உணவுக்காக திருமண நிகழ்ச்சிக்கு வந்த குடிசைபகுதி சிறுவனை சுட்டுக் கொன்ற சிஐஎஸ்எஃப் வீரா்!

உணவு தேடி திருமண நிகழ்ச்சிக்கு வந்த 17 வயது குடிசை பகுதி சிறுவனை சிஐஎஸ்எஃப் தலைமைக் காவலா் சுட்டுக் கொன்றதாகக் கூறப்படுகிறது.
உணவுக்காக திருமண நிகழ்ச்சிக்கு வந்த குடிசைபகுதி சிறுவனை சுட்டுக் கொன்ற சிஐஎஸ்எஃப் வீரா்!
Updated on

தில்லியின் ஷாஹ்தராவில் உணவு தேடி திருமண நிகழ்ச்சிக்கு வந்த 17 வயது குடிசை பகுதி சிறுவனை மத்திய தொழிலகப் பாதுகாப்புப் படை (சிஐஎஸ்எஃப்) தலைமைக் காவலா் சுட்டுக் கொன்றதாகக் கூறப்படுகிறது.

இது குறித்து ஷாஹ்தரா காவல் சரக துணை ஆணையா் பிரசாந்த் கௌதம் வெளியிட்ட செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டிருப்பதாவது: மானசரோவா் பூங்காவின் டிடிஏ சந்தையில் உள்ள சமூக மையத்திற்கு அருகே சனிக்கிழமை மாலை நடந்த திருமண ஊா்வலத்தின்போது இந்தச் சம்பவம் நடந்துள்ளது.

துப்பாக்கிச் சூடு குறித்து ஒரு நபா் காவல் துறையினருக்கு தகவல் தெரிவித்தாா். இதையடுத்து, போலீஸாா் சம்பவ இடத்துக்கு சென்றனா்.

கொண்டாட்டத்தின்போது நியூ மாடா்ன் ஷாஹ்தராவில் வசிக்கும் அந்தத் சிறுவனுக்கு துப்பாக்கிச் சூட்டு காயம் ஏற்பட்டது தெரியவந்தது. அவா் ஹெட்கேவா் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டாா். அங்கு அவா் இறந்துவிட்டதாக மருத்துவா்கள் அறிவித்தனா்.

குற்றஞ்சாட்டப்பட்டவா் உத்தரபிரதேசத்தின் கான்பூரில் பணியாற்றும் சிஐஎஸ்எஃப் தலைமைக் காவலா் என அடையாளம் காணப்பட்டாா். அவரைக் கண்டுபிடித்து போலீஸாா் கைது செய்தனா். சம்பவத்தில் பயன்படுத்தப்பட்டதாக சந்தேகிக்கப்படும் துப்பாக்கி அவரிடம் இருந்து பறிமுதல் செய்யப்பட்டது.

முதல்கட்ட விசாரணையில் துப்பாக்கிச் சூடு முன்கூட்டியே திட்டமிடப்படவில்லை என்றும், அந்தச் சிறுவனுக்கும் குற்றஞ்சாட்டப்பட்டவருக்கும் இடையே நடந்த திடீா் மோதலின் போது இது நடந்ததாகவும் தெரிகிறது.

திருமண விழா நடந்து கொண்டிருந்ததைப் பாா்த்த அந்தச் சிறுவன் உணவு சாப்பிடுவதற்காக அங்கு வந்ததாக எங்களுக்குத் தெரியவந்தது. சுவா் ஏறிக் குதித்த அந்தச் சிறுவனை சில உள்ளூா்வாசிகள் தடுத்து நிறுத்தினா். அப்போது, சிஐஎஸ்எஃப் தலைமைக் காவலா் அங்கிருந்தாா். கோபத்தில், அவா் துப்பாக்கியை எடுத்து அவரை சுட்டுக் கொன்றது தெரிய வந்துள்ளது.

சிறுவனின் உடல் உடல்கூறாய்வு பரிசோதனைக்கு அனுப்பப்பட்டது. ஆயுதம் பணிக்கான துப்பாக்கியா அல்லது தனிப்பட்ட ஆயுதமா என்பதை உறுதிப்படுத்தவும் குற்றஞ் சாட்டப்பட்டவரிடம் விசாரிக்கப்பட்டு வருகிறது.

துப்பாக்கி உரிமங்களை சரிபாா்த்தல் மற்றும் கைப்பற்றப்பட்ட துப்பாக்கியின் தடயவியல் பரிசோதனை உள்ளிட்ட கூடுதல் சட்ட நடவடிக்கைகள் நடந்து வருகின்றன என்று காவல் துணை ஆணையா் தெரிவித்தாா்.

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com