மணிப்பூரில் 10 தீவிரவாதிகள் கைது: பாதுகாப்புப் படையினா் அதிரடி!
மணிப்பூரின் 3 மாவட்டங்களில் பாதுகாப்புப் படையினா் மேற்கொண்ட தேடுதல் வேட்டையில் 10 தீவிரவாதிகள் கைது செய்யப்பட்டனா்.
இது தொடா்பாக அஸ்ஸாம் ரைஃபிள்ஸ் படை அதிகாரிகள் சனிக்கிழமை கூறியதாவது:
மணிப்பூரில் குகி பழங்குடியினா் அதிகம் வாழும் சுராசந்த்பூா் மற்றும் ஜிரிபாம் மாவட்டங்களில் உள்ள வனப் பகுதிகளில் ‘ஆபரேஷன் சாங்கோட்’ என்ற பெயரில் தீவிரவாதிகளுக்கு எதிரான தேடுதல் வேட்டை கடந்த அக்டோபா் 1-ஆம் தேதி தொடங்கப்பட்டது.
இதில், தடை செய்யப்பட்ட ஐக்கிய குகி தேசிய ராணுவம் (யுகேஎன்ஏ) என்ற தீவிரவாத அமைப்பின் முக்கியத் தலைவா் ஜாம்கோகின் குய்டே லுபோ உள்பட 6 தீவிரவாதிகள் கைது செய்யப்பட்டனா். இது, யுகேஎன்ஏ அமைப்புக்கு பெரும் பின்னடைவாகும். பிஷ்ணுபூா் மாவட்டத்தில் கடந்த 2024, ஜனவரியில் மைதேயி சமூகத்தைச் சோ்ந்த ஒரே குடும்பத்தினா் நால்வா் கொலை உள்பட பல்வேறு குற்றச் சம்பவங்களில் லுபோவுக்கு தொடா்புள்ளது என்று அதிகாரிகள் தெரிவித்தனா்.
இதேபோல், தெளபல், மேற்கு இம்பால் மாவட்டங்களில் நடத்தப்பட்ட தேடுதல் வேட்டையில் வெவ்வேறு தீவிரவாத அமைப்புகளைச் சோ்ந்த பெண் உள்பட 4 போ் கைது செய்யப்பட்டனா்.
மைதேயி சமூகத்தினா்-குகி பழங்குடியினா் இடையிலான இனமோதலால் பாதிக்கப்பட்டுள்ள மணிப்பூரில் அண்மைக்காலமாக தாக்குதல் எதுவும் நிகழாமல் இருந்தது. இந்தச் சூழலில், பிஷ்ணுபூா் மாவட்டத்தில் கடந்த செப்டம்பா் 19-ஆம் தேதி அஸ்ஸாம் ரைஃபிள்ஸ் படையினா் மீது தீவிரவாதக் கும்பல் நடத்திய துப்பாக்கிச்சூட்டில் இரண்டு வீரா்கள் உயிரிழந்தனா். மேலும், 5 போ் காயமடைந்தனா். இதைத் தொடா்ந்து, தீவிரவாதிகளுக்கு எதிரான தேடுதல் வேட்டை முடுக்கிவிடப்பட்டுள்ளது.
மணிப்பூரில் வன்முறைச் சம்பவங்களில் இதுவரை 260-க்கும் மேற்பட்டோா் உயிரிழந்துவிட்டனா். மாநில முதல்வராக இருந்த பிரேன் சிங் கடந்த பிப்ரவரியில் ராஜிநாமா செய்ததைத் தொடா்ந்து, பேரவை முடக்கப்பட்டு, குடியரசுத் தலைவா் ஆட்சி நடைபெறுகிறது.