
பெங்களூருவில் புகழ்பெற்ற பத்திரிகையாளரும் எழுத்தாளருமான டி.ஜே.எஸ். ஜார்ஜ் வயது மூப்பு மற்றும் உடல்நலக் குறைவு காரணமாக காலமானார். அவருக்கு வயது 97.
கேரளத்தில் 1928 ஆம் ஆண்டு மாஜிஸ்திரேட் தய்யில் தாமஸ் ஜேக்கப் மற்றும் சாச்சியம்மா இருவருக்கும் மகனாகப் பிறந்த ஜார்ஜ், பத்திரிகையாளராவதற்கு முன் மெட்ராஸ் கிறிஸ்துவக் கல்லூரியில் இளங்கலை ஆங்கிலத்தில் பட்டம் பெற்றவர்.
தய்யில் ஜேக்கப் சோனி ஜார்ஜ் என்று புகழப்பட்ட டி.ஜே.எஸ். ஜார்ஜ், 1950 ஆம் ஆண்டு அப்போதைய பாம்பேயில் தி ஃப்ரீ பிரெஸ் ஜர்னலில் பத்திரிகையாளராக தன்னுடைய பயணத்தைத் தொடங்கினார்.
2022 ஆம் ஆண்டில் தன்னுடைய 93 ஆம் வயது வரை இதழியல் துறையில் பணியாற்றிய ஜார்ஜ், ‘தி நியூ இந்தியன் எக்ஸ்பிரஸ்’ பத்திரிகையின் தலையங்க கட்டுரையாளாராகப் பணியாற்றினார்.
2022 ஆம் ஆண்டு ஜூன் 12 ஆம் தேதி வரை தி நியூ இந்தியன் எக்ஸ்பிரஸ் உடனான 25 ஆண்டுகால பயணத்தில் இவர் 1300 கட்டுரைகளை எழுதியுள்ளார்.
பெரும்பாலும் நையாண்டித் தனமாகவும் கிண்டல் நிறைந்த எழுத்துகளுக்குப் பெயர் பெற்றவரான ஜார்ஜ், கேரளத்தில் பிறந்திருந்தாலும், தன்னுடைய பெரும்பால காலத்தை பெங்களூருவில் கழித்துள்ளார்.
ஹாங் காங்கில் இருந்து வெளியான ஏசியாவீக் பத்திரிகையிலும், சர்ச்லைட், ஃபார் ஈஸ்டன் எக்கனாமிக் வீக்ஸ் உள்ளிட்ட பத்திரிகைகளிலும் பணியாற்றியுள்ளார்.
2011 ஆம் ஆண்டு இலக்கியம் மற்றும் கல்விக்கு இவர் ஆற்றிய தொண்டுக்கு பத்மபூஷண் விருது வழங்கப்பட்டது.
முன்னதாக, 1965 ஆம் ஆண்டு சர்ச்லைட் பத்திரிகையில் பணியாற்றியபோது அப்போதைய பிகார் முதல்வர் கேபி ஷாகேவுக்கு எதிராக சர்ச்சையான கட்டுரை வெளியிட்டு, தேசத்துரோகக் குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.