது அவசியம். ஆனால், மோடி அரசு, தில்லி காற்று மாசுபாடு விவகாரத்தில் எந்த அவசரத்தையும் காட்டவில்லை. பொறுப்பேற்றுக்கொள்ளவும் இல்லை என்று ராகுல் குற்றம்சாட்டியிருக்கிறார்.
புது தில்லியில், ராகுல் காந்தி தன்னுடைய இல்லத்தில் புது தில்லியைச் சேர்ந்த சில குடும்பத் தலைவிகளை நேரில் சந்தித்து காற்று மாசுபாடு குறித்து கலந்துரையாடினார். அப்போது பேசப்பட்ட விவகாரங்கள் குறித்த விடியோவையும் ராகுல் அந்த பதிவில் இணைத்துள்ளார்.
மேலும், தில்லி காற்று மாசுபாடு குறித்து உடனடியாக நடவடிக்கை எடுப்பது குறித்து நாடாளுமன்றத்தில் விவாதம் நடத்தப்பட வேண்டும், நமது நாட்டுக் குழந்தைகள் தூய்மையான காற்றை சுவாசிக்க தகுதியானவர்களே என்றும், அதில் எந்த சமரசமும் கவனக்குறைவுக்கும் இடமில்லை என்றும் ராகுல் கூறியிருக்கிறார்.
இதையும் படிக்க...டிட்வா புயல் எங்கே, எப்போது கரையை கடக்கும்? முழு விவரம்
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.