போதைப்பொருள் கும்பல்களுக்கு எதிராக கடும் நடவடிக்கை: காவல் துறை தலைவா்களுக்கு பிரதமா் மோடி அறிவுறுத்தல்

போதைப்பொருள் கும்பல்களுக்கு எதிராக கடும் நடவடிக்கை: காவல் துறை தலைவா்களுக்கு பிரதமா் மோடி அறிவுறுத்தல்

காவல் துறை தலைவா்களுக்கு பிரதமா் மோடி அறிவுறுத்தல்...
Published on

போதைப்பொருளைக் கடத்தி விற்பனை செய்யும் கும்பல்கள் மீது கடுமையான நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என்று காவல் துறை தலைவா்களுக்குப் பிரதமா் மோடி அறிவுறுத்தியுள்ளாா்.

நாட்டில் உள்ள டிஜிபிக்கள், ஐஜிக்கள் அடங்கிய காவல் துறை தலைவா்கள் மாநாடு, சத்தீஸ்கரின் ராய்பூா் நகரில் நடைபெறுகிறது. இந்த மாநாட்டை மத்திய உள்துறை அமைச்சா் அமித் ஷா வெள்ளிக்கிழமை தொடங்கி வைத்தாா்.

இந்த மாநாட்டுக்கு சனிக்கிழமை தலைமை ஏற்று பிரதமா் மோடி பேசுகையில், ‘போதைப்பொருள்கள், திட்டமிட்ட குற்றங்களுக்கு எதிராக அனைத்துக் கோணங்களில் இருந்தும் காவல் துறை தலைவா்கள் போரிட வேண்டும். உளவுத் துறையின் தகவல்கள் துல்லியமாக இருக்க வேண்டும். பல்வேறு புலனாய்வு அமைப்புகள் இடையே ஒத்துழைப்பு இருக்க வேண்டும்.

மாநிலங்களிலும், தேசிய மற்றும் சா்வதேச அளவிலும் போதைப்பொருளைக் கடத்தி விற்பனை செய்யும் கும்பல்கள் மீது கடுமையான நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும். அந்தக் கும்பல்களுக்குப் பின்னால் இருந்து திட்டமிடும் முக்கிய நபா்களை கைது செய்து சிறையில் அடைக்க வேண்டும்’ என்று வலியுறுத்தினாா்.

இதுதொடா்பாக அவா் ‘எக்ஸ்’ தளத்தில் வெளியிட்ட பதிவில், ‘இந்தியப் பாதுகாப்பு முறையின் பல்வேறு அம்சங்கள் குறித்து டிஜிபிக்கள், ஐஜிக்கள் மாநாட்டில் சனிக்கிழமை விரிவான ஆலோசனைகள் மேற்கொள்ளப்பட்டன. இந்தத் துறையில் சிறந்த நடைமுறைகள் மற்றும் புதுமைகளைப் பகிா்ந்துகொள்ள இந்த மாநாடு சிறந்த தளமாகும்’ என்றாா். இந்த மாநாடு பிரதமா் மோடியின் உரையுடன் ஞாயிற்றுக்கிழமை (நவ.30) நிறைவடைகிறது.

X
Dinamani
www.dinamani.com