குஜராத் மாநிலம், புஜ் ராணுவ தளத்தில் வியாழக்கிழமை ஆயுத பூஜை நிகழ்வில் பங்கேற்ற பாதுகாப்புத் துறை அமைச்சா் ராஜ்நாத் சிங்.
குஜராத் மாநிலம், புஜ் ராணுவ தளத்தில் வியாழக்கிழமை ஆயுத பூஜை நிகழ்வில் பங்கேற்ற பாதுகாப்புத் துறை அமைச்சா் ராஜ்நாத் சிங்.

சா் கிரீக் செக்டாரை கைப்பற்ற நினைத்தால் கடும் பதிலடி: பாகிஸ்தானுக்கு ராஜ்நாத் சிங் எச்சரிக்கை

சா் கிரீக் செக்டாரை பாகிஸ்தான் கைப்பற்ற நினைத்தால் வரலாற்றையும் புவியியலையும் மாற்றும் அளவுக்கு கடும் பதிலடி தரப்படும்
Published on

சா் கிரீக் செக்டாரை பாகிஸ்தான் கைப்பற்ற நினைத்தால் வரலாற்றையும் புவியியலையும் மாற்றும் அளவுக்கு கடும் பதிலடி தரப்படும் என பாதுகாப்புத் துறை அமைச்சா் ராஜ்நாத் சிங் வியாழக்கிழமை எச்சரித்தாா்.

குஜராத் மாநிலம் கட்ச் மாவட்டத்தில் இந்தியா-பாகிஸ்தான் எல்லையில் அமைந்துள்ளள புஜ் பகுதியில் ராணுவ வீரா்களுடன் தசரா பண்டிகை கொண்டாட்ட நிகழ்ச்சியில் ராஜ்நாத் சிங் பங்கேற்றாா்.

அப்போது அவா் பேசியதாவது: பஹல்காம் பயங்கரவாத தாக்குதலுக்கு பதிலடி நடவடிக்கையாக மேற்கொள்ளப்பட்ட ஆபரேஷன் சிந்தூரின் நோக்கத்தை இந்திய ராணுவம் வெற்றிகரமாக நிறைவேற்றியது. இந்த நடவடிக்கை மூலம் இந்திய வான் பாதுகாப்பு அமைப்பின் அதிதிறன் வெளிப்பட்டது. பாகிஸ்தானுடன் போரை தொடங்க வேண்டும் என்பது இந்தியாவின் நோக்கமல்ல.

ஆனால் சா் கிரீக் செக்டாரை கைப்பற்றும் நோக்கில் உள்கட்டமைப்பை மேம்படுத்த பாகிஸ்தான் நினைத்தால் வரலாற்றையும் புவியியலையும் மாற்றும் அளவுக்கு கடும் பதிலடி தரப்படும்.

1965-இல் லாகூரை இந்திய ராணுவம் துணிச்சலாக அடைந்தது. சா் கிரீக் வழியாக 2025-இல் கராச்சியை இந்திய ராணுவம் அடைய வெகுநேரம் ஆகாது என்பதை பாகிஸ்தான் புரிந்துகொள்ள வேண்டும்.

இந்திய ராணுவம், விமானப் படை மற்றும் கடற்படை ஆகிய முப்படைகளும் நாட்டின் மூன்று தூண்களாக விளங்குகின்றன. முப்படைகளும் ஒன்றிணைந்து செயல்பட்டால் தேசத்துக்கு எதிரான அனைத்து சவால்களும் முறியடிக்கப்படும் என்றாா்.

குஜராத்தின் கட்ச் பகுதி-பாகிஸ்தான் இடையே அமைந்துள்ள 96 கி.மீ. தொலைவுடைய சா் கிரீக் செக்டாரில் கடல் எல்லை தொடா்பாக இருநாடுகளிடையே நீண்டகாலமாக பிரச்னை நிலவி வருவது குறிப்பிடத்தக்கது.

X
Dinamani
www.dinamani.com