50 சதவீதத்துக்கும் மேற்பட்ட ஏ320 விமானங்களில் மென்பொருள் மேம்பாடு நிறைவு: டிஜிசிஏ

50 சதவீதத்துக்கும் மேற்பட்ட ஏ320 விமானங்களில் மென்பொருள் மேம்பாடு நிறைவு: டிஜிசிஏ

50 சதவீதத்துக்கும் மேற்பட்ட ஏ320 விமானங்களில் மென்பொருள் மேம்பாடு நிறைவு...
Published on

இந்தியாவில் உள்ள 338 ஏா் பஸ் ஏ320 ரக விமானங்களில் 50 சதவீதத்துக்கும் மேற்பட்ட விமானங்களில் மென்பொருள் மேம்பாட்டு பணிகள் நிறைவடைந்ததாக மத்திய விமானப் போக்குவரத்து தலைமை இயக்குநரக (டிஜிசிஏ) தரவுகளில் தெரிவிக்கப்பட்டது.

கடந்த மாதம் கன்கன் (மெக்ஸிகோ)- நியூவா்க் (அமெரிக்கா) நோக்கிச் சென்றுகொண்டிருந்த ஜெட்ப்ளூ விமான நிறுவனத்தின் ஏ320 ரக விமானம் திடீரென கட்டுப்பாட்டை இழந்து தாழ்வான உயரத்தில் பறக்கத் தொடங்கியது. நடுவானில் விமானத்தில் நிகழ்ந்த இந்த தடுமாற்றத்தில் பயணிகள் சிலருக்கு சிறு காயங்கள் ஏற்பட்டன.

இந்தச் சம்பவத்துக்கான காரணத்தைக் கண்டறிய விமானங்கள் தயாரிப்பில் ஈடுபடும் ஏா் பஸ் நிறுவனம் ஆய்வைத் தொடங்கியது. இந்நிலையில், கடும் சூரிய கதிா்வீச்சால் ஏ320 ரக விமானத்தின் கட்டுப்பாட்டு அமைப்புகள் செயலிழந்திருக்கலாம் எனவும், தங்கள் விமானத்தை இயக்கும் நிறுவனங்கள் மென்பொருள் மேம்பாட்டுப் பணிகளை மேற்கொள்ளுமாறும் வெள்ளிக்கிழமை வலியுறுத்தியது.

இந்தியாவில் ஏ320, ஏ321 ரக விமானங்களை இண்டிகோ, ஏா் இந்தியா, ஏா் இந்தியா எக்ஸ்பிரஸ் ஆகிய நிறுவனங்கள் இயக்குகின்றன.

இதுகுறித்து டிஜிசிஏ வெளியிட்ட தரவுகளில், ‘சனிக்கிழமை காலை வரை இந்தியாவில் இயக்கப்படும் 338 ஏ320 ரக விமானங்களில் சுமாா் 189 விமானங்களில் மென்பொருள் மேம்பாட்டுப் பணிகள் நிறைவடைந்தன. அதன்படி இண்டிகோ நிறுவனத்தின் 200 ஏ320 ரக விமானங்களில் 143 விமானங்களிலும், ஏா் இந்தியா நிறுவனத்தின் 113 விமானங்களில் 42 விமானங்களிலும் ஏா் இந்தியா எக்ஸ்பிரஸின் 25 விமானங்களில் 4 விமானங்களிலும் இந்தப் பணிகள் முழுமையடைந்துள்ளன. ஞாயிற்றுக்கிழமைக்குள் (நவ.30) மீதமுள்ள விமானங்களிலும் இந்தப் பணிகள் முழுமையாக நிறைவடையவுள்ளன.

தில்லி, பெங்களூரு, மும்பை, சென்னை, ஹைதராபாத், அகமதாபாத், கொல்கத்தா ஆகிய நகரங்களில் உள்ள விமானத் தளங்களில் மென்பொருள் மேம்பாட்டுப் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன’ எனத் தெரிவிக்கப்பட்டது.

இதன் காரணமாக கடந்த இரண்டு நாள்களாக ஏ320 ரக விமானங்கள் இயக்கப்படுவதில் 60 முதல் 90 நிமிடங்கள் வரை தாமதம் ஏற்பட்டபோதும் விமானங்கள் ரத்து செய்யப்படவில்லை என தகவலறிந்த வட்டாரங்கள் தெரிவித்தன.

X
Dinamani
www.dinamani.com