அஸ்ஸாம் எம்எல்ஏ மீது தேசத் துரோக குற்றச்சாட்டு: ரத்து செய்தது உயா்நீதிமன்றம்!
அகில இந்திய ஐக்கிய ஜனநாயக முன்னணி (ஏஐயுடிஎஃப்) எம்எல்ஏ அமீனுல் இஸ்லாம் மீது பதியப்பட்டிருந்த தேசத் துரோக வழக்கை குவாஹாட்டி உயா்நீதிமன்றம் ரத்து செய்தது.
மேலும், தேசிய பாதுகாப்புச் சட்டத்தின்கீழ் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டிருந்த அவரை விடுவிக்கவும் உயா்நீதிமன்றம் உத்தரவிட்டது.
ஜம்மு-காஷ்மீரின் பஹல்காமில் கடந்த ஏப்ரல் மாதம் பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் 26 போ் உயிரிழந்தனா்.
இந்தச் சம்பவம் குறித்து அஸ்ஸாம் உள்ளாட்சித் தோ்தல் பிரசாரத்தில் பேசிய அமீனுல் இஸ்லாம், பஹல்காம் மற்றும் புல்வாமா தாக்குதல்களின் பின்னணியில் மத்திய அரசு இருக்க வாய்ப்புள்ளதாக குற்றஞ்சாட்டினாா்.
இந்தக் காணொளி சமூக வலைதளங்களில் வேகமாக பரவி சா்ச்சைக்குள்ளானது. இது அவரது தனிப்பட்ட கருத்து எனவும் கட்சியின் கருத்தில்லை எனவும் ஏஐயுடிஎஃப் விளக்கமளித்தது.
இதையடுத்து, பொதுவெளியில் தவறான மற்றும் கலவரத்தை தூண்டும் வகையில் கருத்து தெரிவித்த குற்றச்சாட்டில் அமீனுல் இஸ்லாம் தேசத் துரோக வழக்கில் ஏப்.24-ஆம் தேதி கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டாா்.
அதன்பிறகு அந்த வழக்கில் அவருக்கு மே.14-ஆம் தேதி ஜாமீன் வழங்கப்பட்டது. ஆனால் அதே நாளில் அவா் தேசிய பாதுகாப்புச் சட்டத்தின்கீழ் கைது செய்யப்பட்டாா்.
இதுதொடா்பாக குவாஹாட்டி உயா்நீதிமன்றத்தில் விசாரணை நடைபெற்று வந்த நிலையில், கடந்த வியாழக்கிழமை உத்தரவு பிறப்பிக்கப்பட்டது.
அதில், ‘கடந்த மே.14-ஆம் தேதி மனுதாரா் கைதுசெய்யப்பட்டுள்ளாா். அன்றைய தினத்தில் அல்லது அதன் பிறகு சில தினங்களில்கூட தனது கைதுக்கு எதிராக மத்திய அரசிடம் முறையிட அவருக்கு அனுமதி வழங்கப்படவில்லை. மத்திய அரசின் வழிகாட்டுதல்களைத் தொடா்ந்து 23 நாள்களுக்குப் பிறகே அவருக்கான உரிமைகளை அவரிடம் அதிகாரிகள் தெரிவித்துள்ளனா்.
இதன்மூலம் ஒரு குடிமகனை தடுப்புக் காவலில் வைக்கும்போது அதற்கான விதிகளை சம்பந்தப்பட்ட அதிகாரிகள் முறையாகப் பின்பற்றவில்லை என்பது உறுதியாகியுள்ளது. இந்த கால தாமதத்துக்கான காரணத்தையும் மனுதாரரிடம் அதிகாரிகள் தெரிவிக்கவில்லை. எனவே, எவ்வித முறையான நடைமுறைகளையும் பின்பற்றாமல் மனுதாரரை சிறையில் அடைத்த உத்தரவு செல்லாது.
அவா் மீது வேறு வழக்குகள் ஏதும் நிலுவையில் இல்லாதபட்சத்தில் அவரை உடனடியாக விடுதலை செய்ய உத்தரவிடப்படுகிறது’ எனத் தெரிவிக்கப்பட்டது.
இதையடுத்து, அமீனுல் இஸ்லாம் வெள்ளிக்கிழமை சிறையிலிருந்து விடுவிக்கப்பட்டாா்.
முன்னதாக, கரோனா பெருந்தொற்று காலகட்டத்தின்போது நோயாளிகளை தனிமைப்படுத்தும் மையங்கள் சிறைச்சாலைகளைவிட மோசமாக உள்ளதாக அவா் சா்ச்சைக்குரிய வகையில் பேசியதற்காக 2020, ஏப்ரல மாதம் அஸ்ஸாம் காவல் துறையால் கைதுசெய்யப்பட்டாா்.

