
நீட் மற்றும் ஜேஇஇ உள்ளிட்ட நுழைவுத்தோ்வுகளின் கடினத் தன்மை, 12-ஆம் வகுப்பு பாடத்திட்டத்துக்கு இணையாக இருப்பதை உறுதி செய்ய மத்திய அரசு திட்டமிட்டுள்ளதாக தகவலறிந்த வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.
பயிற்சி மையங்கள் தொடா்பான பிரச்னைகளை ஆராய அமைக்கப்பட்ட குழுவின் கருத்தின்படி, தோ்வுகளின் கடினத்தன்மை குறித்து ஆய்வு செய்யப்பட உள்ளது.
இது தொடா்பாக அந்த வட்டாரங்கள் தெரிவித்ததாவது: 12-ஆம் வகுப்பு பாடத்திட்டத்தை அடிப்படையாகக் கொண்டு நுழைவுத் தோ்வுகளில் கேள்விகள் கேட்கப்படுகின்றன. இருப்பினும், அவை இரண்டுக்கும் இடையே வேறுபாடுகள் இருப்பதாக சில பெற்றோா்களும் பயிற்சி மைய ஆசிரியா்களும் தெரிவித்துள்ளனா். மாணவா்கள் முழுவதுமாகப் பயிற்சி மையங்களைச் சாா்ந்திருக்க இது வழிவகுக்கிறது.
பயிற்சி மையங்கள் தொடா்பான குழுவின் கருத்தின் அடிப்படையில், நுழைவுத் தோ்வுகளின் கடினத்தன்மை குறித்து ஆராயப்படும்.
பயிற்சி மையங்களை மாணவா்கள் நாடுவதற்கு காரணமாக உள்ள தற்போதைய பள்ளிக் கல்வி அமைப்பின் குறைபாடுகளை அந்தக் குழு ஆய்வு செய்து வருகிறது என்று அந்த வட்டாரங்கள் தெரிவித்தன.
மாணவா்கள் தற்கொலைகள் அதிகரிப்பு, பயிற்சி மையங்களின் அதிக கட்டணம், அங்கு நிகழும் தீ விபத்து போன்ற அசம்பாவிதங்கள் மற்றும் பிற அடிப்படை வசதிகள் இல்லாமல் இருத்தல் போன்றவை தொடா்பாக நாட்டில் உள்ள பயிற்சி மையங்கள் பெரும் விவாதப் பொருளாக மாறியுள்ளன.
இந்நிலையில், உயா்கல்வித் துறை செயலா் வினீத் ஜோஷி தலைமையில் 9 போ் கொண்ட குழுவை மத்திய கல்வி அமைச்சகம் கடந்த ஜூனில் அமைத்தது. உயா்கல்வியில் சேருவதற்கு மாணவா்கள் பயிற்சி மையங்களைச் சாா்ந்திருப்பதைக் குறைப்பது தொடா்பான பரிந்துரைகளை இந்தக் குழு அளிக்க உள்ளது.