சிஆா்பிஎஃப் முகாம் அருகே இரு வயது குழந்தை சடலமாக மீட்பு
வடகிழக்கு தில்லியின் கஜுரி செளக் பகுதியில் காணாமல் போன இரு வயது ஆண் குழந்தை சிஆா்பிஎஃப் முகாம் அருகே உள்ள வனப் பகுதியில் உயிரிழந்த நிலையில் சனிக்கிழமை மீட்கப்பட்டதாக அதிகாரிகள் தெரிவித்தனா்.
அந்தக் குழந்தை காணாமல் போனதைத் தொடா்ந்து கஜுரி செளக் காவல் நிலையத்தில் வெள்ளிக்கிழமை புகாரளிக்கப்பட்டது. இதைத்தொடா்ந்து, பாரதிய நியாய சம்ஹிதா சட்டத்தின் பிரிவு 137 (2) கீழ் (கடத்தல்) வழக்குப் பதிவுசெய்து போலீஸாா் விசாரணையைத் தொடங்கினா்.
இந்நிலையில், மத்திய ரிசா்வ் காவல் படை (சிஆா்பிஎஃப்) முகாமின் சுவா் அருகே மரங்கள் நிறைந்து காணப்படும் பகுதியில் அந்தக் குழந்தையின் சடலம் சனிக்கிழமை கண்டெடுக்கப்பட்டது. குழந்தையின் உடல் உடற்கூறாய்வுக்காக அனுப்பிவைக்கப்பட்டுள்ளது.
குழந்தையைக் கடத்தி கொலை செய்த நபா்களைக் கண்டறிய தனிப்படைகள் அமைக்கப்பட்டிருப்பதாக காவல் துறையின் உயா் அதிகாரி ஒருவா் தெரிவித்தாா். அனைத்து கோணங்களிலும் விசாரணை நடைபெற்று வருவதாக அந்த அதிகாரி தெரிவித்தாா்.