அரசு விருந்தினர் மாளிகையாக மாறுகிறதா ஷீஷ் மஹால்!
தில்லி முதல்வராக இருந்தபோது கேஜரிவால் வசித்த பங்களாவை உணவகம் கொண்ட அரசு விருந்தினர் மாளிகையாக மாற்றத் தில்லி அரசு திட்டமிட்டுள்ளதாக மூத்த அரசு அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.
2015 முதல் ஆம் ஆத்மி தில்லியில் ஆட்சி அமைத்ததிலிருந்து கடந்தாண்டு செப்டம்பர் முதல்வர் பதவியிலிருந்து விலகும் வரை "ஷீஷ் மஹால்" என்று பாஜகவால் முத்திரை குத்தப்பட்ட சிவில் லைன்ஸ் பகுதியில் உள்ள ஃபிளாக்ஸ்டாஃப் சாலை பங்களாவில் கேஜரிவால் வசித்து வந்தார். தில்லியின் முதல்வராக இருந்தபோது அரவிந்த் கேஜரிவால் வாழ்ந்து வந்த வீட்டைப் பல கோடி ரூபாய் செலவில் மேம்படுத்தியதாகவும், அதிக விலையுயர்ந்த ஆடம்பர பொருள்கள் பயன்படுத்தியதாகவும் பாஜக குற்றம் சாட்டியது.
இந்த நிலையில், சிவில் லைன்ஸ் பகுதியில் உள்ள ஷீஷ் மஹால் பங்களாவில், பிற மாநில பவன்களின் உள்ளதைப் போல் பாரம்பரிய உணவு வகைகளை வழங்கும் உணவகம் அமைக்க அரசு திட்டமிட்டுள்ளது. மற்ற மாநில விருந்தினர் மாளிகைகளில் உள்ளதுபோன்று வாகனம் நிறுத்துமிடம், காத்திருப்பு அறை மற்றும் பிற வசதிகள் கட்டுப்படும்.
மேலும் கூட்டங்கள், பயிற்சிப் பட்டறைகளுக்கு வருகைதரும் அதிகாரிகள், அமைச்சர்கள் தங்கி அறைகளுக்குப் பணம் செலுத்தும் வசதி போன்றவை இங்கும் பின்பற்றப்படும். இந்தத் திட்டத்திற்கான இறுதி ஒப்புதல் உயர் அதிகாரிகளால் இன்னும் வழங்கப்படவில்லை என்று அந்த அதிகாரி கூறினார்.
தற்போது ஷீஷ் மஹால் பங்களாவை சுமார் 10 பேர் கொண்ட ஊழியர்கள் ஏற்கெனவே அங்குப் பராமரித்து வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.
முன்னதாக, நிகழ்ச்சி ஒன்றில் கலந்துகொண்ட முதல்வா் ரேகா குப்தா ஷீஷ் மஹால் புனரமைப்புக்காக வீணடிக்கப்பட்ட பணம் தில்லி கருவூலத்திற்கு திருப்பிச் செலுத்த நடவடிக்கை எடுக்கப்படும் என்று கூறினார்.
The Delhi government is planning to convert the bungalow where Kejriwal lived when he was the Chief Minister of Delhi into a government guest house with a restaurant.
இதையும் படிக்க: குஜராத் பாஜக தலைவராக ஜெகதீஷ் விஸ்வகர்மா நியமனம்!
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.