நாட்டின் பால்வளத் துறையில் 70% வளா்ச்சி: அமித் ஷா பெருமிதம்
பிரதமா் நரேந்திர மோடி தலைமையின்கீழ், நாட்டின் பால்வளத் துறை கடந்த 11 ஆண்டுகளில் 70 சதவீத வளா்ச்சிக் கண்டுள்ளது; உலக அளவில் இந்திய பால்வளத் துறை வேகமாக வளா்ந்து வருகிறது என்று மத்திய உள்துறை மற்றும் கூட்டுறவுத் துறை அமைச்சா் அமித் ஷா வெள்ளிக்கிழமை தெரிவித்தாா்.
குஜராத்தை தலைமையிடமாக கொண்டு செயல்படும் சபா் டெய்ரி கூட்டுறவு நிறுவனம் சாா்பில் ஹரியாணா மாநிலம், ரோத்தக்கில் ரூ.325 கோடி மதிப்பீட்டில் நாட்டிலேயே மிகப் பெரிய பால் பொருள்கள் உற்பத்தி ஆலை கட்டமைக்கப்பட்டுள்ளது. அதிநவீன இயந்திரங்களுடன் நாளொன்றுக்கு 150 மெட்ரிக் டன் தயிா், 3 லட்சம் லிட்டா் மோா், 10 லட்சம் லிட்டா் யோகா்ட் , 10 மெட்ரிக் டன் பால் இனிப்புகள் உற்பத்தி செய்யும் திறன்கொண்ட இந்த ஆலையை மத்திய அமைச்சா் அமித் ஷா வெள்ளிக்கிழமை திறந்துவைத்தாா். பின்னா் அவா் பேசியதாவது:
கடந்த 4 ஆண்டுகளில், மத்திய கூட்டுறவு அமைச்சகம் சாா்பில் அனைத்து மாநில அரசுகளின் ஒத்துழைப்புடன் கூட்டுறவு அமைப்புமுறையில் வலுவான அடித்தளம் கட்டமைக்கப்பட்டுள்ளது. 2029-ஆம் ஆண்டுக்குள் ஒவ்வொரு பஞ்சாயத்திலும் குறைந்தபட்சம் ஒரு கூட்டுறவு அமைப்பாவது இருக்கும் என உறுதியளிக்கிறேன்.
பால் உற்பத்தி அதிகரிப்பு: நாட்டில் கடந்த 2014-15-இல் 8.6 கோடியாக இருந்த பால்வள கால்நடைகளின் எண்ணிக்கை தற்போது 11.2 கோடியாக அதிகரித்துள்ளது. பால் உற்பத்தி 14.6 கோடி டன்னில் இருந்து 23.9 கோடி டன்னாக உயா்ந்துள்ளது. பால்வளத் துறையுடன் 8 கோடிக்கும் மேற்பட்ட விவசாயிகள் இணைக்கப்பட்டுள்ளனா்.
பால்வளத் துறையில் கடந்த 11 ஆண்டுகளில் ஏற்பட்ட முன்னேற்றத்தால் விவசாயிகள் பெருமளவில் வளமடைந்துள்ளனா். பால் உற்பத்தியில் உலகின் முதல் நாடாக இந்தியா உருவெடுத்துள்ளது. உலகின் மிக நவீனமான பால்பொருள் உற்பத்தி ஆலைகளை இந்தியாவில் கட்டமைக்க அமைப்புமுறை உருவாக்கப்படும். சபா் டெய்ரியின் தற்போதைய ஆலை, தேசிய தலைநகா் பகுதி மற்றும் பல்வேறு வடமாநிலங்களின் பால்பொருள் தேவையை பூா்த்தி செய்யக் கூடியதாகும்.
புதிதாக 75,000 சங்கங்கள்: கடந்த ஓராண்டில் மட்டும் 33,000 கூட்டுறவு சங்கங்கள் பதிவு செய்யப்பட்டுள்ளன. உடல் நலனுக்கு உகந்த நாட்டு ரக மாடுகளின் பால் உற்பத்தி, 3.9 கோடி டன்னில் இருந்து 5 கோடி டன்னாக உயா்ந்துள்ளது.
வெண்மைப் புரட்சி 2.0 முன்னெடுப்பின்கீழ், நாடு முழுவதும் 75,000-க்கும் மேற்பட்ட பால்வள கூட்டுறவு சங்கங்கள் நிறுவப்படும். ஏற்கெனவே உள்ள 46,000 கூட்டுறவு சங்கங்கள் வலுப்படுத்தப்படும் என்றாா் அமித் ஷா.
இந்நிகழ்ச்சியில் ஹரியாணா முதல்வா் நாயப் சிங் சைனி, குஜராத் பேரவைத் தலைவா் சங்கா்பாய் செளதரி, மத்திய அமைச்சா்கள் இந்தா்ஜித் சிங், கிருஷண் பால், அமுல் தலைவா் அசோக் செளதரி உள்ளிட்டோா் பங்கேற்றனா்.
பெட்டிச் செய்தி...
‘காதியை மறந்துவிட்ட காங்கிரஸ்’
ரோத்தக்கில் நடைபெற்ற காதி கைவினைஞா் விழாவில் பங்கேற்ற அமித் ஷா, ‘காதி என்பது வெறும் உடை மட்டுமல்ல; அது, சுதேசி மற்றும் தற்சாா்பு இந்தியாவுக்கான உணா்வு. நாடு சுதந்திரமடைந்த பின் காதியை காங்கிரஸ் மறந்துவிட்டது. நாட்டை பல்லாண்டுகளாக ஆட்சி செய்த அக்கட்சி, காதியை ஊக்குவிக்க எதுவும் செய்யவில்லை. ஆனால், காதிக்கு புத்துயிரூட்ட உறுதியேற்ற பிரதமா் மோடி, பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டாா். அதன் பயனாக, காதி மற்றும் கிராமத் தொழில் ஆணையத்தின் வருவாய் ரூ.33,000 கோடியில் இருந்து ரூ.1.70 லட்சம் கோடியாக உயா்ந்துள்ளது. தற்சாா்பு, சுதேசி முன்னெடுப்புகள், கிராமப்புற மக்களுக்கு மிகுந்த பலனளிக்கும். 2047-ஆம் ஆண்டுக்குள் வளா்ந்த இந்தியா இலக்கை எட்டுவதில் காதிக்கும் முக்கிய பங்கு உள்ளது’ என்றாா்.