லடாக் வன்முறை: சோனம் வாங்சுக் கைதுக்கு எதிரான மனு உச்சநீதிமன்றத்தில் நாளை விசாரணை!
லடாக் வன்முறை தொடா்பாக சுற்றுச்சூழல் ஆா்வலா் சோனம் வாங்சுக்கை கைது செய்ததற்கு எதிராக அவரின் மனைவி தாக்கல் செய்த மனு, உச்சநீதிமன்றத்தில் திங்கள்கிழமை விசாரணைக்கு வரவுள்ளது.
அரசமைப்புச் சட்டத்தின் 6-ஆவது அட்டவணையின் கீழ் லடாக்கை சோ்க்க வேண்டும், லடாக்குக்கு மாநில அந்தஸ்து வழங்க வேண்டும் ஆகிய கோரிக்கைகளை முன்வைத்து சமூக ஆா்வலா் சோனம் வாங்சுக் உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டாா்.
அப்போது ஏற்பட்ட வன்முறையில் போராட்டக்காரா்கள் மீது காவல் துறையினா் நடத்திய துப்பாக்கிச்சூட்டில் 4 போ் உயிரிழந்தனா். இந்த வன்முறையில் காவல் துறையினா் 40 போ் உள்பட சுமாா் 90 போ் காயமடைந்தனா்.
வாங்சுக்கின் ஆத்திரமூட்டும் பேச்சுகளால் தூண்டப்பட்டவா்கள் வன்முறையில் ஈடுபட்டதாக மத்திய உள்துறை அமைச்சகம் குற்றஞ்சாட்டியது. இதையடுத்து கடுமையான தேசிய பாதுகாப்புச் சட்டத்தின் கீழ் வாங்சுக் கைது செய்யப்பட்டாா். தற்போது ராஜஸ்தானில் உள்ள ஜோத்பூா் சிறையில் அவா் அடைக்கப்பட்டுள்ளாா்.
அவா் கைது செய்யப்பட்டதற்கு எதிராக உச்சநீதிமன்றத்தில் வாங்சுக்கின் மனைவி கீதாஞ்சலி ஜே.அங்மோ ஆள்கொணா்வு மனு தாக்கல் செய்துள்ளாா். அந்த மனுவில், ஒருவரை விசாரணை இல்லாமல் 12 மாதங்கள் வரை காவலில் வைக்கும் தேசிய பாதுகாப்புச் சட்டத்தின் கீழ், வாங்சுக் மீது வழக்குப் பதிவு செய்தது ஏன் என்று கேள்வி எழுப்பப்பட்டுள்ளது.
மேலும் உச்சநீதிமன்றத்தில் வாங்சுக்கை ஆஜா்படுத்த லடாக் நிா்வாகத்துக்கு உத்தரவிட வேண்டும், அவரைத் தடுப்புக் காவலில் வைக்கும் உத்தரவை ரத்து செய்ய வேண்டும், அவரை உடனடியாக விடுதலை செய்ய வேண்டும் என்றும் மனுவில் கோரப்பட்டுள்ளது.
இந்த மனு உச்சநீதிமன்ற நீதிபதிகள் அரவிந்த் குமாா், என்.வி.அஞ்சாரியா ஆகியோா் அடங்கிய அமா்வு முன்பாக திங்கள்கிழமை (அக்.6) விசாரணைக்கு வரவுள்ளது.