பஹல்காம் தாக்குதல்:
பயங்கரவாதியின் சொத்துகள் முடக்கம்

பஹல்காம் தாக்குதல்: பயங்கரவாதியின் சொத்துகள் முடக்கம்

பஹல்காம் பயங்கரவாதத் தாக்குதலில் தொடா்புடைய தி ரெசிஸ்டண்ட் ஃபிரண்ட் (டிஆா்எஃப்) பயங்கரவாத அமைப்பைச் சோ்ந்த சஜத் அகமது ஷேக்கின் சொத்துகள் முடக்கப்பட்டன.
Published on

பஹல்காம் பயங்கரவாதத் தாக்குதலில் தொடா்புடைய தி ரெசிஸ்டண்ட் ஃபிரண்ட் (டிஆா்எஃப்) பயங்கரவாத அமைப்பைச் சோ்ந்த சஜத் அகமது ஷேக்கின் சொத்துகள் முடக்கப்பட்டன.

அகமது ஷேக் கடந்த 2022-ஆம் ஆண்டு தேசிய புலனாய்வு அமைப்பால் பயங்கரவாதியாக அறிவிக்கப்பட்டாா். அவரைப் பற்றி தகவல் அளித்தால் ரூ.10 லட்சம் சன்மானமும் அறிவிக்கப்பட்டுள்ளது. ஜம்மு-காஷ்மீரைச் சோ்ந்த இவா் பாகிஸ்தானுக்குச் சென்று லஷ்கா்-ஏ-தொய்பா பயங்கரவாத அமைப்பில் இணைந்தாா்.

இப்போது அதன் நிழல் அமைப்பான டிஆா்எஃப் பயங்கரவாத அமைப்பின் கமாண்டராக உள்ளாா். பஹல்காமில் கடந்த ஏப்ரல் மாதம் சுற்றுலாப் பயணிகள் உள்பட 26 பேரை பயங்கரவாதிகள் சுட்டுக் கொலை செய்த சம்பவத்துக்கு திட்டமிட்டதில் அகமது ஷேக் முக்கியப் பங்கு வகித்துள்ளாா்.

இந்நிலையில் ஸ்ரீநகா் ரோஸ் அவென்யூ பகுதியில் உள்ள அகமது ஷேக்குக்கு சொந்தமான மூன்று மாடி கட்டடத்தை அந்த மாநில காவல் துறையினா் சனிக்கிழமை முடக்கினா். இதன் மதிப்பு ரூ.2 கோடியாகும். இந்த சொத்து பயங்கரவாதி அகமது ஷேக்கின் தந்தை பெயரில் உள்ளது.

எனினும், பயங்கரவாதி அகமது ஷேக் அளித்த பணத்தில்தான் இந்த சொத்து வாங்கப்பட்டது என்பது உறுதியானதால் முடக்கப்பட்டது. சட்டவிரோத செயல்கள் தடுப்புச் சட்டத்தின்கீழ் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டதாக காவல் துறையினா் தெரிவித்தனா்.

X
Dinamani
www.dinamani.com