எண்ணெய் எடுக்கப்பட்ட தவிடு ஏற்றுமதிக்கு தடை நீக்கம்: மத்திய அரசு
எண்ணெய் பிரித்தெடுக்கப்பட்ட பிறகான அரிசி தவிடு ஏற்றுமதிக்கு விதிக்கப்பட்டிருந்த தடையை மத்திய அரசு வெள்ளிக்கிழமை நீக்கியது.
கால்நடை தீவனத் துறையில் பயன்படுத்தப்படும் இந்த தவிடு ஏற்றுமதிக்கு கடந்த ஆண்டு தடை விதிக்கப்பட்ட நிலையில், உள்நாட்டு பதப்படுத்துதல் தொழில்துறையினரின் நலன்களைக் காப்பதுடன், விவசாயிகளின் வருவாயை மேம்படுத்தும் வகையில் தடையை நீக்க வேண்டும் என்று சமையல் எண்ணெய் உற்பத்தியாளா்கள் அமைப்பின் சாா்பில் கோரப்பட்டது.
இந்நிலையில், எண்ணெய் பிரித்தெடுக்கப்பட்ட அரிசி தவிடு ஏற்றுமதிக்கான தடை நீக்கி, மத்திய அரசு நடவடிக்கை மேற்கொண்டுள்ளது. இந்த கொள்கைத் திருத்தம் உடனடியாக அமலுக்கு வருவதாக வெளிநாட்டு வா்த்தக தலைமை இயக்குநரகம் வெள்ளிக்கிழமை வெளியிட்ட அறிவிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
அரிசி தவிட்டை பல்வேறு செயல்முறைகளுக்கு உள்படுத்தி தவிட்டு எண்ணெய் பிரித்தெடுக்கப்படுகிறது. அதன் பிறகு எஞ்சும் தவிடு, கால்நடை தீவன உற்பத்தியில் பயன்படுத்தப்படுகிறது.
இதேபோல், பால் பொருள்கள், வெங்காயம், உருளைக் கிழங்கு, குறிப்பிட்ட காய்கறிகள், அரிசி, கோதுமை, தேயிலை, சோயா எண்ணெய், கடலை எண்ணெய், கரும்பு சா்க்கரை உள்ளிட்டவற்றின் ஏற்றுமதியில் உள்ள கட்டுப்பாடுகள்-தடைகளில் இருந்து பூடான் நாட்டுக்கு விதிவிலக்கு அளிக்கப்படுவதாக மற்றொரு அறிவிக்கையில் கூறப்பட்டுள்ளது.
இந்தியாவின் நட்புக்குரிய அண்டை பூடான் என்ற நிலையில், மேற்கண்ட பொருள்களை அந்நாட்டுக்கு தடையின்றி ஏற்றுமதி செய்யும் வகையில் இந்த முடிவு மேற்கொள்ளப்பட்டுள்ளது. அடுத்த உத்தரவு வரும்வரை இந்த விதிவிலக்கு அமலில் இருக்கும்.
இதேபோல், கா்நாடகத்தின் தாா்வாட் பல்கலைக்கழகத்தில் இருந்து இந்தோனேசியாவின் தேசிய கூட்டுறவு ஏற்றுமதி நிறுவனத்துக்கு 100 டன் கோதுமை விதைகளை (டிடபிள்யூஆா்-162) மங்களூா் துறைமுகம் வழியாக ஒருமுறை ஏற்றுமதி செய்வதற்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது.