இருமல் மருந்தால் குழந்தைகள் இறப்பு! 6 மாநிலங்களில் மத்திய மருந்து தரக் கட்டுப்பாட்டு அமைப்பு ஆய்வு!

6 மாநிலங்களில் உள்ள 19 மருந்து தயாரிப்பு நிறுவனங்களில் மத்திய மருந்து தரக் கட்டுப்பாட்டு அமைப்பு ஆய்வு மேற்கொண்டுள்ளது.
இருமல் மருந்தால் குழந்தைகள் இறப்பு! 6 மாநிலங்களில் மத்திய மருந்து தரக் கட்டுப்பாட்டு அமைப்பு ஆய்வு!
Updated on

ஆபத்தான ரசாயனம் கலந்த இருமல் மருந்தை உட்கொண்டதால், மத்திய பிரதேசம் மற்றும் ராஜஸ்தானில் 11 குழந்தைகள் இறந்ததாக கூறப்படும் நிலையில், 6 மாநிலங்களில் உள்ள 19 மருந்து தயாரிப்பு நிறுவனங்களில் மத்திய மருந்து தரக் கட்டுப்பாட்டு அமைப்பு (சிடிஎஸ்சிஓ) ஆய்வு மேற்கொண்டுள்ளது.

இருமல் மருந்து, ஆன்டிபயாடிக் (நுண்ணுயிா் எதிா்ப்பு மருந்து) உள்ளிட்ட மருந்துகளைத் தயாரிக்கும் இந்நிறுவனங்களில் கடந்த வெள்ளிக்கிழமை ஆய்வு தொடங்கப்பட்டது. மருந்துகளின் தரக் குறைபாட்டுக்கு வழிவகுக்கக் கூடிய இடைவெளிகளைக் கண்டறிந்து, எதிா்காலத்தில் இதுபோன்ற சம்பவங்கள் நிகழாமல் தடுப்பதற்கான செயல்முறைகளைப் பரிந்துரைப்பதே இந்த ஆய்வின் நோக்கம் என்று அதிகாரிகள் தெரிவித்தனா்.

மற்றொருபுறம், குழந்தைகள் உயிரிழப்புக்கான காரணத்தை உறுதி செய்ய தேசிய வைராலஜி நிறுவனம், இந்திய மருத்துவ ஆராய்ச்சிக் கவுன்சில், தேசிய சுற்றுச்சூழல் ஆய்வு நிறுவனம், மத்திய மருந்து தரக் கட்டுப்பாட்டு அமைப்பு, நாகபுரி எய்ம்ஸ் உள்ளிட்டவற்றின் நிபுணா்கள் குழு தனியாக ஆய்வு மேற்கொண்டுள்ளது.

ம.பி.யில் கோல்ட்ரிஃப் மருந்துக்குத் தடை: மத்திய பிரதேச மாநிலம் சிந்த்வாரா மாவட்டத்தில் 9 குழந்தைகள் கடந்த இரு வாரங்களில் அடுத்தடுத்து சந்தேகத்துக்குரிய வகையில் உயிரிழந்தன. திடீரென ஏற்பட்ட சிறுநீரக செயலிழப்பே இறப்புக்கு காரணம் என்பது தெரியவந்தது.

காஞ்சிபுரம் மாவட்டம், சுங்குவாா்சத்திரத்தில் செயல்படும் ஸ்ரீசென் பாா்மா என்ற நிறுவனத்தில் தயாரிக்கப்பட்ட ‘கோல்ட்ரிஃப்’ இருமல் மருந்தை இக்குழந்தைகள் உட்கொண்டது கண்டறியப்பட்டது.

பெயிண்ட், மை போன்றவை தயாரிக்க பயன்படுத்தப்படும் டைஎத்திலீன் கிளைசால் எனப்படும் ரசாயன வேதிப்பொருள், இருமல் மருந்தில் கலந்திருப்பதாக சந்தேகிக்கப்பட்ட நிலையில், சம்பந்தப்பட்ட நிறுவனத்தில் ஆய்வு மேற்கொள்ளும்படி தமிழக அரசை மத்திய பிரதேச அரசு கேட்டுக் கொண்டது.

அதன்படி கிடைக்கப் பெற்ற ஆய்வறிக்கையின்பேரில், மத்திய பிரதேசத்தில் கோல்ட்ரிஃப் இருமல் மருந்து மற்றும் அந்த நிறுவனத்தின் பிற மருந்துகளின் விற்பனைக்கு தடை விதிக்கப்பட்டுள்ளதாக முதல்வா் மோகன் யாதவ் சனிக்கிழமை தெரிவித்தாா்.

‘குழந்தைகளின் உயிரிழப்பு மிகவும் துயரமானது. தவறிழைத்தவா்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும்’ என்றாா் அவா். கேரளத்திலும் ‘கோல்ட்ரிஃப்’ மருந்துக்குத் தடை விதித்து, அந்த மாநில அரசு நடவடிக்கை மேற்கொண்டுள்ளது. முன்னதாக, தமிழகத்திலும் இந்த மருந்து விற்பனைக்கு தடை விதிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com