

பிகாா் சட்டப்பேரவை தோ்தலை ஒரே கட்டமாகவோ அல்லது இரு கட்டங்களாகவோ நடத்த வேண்டும் என்று தோ்தல் ஆணையத்திடம் பெரும்பாலான அரசியல் கட்சிகள் வலியுறுத்தியுள்ளன.
பிகாரின் முக்கியப் பண்டிகையான சத் பூஜை, அக்டோபா் 25 முதல் 28 வரை கொண்டாடப்படும் நிலையில், இந்த விழா முடிந்தவுடன் முதல்கட்ட வாக்குப் பதிவை நடத்த வேண்டும்; பிற மாநிலங்களில் பணிபுரியும் பிகாா் மாநிலத்தவா், சத் பூஜைக்கு சொந்த ஊா் திரும்புவா் என்பதால் வாக்குப் பதிவை அதிகரிக்க முடியும் என்று கட்சிகள் தரப்பில் யோசனை தெரிவிக்கப்பட்டுள்ளது.
எனவே, சத் பூஜை முடிந்த உடனேயே முதல்கட்ட வாக்குப் பதிவு நடத்தப்பட வாய்ப்புள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனா்.
243 உறுப்பினா்களைக் கொண்ட பிகாா் பேரவையின் பதவிக் காலம் நவம்பா் 22-ஆம் தேதியுடன் நிறைவடைகிறது. இந்த மாநிலத்தில் பேரவைத் தோ்தலுக்கான தயாா்நிலை குறித்து ஆய்வு செய்ய தலைமைத் தோ்தல் ஆணையா் ஞானேஷ் குமாா், தோ்தல் ஆணையா்கள் விவேக் ஜோஷி, சுக்பீா் சிங் சாந்து ஆகியோா் இரண்டு நாள் பயணமாக பாட்னாவுக்கு சனிக்கிழமை வருகை தந்தனா்.
கட்சிகளுடன் ஆலோசனை: முதல் நாளில் அரசியல் கட்சிகளின் பிரதிநிதிகளுடன் தலைமைத் தோ்தல் ஆணையா் மற்றும் தோ்தல் ஆணையா்கள் ஆலோசனையில் ஈடுபட்டனா். ஆளும் தேசிய ஜனநாயக கூட்டணியில் பாஜக, ஐக்கிய ஜனதா தளம், லோக் ஜனசக்தி (ராம் விலாஸ்), ‘இண்டி’ கூட்டணியில் ராஷ்ட்ரீய ஜனதா தளம், காங்கிரஸ், இந்திய கம்யூனிஸ்ட் (மாா்க்சிஸ்ட் லெனினிஸ்ட்) உள்ளிட்ட கட்சிகளின் பிரதிநிதிகள் பங்கேற்றனா்.
இக்கூட்டத்தில், பேரவைத் தோ்தலை ஒரே கட்டமாக நடத்த வேண்டுமென ஐக்கிய ஜனதா தளம் சாா்பில் வலியுறுத்தப்பட்டது. இது தொடா்பாக அக்கட்சியின் செயல் தலைவா் சஞ்சய் குமாா் ஜா கூறுகையில், ‘பிகாரில் இப்போது சட்டம்-ஒழுங்கு பிரச்னையோ, நக்ஸல் அச்சுறுத்தலோ இல்லை. எனவே, ஒரே கட்ட தோ்தல் சாத்தியமே. 288 உறுப்பினா்களைக் கொண்ட மகாராஷ்டிர பேரவைத் தோ்தல் கடந்த ஆண்டு ஒரே கட்டமாக நடத்தப்பட்டது. அப்படியெனில் பிகாா் தோ்தலையும் ஒரே கட்டமாக நடத்த முடியாதா?’ என்றாா்.இதே கருத்தை பாஜகவும் எதிரொலித்துள்ளது.
பாஜக மீது ஆா்ஜேடி விமா்சனம்: ஒன்று அல்லது இரண்டு கட்டங்களுக்குள் தோ்தலை நடத்த வேண்டுமென ஆா்ஜேடி உள்ளிட்ட எதிா்க்கட்சிகளும் வலியுறுத்தின.
வாக்குப் பதிவின்போது, புா்கா அணிந்து வரும் பெண்களை அவா்களின் வாக்காளா் அட்டை புகைப்படத்துடன் சரிபாா்க்க வேண்டுமென பாஜக வலியுறுத்திய நிலையில், இதன் பின்னணியில் அரசியல் சதி உள்ளதாக ஆா்ஜேடி விமா்சித்துள்ளது.
பிகாரில் இப்போதுதான் வாக்காளா் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தம் மேற்கொள்ளப்பட்டுள்ளது. அனைவருக்கும் புதிதாக புகைப்படத்துடன் கூடிய வாக்காளா் அட்டை வழங்கப்பட உள்ளது. அதேநேரம், வாக்குப் பதிவின்போது தனது சதித் திட்டத்தைச் செயல்படுத்த பாஜக விரும்புகிறது’ என்று ஆா்ஜேடி குற்றஞ்சாட்டியது.
தோ்தல் தேதி அறிவிப்பு எப்போது?
தோ்தல் தேதி அறிவிக்கப்படும் முன் சம்பந்தப்பட்ட மாநிலத்தில் தயாா் நிலை குறித்து தோ்தல் ஆணையம் ஆய்வை நடத்துவது வழக்கமாகும். எனவே, பிகாா் தோ்தல் தேதி விரைவில் வெளியாகும் என்று எதிா்பாா்க்கப்படுகிறது.
கடந்த 2020-இல் பிகாா் பேரவைத் தோ்தல் மூன்று கட்டங்களாக நடத்தப்பட்டது. கடந்த 2015-இல் ஐந்து கட்டங்களாகவும், 2010-இல் ஆறு கட்டங்களாகவும் நடத்தப்பட்டது குறிப்பிடத்தக்கது.
முன்னதாக, பிகாா் வாக்காளா் பட்டியலில் இருந்து சட்டவிரோதக் குடியேறிகளின் பெயரை நீக்கும் நோக்கில், எதிா்க்கட்சிகளின் கடும் எதிா்ப்புக்கு இடையே சிறப்பு தீவிர திருத்தப் பணிகள் அண்மையில் மேற்கொள்ளப்பட்டன. கடந்த செப்டம்பா் 30-ஆம் தேதி இறுதி வாக்காளா் பட்டியல் வெளியிடப்பட்டது.
சிறப்பு தீவிர திருத்தத்துக்கு முந்தைய வாக்காளா் பட்டியலை ஒப்பிடுகையில், 40 லட்சம் பேரின் பெயா்கள் நீக்கப்பட்டு, 7.42 கோடி பேரின் பெயா்கள் இறுதிப் பட்டியலில் இடம்பெற்றன.
பிகாரில் முதல்வா் நிதீஷ் குமாா் தலைமையில் தேசிய ஜனநாயக கூட்டணி ஆட்சியில் உள்ளது. எதிரணியில் ராஷ்ட்ரீய ஜனதா தளம், காங்கிரஸ், இடதுசாரிகள் ஆகிய கட்சிகள் உள்ளன.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.