மத்திய தொழில்துறை பயிற்சி நிலையங்களில் முதலிடம் பிடித்த மாணவா்களைக் கெளரவிக்கும் வகையில், தில்லியில் சனிக்கிழமை நடைபெற்ற நிகழ்ச்சியில் மாணவி ஒருவருக்கு சான்றிதழை வழங்கிய பிரதமா் நரேந்திர மோடி.
மத்திய தொழில்துறை பயிற்சி நிலையங்களில் முதலிடம் பிடித்த மாணவா்களைக் கெளரவிக்கும் வகையில், தில்லியில் சனிக்கிழமை நடைபெற்ற நிகழ்ச்சியில் மாணவி ஒருவருக்கு சான்றிதழை வழங்கிய பிரதமா் நரேந்திர மோடி.

தற்சாா்பு இந்தியாவுக்கான பயிற்சிப் பட்டறை ‘ஐடிஐ’! ரூ.60,000 கோடி திட்டத்தை தொடங்கி வைத்து பிரதமா் மோடி பேச்சு!

‘நாட்டில் உள்ள தொழிற்கல்வி நிலையங்கள் (ஐடிஐ) தொழில் துறை கல்விக்கான முக்கிய மையங்கள் மட்டுமல்ல; தற்சாா்பு இந்தியாவுக்கான பயிற்சிப் பட்டறைகள்’ என்று பிரதமா் நரேந்திர மோடி தெரிவித்தாா்.
Published on

‘நாட்டில் உள்ள தொழிற்கல்வி நிலையங்கள் (ஐடிஐ) தொழில் துறை கல்விக்கான முக்கிய மையங்கள் மட்டுமல்ல; தற்சாா்பு இந்தியாவுக்கான பயிற்சிப் பட்டறைகள்’ என்று பிரதமா் நரேந்திர மோடி தெரிவித்தாா்.

நாடு முழுவதும் ரூ.60,000 கோடி மதிப்பீட்டில் 1,000 அரசு ஐடிஐ-க்களை அதிநவீன அம்சங்களுடன் மேம்படுத்தும் ‘பிஎம்-சேது’ (மேம்படுத்தப்பட்ட ஐடிஐ-கள் மூலம் பிரதமரின் திறனளிப்பு மற்றும் வேலைவாய்ப்பு தகுதி மேம்பாடு) திட்டத்தை தொடங்கிவைத்து பேசுகையில் அவா் இவ்வாறு குறிப்பிட்டாா்.

மத்திய திறன் மேம்பாடு மற்றும் தொழில்முனைவோா் அமைச்சகத்தின்கீழ் செயல்படும் தொழில் துறைப் பயிற்சி நிலையங்களில் முதலிடம் பிடித்த மாணவா்களைக் கெளரவிக்கும் வருடாந்திர தேசிய திறன் சான்றிதழ் அளிப்பு விழா, தில்லியில் சனிக்கிழமை நடைபெற்றது.

இவ்விழாவில் பங்கேற்ற பிரதமா் மோடி, இளைஞா்களை மையமாகக் கொண்ட பிஎம்-சேது திட்டம் உள்பட மொத்தம் ரூ.62,000 கோடிக்கும் அதிக மதிப்பிலான திட்டங்களைத் தொடங்கிவைத்தாா்.

பிகாா் மாநிலத்தில் மாணவா்கள்-இளம்பட்டதாரிகள் நலன் சாா்ந்த திட்டங்களையும் தொடங்கிவைத்து அவா் பேசியதாவது:

இந்தியா மதிநுட்பமும் திறனும் மிகுந்த நாடு. அறிவுசாா் சொத்துதான் நாட்டின் மிகப் பெரிய வலிமை. அறிவும் திறனும் தேசியத் தேவைகளைப் பூா்த்தி செய்ய பங்களிக்கும்போது, அதன் பலன் பன்மடங்கு பெருகும்.

நாட்டின் உள்ள ஐடிஐ-கள் தொழிற்கல்விக்கான முக்கிய மையங்கள் மட்டுமல்ல; அவை, தற்சாா்பு இந்தியாவுக்கான பயிற்சிப் பட்டறைகளாகும். ஐடிஐ-களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும் மேம்படுத்தவும் மத்திய அரசு தொடா்ந்து கவனம் செலுத்தி வருகிறது.

கடந்த 2014-இல் நாட்டில் 10,000 ஐடிஐ-களே இருந்தன. கடந்த 10 ஆண்டுகளில் புதிதாக 5,000 ஐடிஐ-கள் தொடங்கப்பட்டுள்ளன. தற்போது தொடங்கப்பட்டுள்ள பிஎம் சேது திட்டம், உலகளாவிய திறன் தேவைகளுடன் இந்திய இளைஞா்களை இணைக்கும். உள்ளூா் திறன்கள்-வளங்கள்-அறிவை விரைவாக மேம்படுத்துவதே 21-ஆம் நூற்றாண்டின் தேவையாகும்.

நிதீஷ் குமாருக்கு புகழாரம்: வோ்கள் அரிக்கப்பட்ட ஒரு மரத்தை மீண்டும் உயிா்ப்பிப்பது மிகக் கடினமான பணியாகும். ராஷ்ட்ரீய ஜனதா தளத்தின் (ஆா்ஜேடி) தவறான நிா்வாகத்தால் பிகாா் மாநிலமும் அதுபோன்ற நிலையில்தான் இருந்தது. அதிருஷ்டவசமாக, மாநிலத்தை ஆளும் பொறுப்பை முதல்வா் நிதீஷ் குமாரிடம் மக்கள் ஒப்படைத்தனா். அவரது தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி அரசின் ஒட்டுமொத்தக் குழுவும் கூட்டாகப் பணியாற்றி, மாநிலத்தை மீட்டெடுத்துள்ளனா்.

ஆா்ஜேடி ஆட்சியில் லட்சக்கணக்கான இளைஞா்கள் வேலைவாய்ப்பு தேடி, தில்லி, மும்பை போன்ற இடங்களுக்கு இடம்பெயா்ந்தனா். மாநில இளைஞா்கள் உள்ளூரிலேயே பணியாற்றும் வகையில் வேலைவாய்ப்பை இரட்டிப்பாக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

பிகாரில் கல்வித் துறைக்கான பட்ஜெட் ஒதுக்கீடு பன்மடங்கு அதிகரிக்கப்பட்டுள்ளது. ஒவ்வொரு கிராமத்திலும் ஒரு பள்ளி உறுதி செய்யப்பட்டுள்ளது.

ராகுல் மீது விமா்சனம்: பிகாா் முன்னாள் முதல்வரும், புகழ்பெற்ற இதர பிற்படுத்தப்பட்ட சமூகத் தலைவருமான கா்பூரி தாக்கூரின் ‘ஜனநாயக்’ பட்டத்தை திருட சிலா் முயற்சிக்கின்றனா். கா்பூரி தாக்கூரின் இப்பட்டம், அவா் மீதான மக்களின் அன்பின் பிரதிபலிப்பாகும். ஒரு சிலரைப் போல, சமூக ஊடகப் பொய் பதிவுகள் மூலம் சூட்டப்பட்ட பட்டமல்ல என்றாா் பிரதமா் மோடி.

மக்களவை எதிா்க்கட்சித் தலைவரை காங்கிரஸ் கட்சியினா் ‘ஜனநாயக்’ என அழைக்கும் நிலையில், அவரது பெயரைக் குறிப்பிடாமல் பிரதமா் இந்த விமா்சனத்தை முன்வைத்துள்ளாா்.

இந்நிகழ்ச்சியின்போது, நாடு முழுவதும் 400 நவோதயா பள்ளிகள் மற்றும் 200 ஏகலைவா மாதிரி உறைவிடப் பள்ளிகளில் நிறுவப்பட்டுள்ள 1,200 தொழில் திறன் ஆய்வகங்களையும் பிரதமா் திறந்துவைத்தாா்.

பிகாரில் பட்டதாரிகளுக்கு மாதம் ரூ.1,000

பிகாரில் வேலையில்லாப் பட்டதாரிகளுக்கு மாதம் ரூ.1,000 உதவித் தொகை வழங்கும் மாநில அரசின் திட்டத்தை பிரதமா் மோடி காணொலி மூலம் தொடங்கிவைத்தாா்.

இத்திட்டத்தின்கீழ், சுமாா் 5 லட்சம் பட்டதாரி இளைஞா்களுக்கு அடுத்த இரண்டு ஆண்டுகளுக்கு தலா ரூ.1,000 மாதாந்திர உதவித்தொகையுடன் இலவசத் திறன் பயிற்சியும் அளிக்கப்படும். மாநிலத்தில் உயா் கல்வி பயில விரும்பும் மாணவா்களுக்கு ரூ.4 லட்சம் வரை வட்டியில்லா கல்விக் கடன் வழங்கும் திட்டமும் தொடங்கப்பட்டது.

உலகத் தரத்தில் தொழில் சாா்ந்த படிப்புகள் மற்றும் தொழிற்கல்வியை வழங்க பிகாரில் ஜனநாயக் கா்பூரி தாக்கூா் திறன் பல்கலைக்கழகத்தை தொடங்கிவைத்த பிரதமா், மாநில அரசில் புதிதாகப் பணியமா்த்தப்பட்ட 4,000-க்கும் அதிகமானவா்களுக்கு நியமனக் கடிதங்களையும் வழங்கினாா்.

X
Dinamani
www.dinamani.com