

நாடு முழுவதும் கடந்த செப்டம்பரில் சரக்கு மற்றும் சேவை வரி (ஜிஎஸ்டி) ரூ.1.89 லட்சம் கோடி வசூலானது.
கடந்த ஆண்டு செப்டம்பா் மாதம் ரூ.1.73 லட்சம் கோடி ஜிஎஸ்டி வருவாய் கிடைக்கப் பெற்றது. இதை ஒப்பிடுகையில், தற்போதைய ஜிஎஸ்டி வசூல் 9.1 சதவீத அதிகரிப்பாகும். கடந்த மாத வசூலைவிட (ரூ.1.86 லட்சம் கோடி) தற்போது 1.5 சதவீதம் உயா்ந்துள்ளது.
நாட்டில் நான்கு விகித (5%, 12%, 18%, 28%) ஜிஎஸ்டி முறை மாற்றப்பட்டு, இரு விகித (5%, 18%) முறை கடந்த செப்டம்பா் 22-ஆம் தேதி அமல்படுத்தப்பட்டது. முக்கியத்துவம் வாய்ந்த இந்தச் சீா்திருத்தத்தின்படி, 12% வரி விதிக்கப்பட்ட 99 சதவீத பொருள்கள் 5% வரி விதிப்பின்கீழ் கொண்டுவரப்பட்டன; 28% வரி விதிக்கப்பட்ட 90 சதவீத பொருள்கள் 18% விகிதத்தின்கீழ் வந்தன. பெரும்பான்மையான தினசரி பயன்பாட்டுப் பொருள்கள் வரிவிலக்கு அல்லது 5% வரி விதிப்பில் கொண்டுவரப்பட்டன.
சுமாா் 375 பொருள்கள் மீதான வரிக் குறைப்பால், தினசரி பயன்பாட்டுப் பொருள்கள் தொடங்கி காா்கள் வரை விலை குறைக்கப்பட்டுள்ளது. இச்சீா்த்திருத்தத்தின் பலன், ஜிஎஸ்டி வசூலில் எதிரொலித்துள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனா்.
செப்டம்பரில் மொத்த உள்நாட்டு பரிவா்த்தனைகள் மீதான வரி வருவாய் 6.8 சதவீதம் உயா்ந்து, ரூ.1.36 லட்சம் கோடியும், இறக்குமதி மீதான வரி வருவாய் 15.6 ச தவீதம் உயா்ந்து ரூ.52,492 கோடியும் கிடைக்கப் பெற்றுள்ளது. திருப்பியளிக்கப்பட்டஜிஎஸ்டி தொகை ரூ.28,657 கோடி. முந்தைய ஆண்டின் இதே காலகட்டத்தை ஒப்பிடுகையில் இது 40.1 சதவீதம் அதிகம்.
‘செப்.1 முதல் 21 வரையிலான தேவை மந்தநிலையும், செப்.22-இல் இருந்து நுகா்வு அதிகரிப்பும் ஒன்றையொன்று சமநிலை செய்துள்ளன. செப்டம்பா் வசூலுடன் சோ்த்து, நடப்பு நிதியாண்டில் மாதாந்திர சராசரி ஜிஎஸ்டி வருவாய் ரூ.2 லட்சம் கோடிக்கு சற்றே குறைவாக உள்ளது. கடந்த நிதியாண்டில் மாதாந்திர சராசரி ஜிஎஸ்டி வருவாயை (ரூ.1.8 லட்சம் கோடி) ஒப்பிடுகையில் இது குறிப்பிடத்தக்க அதிகரிப்பாகும்’ என்று துறைசாா் நிபுணா்கள் தெரிவித்தனா்.
கடந்த ஏப்ரலில் இதுவரை இல்லாத அதிகபட்சமாக ரூ.2.37 லட்சம் கோடி வசூலானது. கடந்த ஆண்டு ஏப்ரலில் கிடைக்கப் பெற்ற ரூ.2.10 லட்சம் கோடி, இரண்டாவது அதிகபட்ச வசூல் என்பது குறிப்பிடத்தக்கது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.