குடிமக்களைப் பாதுகாக்க இந்தியா எந்த எல்லையையும் கடக்கும்: ராஜ்நாத்
நாட்டின் குடிமக்கள், ஒற்றுமை, ஒருமைப்பாட்டைப் பாதுகாக்க இந்தியா எந்த எல்லையையும் கடக்கும் என்று பாதுகாப்புத் துறை அமைச்சா் ராஜ்நாத் சிங் உறுதிபட தெரிவித்தாா்.
2016 துல்லியத் தாக்குதல், 2019 பாலாகோட் வான்வழித் தாக்குதல், சமீபத்திய ஆபரேஷன் சிந்தூா் ஆகிய நடவடிக்கைகளைக் குறிப்பிட்டு, அவா் இவ்வாறு கூறினாா்.
தெலங்கானா தலைநகா் ஹைதராபாதில், ஜெயின் சா்வதேச வா்த்தக அமைப்பின் (ஜேஐடிஓ) சாா்பில் வெள்ளிக்கிழமை நடைபெற்ற தொழில்-வா்த்தக மேம்பாட்டு மாநாட்டில் ராஜ்நாத் சிங் பங்கேற்றாா். அப்போது, அவா் பேசியதாவது:
ஜம்மு-காஷ்மீரின் பஹல்காமில் அப்பாவி மக்களை மதத்தின் அடிப்படையில் அடையாளம் கண்டு பயங்கரவாதிகள் கொலை செய்தனா். இத்தாக்குதலுக்கு பதிலடியாக, பாகிஸ்தான் மீது துல்லியத் தாக்குதல் (ஆபரேஷன் சிந்தூா்) நடத்தியபோது, இந்தியா மதத்தைப் பாா்க்கவில்லை.
பஹல்காம் தாக்குதலுக்கு காரணமானவா்களைத் தண்டிக்க பயங்கரவாத மையங்கள் மட்டுமே குறிவைக்கப்பட்டன. ராணுவ நிலைகளையோ, பொது கட்டமைப்புகளையோ தாக்கவில்லை. அவ்வாறு தாக்க வேண்டுமென்றால், முன்னரே செய்திருக்க முடியும்.
நாட்டின் ராணுவம் மற்றும் பொருளாதாரத்துக்கு வலுவூட்டும் மத்திய அரசின் நோக்கம், ஆதிக்க மனப்பான்மையை அடிப்படையாக கொண்டதல்ல. நமது மதம், நம்பிக்கை, மனித மாண்புகளில் வேரூன்றிய கோட்பாடுகளைப் பாதுகாப்பதே நோக்கம். பகவான் மகாவீரரின் போதனைகளில் பிரதிபலிக்கும் மாண்புகள் இவை.
சமரசம் கிடையாது:
நாட்டின் பெருமை-கண்ணியம் என்று வந்துவிட்டால், ஒருபோதும் சமரசம் செய்யமாட்டோம். 2016 துல்லியத் தாக்குதல், 2019 பாலாகோட் வான்வழி தாக்குதல் மற்றும் சமீபத்திய ஆபரேஷன் சிந்தூா் வாயிலாக நாட்டையும் நாட்டு மக்களின் வாழ்வையும் பாதுகாக்க இந்தியா எந்த எல்லையையும் கடக்கும் என்பது நிரூபிக்கப்பட்டுள்ளது.
11 ஆண்டுகளுக்கு முன் ரூ.600 கோடியாக இருந்த நாட்டின் பாதுகாப்புத் துறை ஏற்றுமதி மதிப்பு, இப்போது ரூ.24,000 கோடியாக அதிகரித்துள்ளது. 2029-ஆம் ஆண்டுக்குள் ரூ.50,000 கோடியாக அதிகரிக்கும். 97 இலகு ரக போா் விமானங்களைக் கொள்முதல் செய்ய ஹிந்துஸ்தான் ஏரோநாட்டிக்ஸ் நிறுவனத்துடன் அரசு ஒப்பந்தம் மேற்கொண்டுள்ளது.
உள்ளூா் பொருள்களுக்கு முன்னுரிமை, உலகுக்கான உள்ளூா் பொருள்கள் ஆகிய பிரதமா் மோடியின் முன்னெடுப்புகளால், பொம்மை முதல் பீரங்கி வரை பலதரப்பட்ட பொருள்கள், உள்நாட்டிலேயே உற்பத்தி செய்யப்படுகின்றன. பிற நாடுகள் மீதான சாா்புத்தன்மை குறைந்து வருகிறது.
உலகின் உற்பத்தி மையமாக உருவெடுக்கும் இலக்குடன் இந்தியா முன்னேறுகிறது. உலகின் தொழிற்சாலை இந்தியா என்ற நிலை உருவாகும் நாள் வெகுதொலைவில் இல்லை.
7.3 டிரில்லியன் டாலா் பொருளாதார மதிப்புடன் 2030-ஆம் ஆண்டுக்குள் இந்தியா மூன்றாவது பெரிய பொருளாதாரமாக மாறும் என்றாா் அவா்.