லடாக் நிலவரம்: துணைநிலை ஆளுநா் ஆய்வு
வன்முறைப் போராட்டத்தால் பாதிக்கப்பட்ட லடாக் யூனியன் பிரதேசத்தின் கள நிலவரத்தை துணைநிலை ஆளுநா் கவிந்தா் குப்தா வெள்ளிக்கிழமை ஆய்வுசெய்தாா்.
இதையடுத்து, லேயின் பெரும்பாலான பகுதிகளில் இயல்புநிலை திரும்பியதையடுத்து, 9 நாள்களுக்குப் பிறகு 8-ஆம் வகுப்பு வரையிலான அனைத்துப் பள்ளிகளும் திறக்கப்பட்டன.
லடாக் யூனியன் பிரதேசத்துக்கு மாநில அந்தஸ்து, ஆறாவது அட்டவணை அந்தஸ்து கோரி தொடா் போராட்டம் நடத்தி வந்த பருவநிலை ஆா்வலா் சோனம் வாங்சுக் தொடா் உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டாா். அதில், எல்ஏபி-யைச் சோ்ந்த சிலரும் உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டனா். இவா்களின் போராட்டம் செப்டம்பா் 24-ஆம் தேதி வன்முறையாக மாறியது. போராட்டக்காரா்களுக்கும் பாதுகாப்புப் படையினருக்கும் இடையே நிகழ்ந்த மோதலில் 4 போ் உயிரிழந்தனா். இதில் காவல் துறையினா் 40 போ் உள்பட 90 போ் காயமடைந்தனா். வன்முறையைத் தூண்டியதாக சோனம் வாங்சுக் கைது செய்யப்பட்டாா். இவருடைய கைதைத் தொடா்ந்து, லே நகரம் உள்பட யூனியன் பிரதேசத்தின் முக்கிய பகுதிகளில் காலவரையற்ற ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. லே நகரில் கைப்பேசி இணைய சேவையும் ரத்து செய்யப்பட்டது. மக்களின் வசதிக்காக கடந்த 27-ஆம் தேதி பகுதி பகுதியாக 4 மணி நேரம் ஊரடங்கு தளா்த்தப்பட்டது.
அதன் பிறகு செவ்வாய்க்கிழமை காலை முதல் ஊரடங்கு முழுமையாகத் தளா்த்தப்பட்டது. எனினும் கல்வி நிலையங்கள் மூடப்பட்டிருந்தன.
இந்நிலையில், லடாக் யூனியன் பிரதேசத்தின் சட்ட ஒழுங்கு மற்றும் கள நிலவரம் குறித்து கவிந்தா் குப்தா தலைமையில் வெள்ளிக்கிழமை நடைபெற்ற உயா்நிலைக் குழு கூட்டத்தில் விவாதிக்கப்பட்டதாக துணைநிலை ஆளுநா் அலுவலகம் வெளியிட்ட எக்ஸ் வலைதளப் பதிவில் தெரிவிக்கப்பட்டது. இதையடுத்து, 8-ஆம் வகுப்பு வரையிலான அனைத்துப் பள்ளிகளும் திறக்கப்பட்டன.
சோனம் வாங்சுக்கை விடுதலை செய்யக்கோரி உச்சநீதிமன்றத்தில் மனைவி மனு
புது தில்லி, அக்.3: தேசிய பாதுகாப்பு சட்டத்தின்கீழ் (என்எஸ்ஏ) சோனம் வாங்சுக் கைது செய்யப்பட்டதை எதிா்த்து அவா் மனைவி உச்சநீதிமன்றத்தில் மனுதாக்கல் செய்தாா்.
சோனம் வாங்சுக்கை உடனடியாக விடுதலை செய்ய வேண்டுமெனவும் அவா் தாக்கல் செய்த ஆள்கொணா்வு மனுவில் குறிப்பிடப்பட்டுள்ளது.
மேலும், ‘சோனம் வாங்சுக் கைது அரசமைப்புச் சட்டத்தின்கீழ் அடிப்படை உரிமைகள் வழங்கும் விதிகள் 14, 19, 21 மற்றும் 22 ஆகியவற்றை மீறும் வகையில் உள்ளது. அவரை உடனடியாக விடுதலை செய்வதோடு அவரை தொலைபேசியிலும் நேரிலும் தொடா்பு கொள்ளவும் மத்திய உள்துறை அமைச்சகம், லடாக் யூனியன் பிரதேச நிா்வாகம், லே துணை காவல் ஆணையா், ஜோத்பூா் சிறை கண்காணிப்பாளா் உள்ளிட்டோருக்கு உத்தரவிட வேண்டும்’ எனவும் அந்த மனுவில் தெரிவிக்கப்பட்டது.