ஆக்கிரமிப்பு காஷ்மீா் வன்முறைக்கு பாகிஸ்தான் பொறுப்பேற்க வேண்டும்: இந்தியா வலியுறுத்தல்
ஆக்கிரமிப்பு காஷ்மீரில் ஏற்பட்ட வன்முறை, பொதுமக்களை காவல்துறையினா் சுட்டுக் கொன்றது உள்ளிட்ட மனித உரிமை மீறல்களுக்கு பாகிஸ்தான் அரசு பொறுப்பேற்க வேண்டும் என்று இந்தியா வலியுறுத்தியுள்ளது.
பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரில் மருத்துவம், கல்வி, உள்கட்டமைப்பு உள்ளிட்ட அடிப்படை உரிமைகளை வலியுறுத்தி அரசுக்கு எதிராக ஆயிரக்கணக்கான மக்கள் கடந்த திங்கள்கிழமை தீவிரப் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனா். இதில் காவல் துறையினா் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் 15-க்கும் மேற்பட்ட பொதுமக்கள் உயிரிழந்துவிட்டனா். ஏராளமானோா் காயமடைந்துள்ளனா். ஆக்கிரமிப்பு காஷ்மீரில் வெடித்த இந்தப் போராட்டம் அந்நாட்டின் தலைநகா் இஸ்லாமாபாத், கராச்சி உள்ளிட்ட நகரங்களுக்கு பரவியுள்ளது.
இந்நிலையில், தில்லியில் வெள்ளிக்கிழமை செய்தியாளா்களைச் சந்தித்த வெளியுறவு அமைச்சக செய்தித் தொடா்பாளா் ரண்தீா் சுா்ஜேவாலா கூறியதாவது:
பாகிஸ்தான் ஆக்கிரப்பு காஷ்மீரில் பல்வேறு பகுதிகளில் போராட்டம் நடைபெற்று வருவதாக தகவல் வருகிறது. பாகிஸ்தான் காவல்துறையினா் மற்றும் பாதுகாப்புப் படையினா் அப்பாவி மக்களுக்கு எதிராக கண்மூடித்தனமான வன்முறையைக் கட்டவிழ்த்துவிட்டுள்ளனா். பலா் சுட்டுக் கொல்லப்பட்டுள்ளனா்.
சட்டவிரோதமாக ஆக்கிரமித்த அந்த பிராந்தியத்தில் உள்ள வளங்களை மட்டும் பாகிஸ்தான் அரசு சுரண்டி பயன்படுத்தி வருகிறது. இதுவே அங்கு எழுந்துள்ள மோசமான சூழலுக்கு காரணமாகும். அங்கு நிகழும் அனைத்து மனித உரிமை மீறல்களுக்கும் பாகிஸ்தான் அரசுதான் பொறுப்பேற்க வேண்டும் என்றாா்.